2024 மே 08, புதன்கிழமை

படகுகள் கவிழ்ந்ததில் 100க்கும் மேற்பட்டோர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியக் கரையோரத்துக்கு அருகில், குடியேற்றவாசிகளின் இரண்டு படகுகள் கவிழ்ந்தமையின் காரணமாக, இம்மாத ஆரம்பத்தில் மாத்திரம், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர் என, எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. குடியேற்றவாசிகள் பயணஞ்செய்த இறப்பர் படகுகளில் அளவுக்கதிகமானோர் பயணஞ்செய்ததோடு, அப்படகுகள் கரைக்கு அடித்துச் செல்லப்பட்டன என, அப்படகுகளில் பயணஞ்செய்தவர்களை மேற்கோள்காட்டி,  எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்புக் குறிப்பிட்டுள்ளது.

லிபியக் கரையோரத்திலிருந்து, இம்மாதம் முதலாம் திகதி, இரண்டு படகுகள் புறப்பட்டன என, அவ்வமைப்புத் தெரிவித்தது. அப்படகுகளில் ஏராளமானோர் பயணஞ்செய்ததோடு, அவர்களில் அநேகமானோர், ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களெனவும் அவ்வமைப்புக் குறிப்பிட்டது.

இவ்விரு படகுகளில் ஒரு படகின் இயந்திரம், அத்தினத்திலேயே செயலிழந்தது எனக் குறிப்பிட்ட அவ்வமைப்பு, மற்றைய படகில் காணப்பட்ட காற்று இல்லாமல் போக, அதுவும் பாதிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டது. மிதந்துகொண்டிருந்த படகின் சிதைவுகளைப் பற்றிப் பிடித்தபடி காணப்பட்ட சிலர், உயிர் தப்பினர்.

மீட்புப் பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அப்படகில் பயணஞ்செய்து உயிர்தப்பிய ஒருவர், ஐரோப்பாவைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் அவ்விடத்துக்கு வந்து, தங்களுக்கான உயிர்காக்கும் மிதவைகளை வழங்கிய போதிலும், பல மணிநேரமாக, கடல்நீரிலேயே காணப்பட வேண்டியேற்பட்டது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “எங்களுடைய படகில், 55 பேர் மாத்திரம் தான் தப்பினர். குடும்பங்கள், சிறுவர்கள் உட்பட, ஏராளமானோர் பலியாகினர். மீட்புப் பணியாளர்கள் விரைவாக வந்திருந்தால், அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

காப்பாற்றப்பட்ட குடியேற்றவாசிகள், லிபியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு, அவர்களில் பலர், தமது உறவினர்களை இழந்தமையால் வருந்துகின்றனர் எனவும், அவர்களுக்கான ஆதரவு வழங்கப்படாமல், பொருத்தமற்ற நிலைமைகளைக் கொண்ட இடங்களில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X