2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’இழுத்தடிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வாக்குரிமை என்பது மக்களின் பிறப்புரிமையாகும். அந்த ஜனநாயக உரிமை பாதுகாக்கப்படவேண்டும். இதற்காக இழுத்தடிப்புகளின்றி உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

எனவே, ஜனாதிபதி தேர்தலை ஏதேனும் காரணத்துக்காக ஒத்திவைப்பதற்கு - இழுத்தடிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” என, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இன்று (04) காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதி தேர்தலை உரிய காலப்பகுதிக்குள் நடத்துமாறு நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதன்படி செப்டம்பர் 20 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் வேட்புமனு கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நவம்பர் 10 ஆம் திகதியில் இருந்து டிசெம்பர் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நிலைமை இப்படி இருக்கையில், ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு முதுகெலும்பற்ற சிலர் அதனை குழப்பியடிப்பதற்கு பல வழிகளிலும் முயற்சித்துவருகின்றனர்.

இதன்ஓர் அங்கமாகவே மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கில், பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த உத்தரவிடமுடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார்.

ஆனால், பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது. அவ்வாறு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் சட்ட வியாக்கியானம் வழங்கியுள்ளது.

மாகாணசபைகளுக்கான தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது எல்லை நிர்ணயம் தொடர்பில் எமக்கு கடும் அதிருப்தி இருந்தது. குறித்த தேர்தல் முறையானது தமிழ்பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது. எனினும், சில நிபந்தனைகள், சில விட்டுக்கொடுப்புகள் என்ற அடிப்படையில் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

ஆனால், அதுவும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஓர் தந்திரோபாயமாகவே அமைந்தது என்பது கசப்பான உண்மையாகும். இந்நிலையில் இதைஓர் காரணமாக வைத்து தேர்தல்களை திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிக்க முற்படுவது ஜனநாயக விரோத செயலாகும்.

தற்போது ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படவேண்டும் என்ற நிலையில், ஜனாதிபதியின் பதவிகாலம் எப்போது முடிவடைகின்றது என்ற வாதத்திலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக 2015 ஜூன் 21ஆம் திகதி சபாநாயகரினால் கையெழுத்திடப்பட்ட, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளில் முடிவடைகிறது.

எனவே,  19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜூன் 21ஆம் திகதியே நடைமுறைக்கு வந்த அன்றில் இருந்தே, ஜனாதிபதியின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் கணக்கிடப்பட வேண்டும்.

இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2020 ஜனவரி 08ஆம் திகதி வரை பதவியில் இருப்பதற்குப் பதிலாக, 2020 ஜூன் 20 வரை பதவியில் இருக்க முடியும் என்பதே அவர்களின் வாதமாகும்.

இதற்கெல்லாம் இடமளிக்கமுடியாது. மக்களின் கோரிக்கையைஏற்று ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டும். காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், தமக்கு சாதகமான சூழ்நிலைவரும்போது தேர்தலை நடத்தலாம் என சிந்திப்பதானது ‘அரசியல் சூழ்ச்சி’ நடவடிக்கையின் மற்றுமொரு அங்கமாகும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .