2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலில் தாக்கப் போவது வடகொரியாவா, ஐ.அமெரிக்காவா?

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்கள், ஏவுகணைச் சோதனைகள் காரணமாக, கொரியத் தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை தணிவது போன்ற நிலைமை காணப்பட்டாலும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பிரச்சினைகள் இன்னமும் தணியவில்லை என்பதை, அவ்விரு நாடுகளும் புதிதாக வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் புலப்படுத்துகின்றன.

ஐ.அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை, அணுக்குண்டைத் தாங்கிய ஏவுகணை மூலம் வடகொரியா தாக்குவதற்கான திறனைப் பெறுவதற்கு, இன்னும் சில மாதங்களே காணப்படுகின்றன என, ஐ.அமெரிக்கா எச்சரித்துள்ளது; மறுபக்கமாக, தம்மீதான தாக்குதலொன்றை முதலில் நடத்துவதற்கு, ஐ.அமெரிக்கா திட்டமிடுகிறது என, வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளால் அனுசரணையளிக்கப்படும் ஆயுதக்களைவு தொடர்பான மாநாட்டில் வைத்துக் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் நிர்வாகம், தமது அணுவாயுதத் திறனை அதிகரிக்கவுள்ளதாகக் கூறியதைத் தொடர்ந்தே, இப்பிரச்சினைகள் ஆரம்பித்துள்ளன.

அங்கு கருத்துத் தெரிவித்திருந்த ஐ.அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் வூட், ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய 3 நாடுகளும், தமது ஆயுதக் கொள்ளளவை அதிகரித்து வருகின்றன எனக் குற்றஞ்சாட்டியதோடு, புதிய அணுவாயுதக் கொள்ளளவைக் கொண்டுவருதல், “சமாதானமான  நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பதிலளித்த வடகொரியா, கொரியத் தீபகற்பத்துக்கு அண்மையாக, அணுவாயுதங்களைக் குவிப்பதற்கும், வடகொரியா மீதான தாக்குதலை மேற்கொள்வதற்கும், ஐ.அமெரிக்கா முயல்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர், மத்திய புலனாய்வு முகவராண்மையின் பணிப்பாளர் ஆகியோர், வடகொரியா மீதான அணுவாயுத, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவது குறித்து ஏற்கெனவே கூறியிருந்தனர் என்றும், வடகொரியா தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .