2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொங்கோவில் ஆட்சி மாற்றம்; இருந்தும் விமர்சனங்கள்

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அடுத்த ஜனாதிபதியாக, ஃபீலிக்ஸ் ஷிசேகெடி, நேற்று (10) அறிவிக்கப்பட்டார். இதன்மூலமாக, 18 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்நாட்டுத் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளாகவே இத்தேர்தல் பிற்போடப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு டிசெம்பர் 30ஆம் திகதி, இத்தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

இதில், எதிர்த்தரப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட ஃபீலிக்ஸ் வெற்றிபெற்றார் என, கொங்கோவின் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. அவருக்கு, 38.6 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இத்தேர்தலில் வெற்றிபெறுவார் எனக் கருத்துக்கணிப்புகள் கூறிய, மற்றுமோர் எதிர்த்தரப்பு வேட்பாளரான மார்ட்டின் ஃபயுலு, 34.8 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். தற்போதைய ஜனாதிபதி ஜோசப் கபிலாவினதும் அவரது கட்சியினதும் ஆதரவைப் பெற்ற வேட்பாளரான இமானுவேல் ரமஸானி ஷாடரி, 23.8 சதவீதமான வாக்குகளையே பெற்றார்.

இத்தேர்தல் பிரசாரக் காலத்தில், பல வகையான முரண்பாடுகளும் வன்முறைகளும் ஏற்பட்டிருந்த நிலையில், ஃபீலிக்ஸின் வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய அவர், கொங்கோவை நீண்டகாலமாக ஆண்டுவந்த ஜனாதிபதி கபிலாவை எதிரியாகப் பார்க்கவில்லை எனவும், மாற்றத்தின் அங்கமாக அவரைப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

என்றாலும், இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாகச் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, கருத்துத் தெரிவித்த பிரான்ஸின் வெளிநாட்டு அமைச்சர் ஜூன் யுவேஸ் லே ட்ரியன், இத்தேர்தலில் உண்மையான வெற்றியாளர், 2ஆவது இடத்தைப் பெற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ள மார்ட்டின் ஃபயுலுவே என்று தெரிவித்தார். “அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகள், உண்மையான முடிவுகளோடு பொருந்தும் வகையில் காணப்படவில்லை போன்று தெரிகிறது” என, அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .