2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'ஊடகங்களை ஒழுங்குபடுத்த பலத்தை பிரயோகியோம்'

George   / 2016 ஜூலை 28 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'ஊடக நிறுவனங்கள், தமக்கான ஊடக தர்மம் மற்றும் ஒழுக்க நெறிக் கோவைகளை மீறிச் செய்தி வெளியிடுகின்றன. எனவே, இதனை ஒழுங்குபடுத்த ஒரு தீர்வு தேவை. அதனையே தற்போது முன்னெடுக்க ஆராய்ந்து வருகின்றோம். எவ்வாறாயினும், பலத்தைப் பிரயோகித்து இதனை நாம் ஒருபோதும் செய்யபோவதில்லை' என நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களுள் ஒருவருமான, அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், புதன்கிழமை (27) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு எதிராக, ஊடகங்களைக் கட்டுப்படுத்த சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில், அமைச்சரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை கலந்துரையாடப்பட்டதாக வெளியான செய்தி குறித்து, ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, 'இலங்கையில் ஊடக சீர்த்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக, அது தொடர்பில் புதிய எண்ணக்கருக்களை உருவாக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு எதிரான சட்டமொன்றை அரசாங்கம் உருவாக்குவதாக வெளியாகியுள்ள செய்தியை முற்றாக நிராகிரிக்கின்றேன்' என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

'இலங்கையில் உள்ள ஊடகங்கள் சில, குறிப்பாக பத்திரிகைகள், அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிரான, பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக பிரதமர், அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இவ்வாறான செய்திகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, ஊடக சீர்த்திருத்தத்தை ஏற்படுத்துவது குறித்து ஆராயுமாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஊடகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் தற்போதும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று விட்டன. இதனைச் சீர்ப்படுத்த வேண்டும். ஏனைய நாடுகளை போல நமது நமது நாட்டிலும் ஊடக கலாசாரத்தை சிறந்த முறையில் பேண வேண்டும். அதற்கு ஊடக சீர்த்திருத்தம் தேவை' என்றார்.

இதன்போது, 'ஊடகங்கள் வெளியிடும் தவறான செய்திகள் தொடர்பில் ஆராய பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்பவை உள்ளனவே' என்று ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.

அதற்குப் பதிலளித்த அவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்பன தற்போது மோசமான நிலையில் உள்ளன. ஊடகங்கள் வெளியிடும் தவறான செய்திகள் குறித்து அவை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

இவ்வாறான தவறுகள் இடம்பெறும்போது அவற்றை எதிர்த்துக் கேட்க இவைகளுக்கு அதிகாரம் இல்லலையா? என்னைப் பற்றி வெளியான தவறான செய்தியொன்றை அவற்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் இதுவரை உரிய பதில் வழங்கப்படவில்லை. அதற்கு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.

இதேவேளை, ஊடக சீர்திருத்தம் தொடர்பில் ஒரு எண்ணக்கருவை உருவாக்குவதற்காக  விஜயானந்த ஜயவீர தலைமையில் குழுவொன்றை உருவாக்கியுள்ளதாக ஊடகப் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடக அமைப்புகள், ஊடக நிறுவனங்களிடம் கலந்தாலோசித்து உரிய நடைமுறையொன்றை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .