2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வட மாகாணத்தில் போக்குவரத்து முடங்கியது

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியும், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஆகியன இணைந்து, இன்று மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பால், வடமாகாணத்தில் போக்குவரத்தில், முடக்கமான நிலை ஏற்பட்டது.

யாழ். நல்லூர் தெற்கு வீதியில், சனிக்கிழமை (22) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில், யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார். இன்னொரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், பணிப்பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் என, வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலுமே, தனியார் பஸ்கள், சேவையில் ஈடுபடவில்லை.

பாடசாலைகளில் இரண்டாம் தவணைப் பரீட்சைகள், இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக, மாணவர்கள் பல்வேறு இடர்களை இன்று எதிர்கொண்டனர்.

இதேவேளை அரச திணைக்களங்களிலும், உத்தியோகத்தர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபட்டபோதிலும், போதுமான பஸ்கள் இன்மையால், அதிகளவிலான பயணிகளை ஏற்றியவாறு, அந்த பஸ்கள் பயணித்ததை அவதானிக்க முடிந்தது.

போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தமையால்,  பொதுமக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன்,  போக்குவரத்து இன்மையால், பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாகவே காணப்பட்டது.

மாவட்டத்துக்குட்பட்ட சேவைகள் மாத்திரமன்றி, மாவட்டத்திலிருந்து வெளியே செல்லும் பஸ் சேவைகளும் இடம்பெற்றிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .