2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சிரியாவில் போர்நிறுத்தம் அவசியம்’

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்தது ஒரு மாதகாலத்துக்காவது, சிரியாவில் மனிதாபிமானப் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனக் கோரியுள்ள ஐக்கிய நாடுகள், இது உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டுமெனவும் கோரியுள்ளது. அண்மைய நாட்களில், சிரியாவில் அதிகரித்துள்ள விமானத் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே, இந்த அவசரக் கோரிக்கையை, ஐ.நா விடுத்துள்ளது.

இவற்றோடு சம்பந்தப்படாமல், தனித்த விடயமாக, சிரியாவில் இரசாயனத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில், தனது விசாரணைகளை, ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர்கள் ஆரம்பித்துள்ளனர். எதிரணிப் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகள் மீது, குளோரின் வாயுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளன.

இத்தாக்குதல்களை, சிரிய அரசாங்கமே மேற்கொண்டது எனக் குற்றஞ்சாட்டப்படுகின்ற போதிலும், இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என, சிரிய அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.

சிரியாவில், ஒரு பக்கமாக, குர்திஷ் போராளிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை, துருக்கி மேற்கொண்டுவருகிறது. அதன் அழிவுகள் ஒரு பக்கமாக இருக்க, எதிரணிப் போராளிகளை அழித்தொழிக்கும் நோக்கத்துடன், சிரிய அரசாங்கமும், தனது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில், நேற்று முன்தினம் (06) மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், கிழக்கு கௌட்டா பகுதியில் மாத்திரம், 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்தது. உள்ளூர் அதிகாரியொருவர், 53 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 30 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என, கண்காணிப்பகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, நோயுற்றவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உதவிகளை வழங்குவதற்காக, போரை நிறுத்துமாறு, சிரியாவிலுள்ள ஐ.நா அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிக கரிசனை செல்லும் இடங்களாக, குர்திஷ்களால் கட்டுப்படுத்தப்படும் அஃப்ரின் பிராந்தியம் உட்பட 7 இடங்களை, அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக, உதவி விநியோகமென, ஒரு விநியோகம் கூட இடம்பெற்றிருக்கவில்லை என, ஐ.நா உதவி செயலாளர் நாயகமும் சிரிய நெருக்கடிக்கான மனிதாபிமான இணைப்பாளருமான பானோஸ் மௌம்ட்ஸிஸ் தெரிவித்தார். இது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு நிலைமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், கிழக்கு கௌட்டா பகுதிக்கு, கடந்தாண்டு நவம்பரிலிருந்து, உதவிப் பொருட்கள் எவையும் அனுப்பப்பட்டிருக்கவில்லை என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .