2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரான்ஸில் பொலிஸார் வேட்டை; வெடித்தது மோதல்

Gopikrishna Kanagalingam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலிருந்து ஏறத்தாழ 10 கிலோ மீற்றர் தூரத்தில்  அமைந்துள்ள புறநகர்ப் பகுதியான சென்ற் டெனிஸில், பிரான்ஸின் விசேட பொலிஸ் பிரிவினர், திடீர் தேடுதல் வேட்டை நடாத்தினர்.

பிரான்ஸ் நேரப்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆரம்பித்த இந்தத் தேடுதல் நடவடிக்கைகள், மாலைவரை நீடித்ததோடு, மொத்தமாக 118 தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, 29 கைதுகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 34 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர், தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது, தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணொருவர் தன்னைத் தானே வெடிக்க வைத்து மரணமடைந்ததோடு, ஆயுததாரியெனச் சந்தேகிக்கப்படும் மேலுமொருவர், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தரப்பில் ஐவர் காயமடைந்ததோடு, பொலிஸ் நாயொன்று மரணமடைந்தது.

பரிஸ் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் ஒன்றான, ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்டு மைதானம், இப்பகுதிக்கு மிக அண்மையிலேயே அமைந்துள்ளமை இதில் குறிப்பிடத்தக்கது.

பரிஸ் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களெனக் கருதப்படும் சந்தேநபர்கள், இப்பகுதியில் ஒழிந்திருந்ததாகக் கிடைத்த தகவலையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கெனவே, இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுப் பெயர் விவரம் வெளியாகியிருந்த சாலா அப்டெஸ்லாம், பெல்ஜியப் பிரஜையான அப்டெல்ஹமிட் அபாவுட் ஆகியோரே, இந்த நடவடிக்கையின் பிரதான இலக்காகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது குறித்த சந்தேகநபர்கள், நடவடிக்கையொன்றில் ஈடுபடத் தயாராகிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், தங்களது நடவடிக்கை, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதன்போது, ஆரம்பத்தில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட, பொலிஸார் சிலர் காயமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, குறைந்தது ஏழு வெடிப்புச் சத்தங்களாவது கேட்டுள்ளதாக, அங்கிருக்கும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றிய பொலிஸார், பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு, சந்தேகநபர்களை நோக்கி முன்னேறியதோடு, இதன்போதே, தற்கொலை அங்கிகளை அணிந்திருந்த பெண், அதை வெடிக்க வைத்து மரணித்தார்.
பரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கவும் அழிக்கவும், பிரான்ஸ் தனது நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தேடுதல்களின் எண்ணிக்கை, 414 ஆகும். அவற்றில், 60 பேர் பொலிஸ் தடுப்புக் காவலிலும் 118 பேர் வீட்டுக் காவலிலும் காணப்படுவதோடு, 75 ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன என, பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் பேர்னாட் கஸ்னெவ் தெரிவித்தார். அத்தோடு, இந்த நடவடிக்கைகள், இன்னமும் தொடருமெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .