2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலக தமிழ் செம்மொழி மாநாடு; தமிழர்கள் வரலாற்றில் புதிய அத்தியாயம்-கருணாநிதி

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் கோவை நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், மாநாட்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நாளை புதன்கிழமை ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்து வானொலி மற்றும் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதி நேற்று உரையாற்றினார்.

அந்த உரையில், "இதுவரையில் எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடைபெறும் மாநாடாக செம்மொழி மாநாடு அமைந்துள்ளது.

உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில், கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகியன மட்டுமே செம்மொழி எனும் தகுதியைப் பெற்றுள்ளன.

ஏனைய செம்மொழிகளை விடவும் தமிழ் மொழி மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் லத்தீன், ஹீப்ரூ ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்து இப்போது வளம்பெற்று வருகிறது.

சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. பாரசீகம், அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. அரேபிய மொழி, காலத்தால் மிகவும் பிந்தியது. இதுபோன்று, செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும் போது, தமிழ் மொழி மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும் விட உயர் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.

தமிழும், தமிழ்ச் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இலக்கிய வளத்தைப் பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறாத தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது தமிழ் மொழி.

தமிழ் மொழி எந்த மொழியையும் சார்ந்திருக்காமல் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. இது, நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ்  அடைந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்போதுதான் அதாவது 2004ஆம் ஆண்டுதான் கிடைத்தது.

இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது." என்று முதல்வர் கருணாநிதி தனது உரையில் விளக்கமளித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .