2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுநீரக வியாபாரம் உறுதியானது; அறுவரிடம் அறுத்தெடுப்பு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் 8பேரின் அறுவரது சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கடந்த மாதம் 4ஆம் திகதி மேற்படி இந்தியர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் அறுவரது சிறுநீரகங்களே அகற்றப்பட்டுள்ளன என்று சோதனைகளின் போது தெரியவந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

மேற்படி இந்தியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ஒரு சிறுநீரகம் ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு தாங்கள் விற்றதாகவும், இருப்பினும் அந்தத் தொகை இதுவரையில் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியதாக பொலிஸார், நீதிமன்றத்தில் கூறினர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து 286 ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் அவற்றை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்திய பொலிஸாரிடம் ஒப்படைத்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கிய கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், மேற்படி இந்தியர்கள் எட்டு பேரையும் இம்மாதம் 4ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .