2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மியான்மாரில் நில ஆக்கிரமிப்பு

Editorial   / 2018 மார்ச் 13 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, அம்மக்களுக்கெதிரான அநீதி இழைக்கப்பட்டது என, சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அங்குள்ள முஸ்லிம்களின் இடங்களை, அந்நாட்டு இராணுவம் ஆக்கிரமித்துள்ளது என, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்தாண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி, ஆயுததாரிகளால், பாதுகாப்புப் பிரிவினரின் சோதனைச் சோவடிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ராக்கைனில், இராணுவ நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயுததாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றே இராணுவம் குறிப்பிட்டாலும், கொலை, வன்புணர்வு, சித்திரவதை ஆகியன உள்ளடங்கிய, கொடூரங்கள் நிகழ்ந்தேறின எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நடவடிக்கைகள் காரணமாக, எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படாத போதிலும், இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, சுமார் 700,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷைச் சென்றடைந்துள்ளனர். இந்நடவடிக்கைகளை, “இனச் சுத்திகரிப்பு” என, ஐ.நா வர்ணிக்கிறது.

இந்நிலையில், ராக்கைன் மாநிலத்தில், இராணுவக் கட்டமைப்புகளின் எண்ணிக்கை, மிகச்சடுதியான அளவில் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடும் மன்னிப்புச் சபை, இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து அதிகரித்திருக்கும் இந்நிலைமை, “நில ஆக்கிரமிப்பு” என்றே வகைப்படுத்தப்பட வேண்டுமெனக் கூறுகிறது.

றோகிஞ்சா மக்களின் வீடுகள் எரியூட்டப்பட்டன என்பது, புகைப்பட, செய்மதிப் புகைப்பட ஆதாரங்கள் மூலமாக, ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்விடங்களிலும், இவ்வாறான இராணுவக் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன என, மன்னிப்புச் சபையின், “ராக்கைன் மாநிலத்தின் மீளுருவாக்கம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

சில சந்தர்ப்பங்களில், காணப்பட்ட வீடுகள் கூட உடைக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடும் மன்னிப்புச் சபை, பாதுகாப்புப் படைகளுக்கான கட்டமைப்புகள், ஹெலிகொப்டர்கள் தரையிறங்குவதற்கான வசதிகள், வீதிகள் ஆகியன, எரிக்கப்பட்ட றோகிஞ்சா மக்களின் காணிகளிலும் அவற்றுக்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது.

பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்ற சுமார் 700,000 பொதுமக்களை, மீளவும் மியான்மாரில் குடியமர்த்துவதற்கான இணக்கப்பாடு, பங்களாதேஷுக்கும் மியான்மாருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மியான்மாரின் நிலைமை இன்னமும் சீரடையவில்லை எனத் தெரிவிக்கும் சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும், இப்போதைக்கு இந்தக் குடியேற்றங்கள் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. அந்தக் குரல்களுக்கு வலுச்சேர்ப்பது போல, சர்வதேச மன்னிப்புச் சபையின் இவ்வறிக்கையும் வெளியாகியுள்ளது.

ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற அழிவுகள் தொடர்பாக, மியான்மார் அரசாங்கம் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அக்குற்றச்சாட்டுகள் இன்னமும் ஏற்கப்படவில்லை. மாறாக, தமது இராணுவத்தின் மீது தவறு இல்லை என்பதே, மியான்மாரின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், சரணடைந்த 10 பேரைக் கொன்று, புதைகுழிக்குள் புதைத்த விடயம் வெளியான பின்னர், அதில் தமது இராணுவத்தில் சிலர் ஈடுபட்டனர் என, மியான்மார் ஏற்றுக் கொண்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .