2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தமிழரசுக்கட்சி தனியாக இயங்கவில்லை’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 13 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழரசுக்கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு, கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்களுடைய காலத்தில் அவர்களால் இயலுமான பங்களிப்பைச் செய்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது என்பது முக்கியம் அல்ல. உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல வருடங்களாக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றது. நாங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகத் தான் எங்களை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனிமேலும் அவ்வாறு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பது தான் முக்கியமான விடயம். 

“தமிழரசுக் கட்சி தனியாவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது நாடாளுமன்ற குழு, நடவடிக்கை குழுவில் கட்சியின் சார்பில் செயற்படுவதற்காக கட்சியின் தலைவர் என்ற வகையில் என்னையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்டத்தரணியும் அரசியல் சாசனம் தொடர்பாக பல விடயங்களில் ஈடுபடுகின்றவர் என்ற காரணத்தாலும் இருவரையும் தெரிவு செய்தது.  

“அவ்வாறு செயற்படுவதன் காரணமாக, எமது செயலகம் சார்ந்து சில அறிக்கைகள் வெளிவரலாம். ஆனால், வேறு கட்சிகளை உதாசீனம் செய்வதாக இல்லை. உதாரணமாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்த போது என்னை மட்டுமே சந்திக்க விரும்பினார். ஆனால் நான் தான் கூட்டமைப்பில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என கோரி ஏற்பாடுகளை செய்தேன். 

“மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணங்களுக்கும் உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக ஓர் உபகுழு நியமிக்கப்பட்டது. ஆக்குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தான் தலைவர். அவர்களை நாங்கள் உதாசீனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மை சமூகம் நாங்கள் பிரிந்து நிற்கின்றோம் என நினைக்க கூடாது. எனவே நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பிரிவுக்கு நாங்கள் இடங்கொடுக்க மாட்டோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதாக இருந்தால் அதற்கு அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் சம்மதிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு நல்ல தீர்வு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக சிந்திக்கலாம்” என தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .