2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிம்பாப்வேயில் இராணுவப் புரட்சிக்கு வாய்ப்பு?

Editorial   / 2017 நவம்பர் 15 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே ஜனாதிபதி றொபேர்ட் முகாபேயின் ஆளுங்கட்சியில், முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், இவை தொடர்ந்தால், இவ்விடயத்தில் தலையிடுவதற்குத் தயங்கப் போவதில்லை எனவும், சிம்பாப்வேயின் உயர் இராணுவத் தளபதிகளுள் ஒருவரான கொன்ஸ்டன்டினோ சிவெங்கா எச்சரித்துள்ளார்.

உப ஜனாதிபதியாக இருந்த எமெர்ஸன் மனங்கக்வா, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே பாதுகாப்புப் படைகளின் தளபதியான ஜெனரல் கொன்டன்டினோ, மனங்கக்வாவின் அரசியல் தோழர் ஆவார். இந்நிலையிலேயே, தற்போதுள்ள நிலைமை, சிம்பாப்வேயில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்துகிறது என, அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இராணுவத்தில் முக்கியமானவர்களாக உள்ள, பல இராணுவத்தினர் புடைசூழ வாசிக்கப்பட்ட அவரது கருத்தில், சிம்பாப்வே ஜனாதிபதியின் மனைவிக்கும், மறைமுகமான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

93 வயதான முகாபேக்குப் பின்னர், ஜனாதிபதிப் பதவியை யார் கைப்பற்றுவது என்பதற்கான போட்டி ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே, உப ஜனாதிபதி நீக்கப்பட்டார். ஜனாதிபதி முகாபெயின் மனைவி கிரேஸ் முகாபே, அடுத்த ஜனாதிபதி ஆகுவதற்கு முயல்கிறார்.

மனங்கக்வா நீக்கப்பட்டமை, கிரேஸ் முகாபேக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதெனக் கருதப்படுகிறது.

எனினும், கருத்துத் தெரிவித்த ஜெனரல் கொன்ஸ்டன்டினோ, 1970களில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டங்களில் பங்குபற்றாதவர்களால், ஆளுங்கட்சி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

ஜெனரலின் இந்த எச்சரிக்கை, சிம்பாப்வேயில் இராணுவத் தலையீட்டுக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இராணுவப் புரட்சி ஏற்படுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .