2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரசியல் தீர்வை உடன் அமுல்படுத்துமாறு ஈ.பி.டி.பி.யினர் ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் உடனடி பிரச்சினைகள் குறித்தான அரசியல் தீர்வினை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விஷேட பிரதிநிதிகள் நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர் தரப்பின் பிரதான சக்திகளோடு அரசியல் தீர்வு குறித்து பேசுதல் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்  நேற்று பேச்சுவார்த்தையொன்றூ இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விசேட பிரதிநிதிகளுக்கும் இடையிலும் அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த கட்சியின் பிரதிநிதிகள் மேற்படி கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதோடு ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமும் சமவுரிமையும் உள்ளதான அரசியல் ஏற்பாடு நோக்கி செல்வதே தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்த நடை முறைச்சாத்தியமான வழி முறையாகும். இதனால், அதை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சியினர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை காலமும்  தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஈ.பி.டி.பி.யினர் அரசாங்கத்துடனான உறவுக்கு கரம் கொடுத்து வருகின்றது என்றும் அக்கட்சியினர் விளக்கியுள்ளனர். இந்நிலையில் அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துகின்ற சமகாலத்தில் தமிழ் மக்களின் உடனடி அவசியப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துதல், கைது செய்யப்பட்டோர், மற்றும் சரணடைந்திருப்போர்களை விடுதலை செய்தல், அவ்வாறு விடுதலை செய்யப்படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முகமாக அவர்களுக்கான தொழிற்பயிற்சி, வேலை வாய்ப்பு, மற்றும், அவர்களுக்கான கல்வி கற்கும் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற மனிதாபிமான பணிகளையும் அரசியல் தீர்வு முயற்சிகளை நடைமுறைப்படுத்தும் ஏக காலத்தில் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஐபஸவிடம் அவர்க்ளால் கோரப்பட்டுள்ளது.

இந்த இரு தரப்பு சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபஸ, ஜீ.எல்.பீரிஸ், மைத்திரிபால சிறிசேன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் ஈ.பி.டி.பி.யினர் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார். நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Wednesday, 09 June 2010 12:08 AM

    வெற்றிலைக் கட்டுக்குள் இருந்து பூச்சி நியாயம் பேசுவது அதிசயம்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .