2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை அகதி தம்பதியை ஒரே முகாமில் தங்க வைக்குமாறு உத்தரவு

George   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அகதி தம்பதியை பிரித்து, தனித்தனி முகாம்களில் தங்கவைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இருவரையும் ஒரே முகாமில் தங்க வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த டி.உதயகலா, தனது கணவர் கே.தயாபரராஜ் மற்றும் 2 குழந்தைகளுடன் இலங்கையில் இருந்து அகதியாக 2014ஆம் ஆண்டு தமிழகம் வந்துள்ளார். 

கடவுச்சீட்டு இல்லாமல் வந்ததற்காக தனுஷ்கோடியில் அவர்களைக் கைது செய்த தமிழக பொலிஸார், உதயகலாவை இராமேசுவரம் சிறப்பு அகதிகள் முகாமிலும், தயாபரராஜை செய்யாறு அகதிகள் முகாமிலும் அடைத்தனர். 

பல மாதங்கள் கழித்து உதயகலாவை மட்டும் விடுவித்து மண்டபம் அகதிகள் முகாமில் இருக்க அனுமதித்தனர். தயாபரராஜை செய்யாறு சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து, திருச்சி சிறப்பு அகதிகள் முகாமுக்கு மாற்றினர்.

இந்நிலையில், 'தனது கணவர் தயாபரராஜ் மீது எவ்வித வழக்குகளும் இல்லாத போதும் அவரை விடுவிக்கப் பொலிஸார் மறுக்கின்றனர். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உதயகலா, ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உள்துறை இணைச் செயலாளர், கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகிப் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. உள்துறை சார்பு செயலர் சலீம், கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஷ்வரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

மனுதாரர் மற்றும் அவரது கணவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். இருவர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களை விடுவித்தால் இரு நாட்டு இறையாண்மை பாதிக்கப்படும். மேலும், மண்டபம் அகதிகள் முகாமில் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை இல்லாததால் இவர்கள் எளிதில் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரரின் வழக்குரைஞர், இருவர் மீதும் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இல்லை. மனுதாரரின் கணவர் மீது வங்கி கடனைத் திரும்பச் செலுத்தாத வழக்கு மட்டுமே இலங்கையில் உள்ளது. இந்நிலையில் இவர்களை விடுவிப்பதால் இருநாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் என்பது ஏற்புடையதாக இல்லை என்றார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் மற்றும் அவரது கணவரை மண்டபம் அகதிகள் முகாமில் புதன்கிழமைக்குள் (ஜூலை 13) தங்கவைக்க உத்தரவிட்டனர். மனுதாரர் தனது மருத்துவ சிகிச்சைக்காக வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதி மறுக்கக்கூடாது.

மனுதாரரின் கணவர் வெளியே செல்வதற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறி விசாரணையை ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .