2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடற்றொழில் அமைச்சருக்கு 2 வாரங்கள் கால அவகாசம்

Editorial   / 2017 ஜூலை 15 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை 2 வாரங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கடற்றொழில் அமைச்சருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளார்.

அத்துமீறல்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் நேற்று (14) கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தின் யுத்தம் முடிவுற்ற பின்னர் தொழிலுக்காக தென்னிலங்கை மீனவர்கள் அங்கு வருவது அதிகரித்துள்ளது.

“கொக்கிளாய், நாயாறு மற்றும் சாளை போன்ற பகுதிகளில் அதிகளவான தென்னிலங்கை மீனவர்கள் வருகைதந்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் உடந்தையாக இருக்கின்றார்கள். அங்கு வரும் மீனவர்கள் இவரின் உறவினர்களாகத்தான் இருக்கின்றார்கள். இதனால் அவர் தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுப்பதில்லை.

“பணிப்பாளருடைய பெறுப்பற்றதன்மை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். எழுத்து மூலமாகவும் முறைப்பாடு செய்துள்ளேன். இருப்பினும் மாவட்டச் செயலர் அது தொடர்பான நடவடிக்கை எடுக்கவில்லை.

“மீனவர்கள், நாட்டுக்கு உட்பட்ட எந்த கடல் பகுதியிலும் சென்று தொழில் செய்யலாம் என இலங்கையில் ஒரு சட்டம் உள்ளது. ஆனால், கடற்கரையில் வடி அமைத்து தொழில் செய்வதாக இருந்தால் அந்த பகுதி பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

“ஆனால், முல்லைத்தீவில் பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக் கொள்ளாமல் 500க்கும் மேற்பட்ட வாடிகளை அமைத்து, தென்னிலங்கை மீனவர்கள் அங்கு தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள். இந்த விடயத்தில் அரச அதிகாரிகள் உரிய சட்டத்தை நடமுறைப்படுத்தவில்லை.

“நாம் தமிழர்கள் என்றதால் பல்வேறு விதத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டதால் தான் எமது ஆயுதப் போராட்டம் உருவெடுத்தது. இப்போதும் அடக்கு முறைகளும், ஒடுக்கு முறைகளும் தொடர் அத்துமீறல்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

“பல முறை பல வழிகளிலும் அரசாங்கத்திடம் இவ் அத்துமீறல்களை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிவருகின்ற போதும் அரசாங்கம் தீர்வைத் தர மறுக்கின்றது.

“இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கடற்றொழில் அமைச்சருடனும் பேசியுள்ளேன். இப்பிரச்சினை தீர்ப்பதற்கு 2 வார கால அவகாசம் அவர் கோரியுள்ளார். 2 வார கால அவகாசம் முடிந்த பின்னரும் அத்துமீறல்கள் தொடருமானால் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி, கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளேன்.

“தொடர் போராட்டங்கள்தான் வெற்றியை பெற்றுத்தரும். ஆயுதப் போராட்டத்தை நாங்கள் இப்போது விரும்பாவிட்டாலும், எங்களுடைய உரிமைசார் விடயங்களில் போராட்டம் இல்லாமல் ஒரு போதும் கிடைக்காது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .