2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பாப்பரசர் பதவி விலக வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான பாப்பரசர் பிரான்ஸிஸ், முக்கியமான கர்தினால் ஒருவரின் பாலியல் குற்றங்கள் பற்றிப் பல ஆண்டுகளாக அறிந்திருந்தார் எனவும், அதற்காக அவரது பதவியிலிருந்து அவர் விலக வேண்டுமெனவும், வத்திக்கானைச் சேர்ந்த முன்னாள் உயரதிகாரியொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையின் அண்மைக்கால வரலாற்றில், திருச்சபைக்குள்ளிருந்து, இவ்வாறான எதிர்ப்பை, பாப்பரசர் முதன்முறையாக எதிர்கொண்டுள்ளார்.

பேராயர் கார்லோ மரியா விகானோ என்பவரே, இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இவர், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை, ஐக்கிய அமெரிக்காவுக்கான வத்திக்கானின் தூதுவராகவும், அதற்கு முன்னர் 2 ஆண்டுகளாக, வத்திக்கான் நகரத்தின் செயலாளர் நாயகமாகவும் பதவி வகித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் தனது பதவியிலிருந்து விலக வேண்டியேற்பட்ட கர்தினால் தியடோர் மக்கரிக்கின் பாலியல் குற்றங்களை மூடி மறைத்தனர் என, பாதிரியார்கள், அதிகாரிகள் என, ஏராளமானோரின் பெயர்ப் பட்டியலை, பேராயர் விகானோ வெளியிட்டுள்ளார்.

இதில் முக்கியமாக, 2006ஆம் ஆண்டிலேயே, கர்தினால் தியடோர் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து, வத்திக்கானின் உயரதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாப்பரசராக பிரான்ஸிஸ் பதவியேற்றவுடன், 2013ஆம் ஆண்டில், கர்தினால்களின் பாலியல் குற்றங்கள் தொடர்பிலும் கர்தினால் தியடோர் பற்றியும் அவருக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றங்கள் தொடர்பில், கடுமையான நிலைப்பாட்டை ஊடகங்கள் வாயிலாகவும் தனது உரைகள் வாயிலாகவும் பாப்பரசர் பிரான்ஸிஸ் எடுத்துவரும் நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு, முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அதிலும், திருச்சபையில் வெளிப்படைத் தன்மைக்காகப் பாப்பரசர் முன்வைத்துவரும் கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் விகானோ, ஏனையோருக்கான முன்னுதாரணமாக, பாப்பரசர் செயற்பட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், அயர்லாந்திலிருந்து புறப்பட்ட பாப்பரசரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். மாறாக, “ஆவணத்தை நன்றாக வாசித்து, நீங்களே முடிவெடுங்கள்” என்று குறிப்பிட்டார். அத்தோடு, இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஒரு வார்த்தையேனும் கூறப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தன்னைப் பற்றிய குற்றச்சாட்டுகள், ஆதாரமற்றவை எனக் கருதுவதால், அவற்றுக்குப் பதிலளிக்கப் பாப்பரசர் மறுக்கிறார் என்று கருதப்பட்டாலும், அண்மைக்கால வரலாற்றில், திருச்சபைக்குள்ளிலிருந்து பாப்பரசர் ஒருவர் மீது, இவ்வாறான பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், பாப்பரசரின் மௌனம், இன்னும் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .