2024 மே 09, வியாழக்கிழமை

மாலைதீவுகளின் பிரதம நீதியரசர் கைதானார்

Editorial   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

  • ஜனாதிபதியின் கோபத்தைச் சம்பாதித்திருந்தார்
  • அவசரகால நிலை அறிவிப்புக்குப் பின்னர் அதிரடி
  • நீதியரசர் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதியும் கைது
  • பதவியில் தன்னை நிலைநிறுத்துகிறார் ஜனாதிபதி

மாலைதீவுகளின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட்டும், உச்சநீதிமன்றத்தின் இன்னொரு நீதியரசரும், நேற்று (06) அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். நாட்டில் அவசரகால நிலைமையை, ஜனாதிபதி அப்துல்லா யமீன் பிரகடனப்படுத்திச் சில மணித்தியாலங்களில், இக்கைதுகள் இடம்பெற்றன.

மாலைதீவுகளின் தலைநகர் மாலேயில் உள்ள நீதிமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்த பொலிஸார், பிரதம நீதியரசரையும், நீதியரசர் அலி ஹமீட்டையும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நிர்வாகியான ஹஸன் சயீட்டையும் கைதுசெய்தனர். அவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன என, பொலிஸார் வழங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

ஏற்கெனவே, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியின் ஒருவழிச் சகோதரருமான மௌமூன் அப்துல் கயூம், நேற்று முன்தினம் மாலை கைதுசெய்யப்பட்ட பின்னணியிலேயே, பிரதம நீதியரசரின் கைதும் இடம்பெற்றுள்ளது.

அரசியல் கைதிகள் எனக் கருதப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்தும், ஆளுங்கட்சியிலிருந்து விலகிச் சென்ற 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலக்கல் தவறென்றும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே, நாட்டின் நீதித்துறைக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடு ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மறுத்த நிலையில், ஜனாதிபதியைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை, உச்சநீதிமன்றம் மேற்கொண்டது எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய ஜனாதிபதி, தனது பதவியை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி அலுவலகம், “தற்போதைய வடிவத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது, பொதுமக்களின் பாதுகாப்பைக் காப்பதற்கு எதிரானது” என்று குறிப்பிட்டது.

நீதிமன்றக் கட்டடத் தொகுதியை, இராணுவத்தினரே சுற்றிவளைத்தனர் என, மாலைதீவுகளின் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டது.

இதேவேளை, தனது நடவடிக்கைகள் தொடர்பாக, மக்களுக்கு நேற்று உரையாற்றிய ஜனாதிபதி யமீன், குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதிகள், தன்னைப் பதவி விலக்க முயன்றனர் எனவும், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தாமல், அவர்களை விசாரிப்பதற்கு வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X