2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகரசபை செயற்பாடுகள் தமிழ்ப் பகுதிகளை புறக்கணிப்பதாகவுள்ளன-த.தே.கூ

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகரசபையின் செயற்பாடுகள் கல்முனை தமிழ்ப் பகுதிகளை புறக்கணிப்பதாகவே அமைகின்றன என  கல்முனை மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம் குற்றஞ்சாட்டினார்.

கல்முனை மாநகரசபையின் அமர்வு நேற்று புதிய மேயர் மசூர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது. இதில்  அமிர்தலிங்கம் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

"கல்முனை வடக்கு பகுதிக்கென தெருவிளக்குகள் பொருத்துவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு  32 இலட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.ஹரிஸ் இருந்தார்.

ஆனால் இதுவரை இங்கு எவ்வித வேலைகளும் செய்யப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட 32 இலட்சம் ரூபாய் நிதி எங்கே? அதற்கு என்ன நடந்தது என்று கூடத் தெரியாது. ஆனால் இதனோடு சாய்ந்தமருது பகுதிக்கென ஒதுக்கப்பட்ட 60 இலட்சம் ரூபாய் நிதிக்கான வேலைகள் நிறைவடைந்துள்ளன.  இதன் விளக்கத்தை மேயர் தர  வேண்டும்.

கல்முனை மாநகரசபைக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வருகை தந்தபோது முன்னாள் மேயர் ஹரிஸ் அவரிடம் தமிழ் மக்களுக்கு எந்தப் புறக்கணிப்புமின்றி நான் வேலை செய்கின்றேன்.  கல்முனை வடக்கு பகுதிக்கு 32 இலட்சம் ரூபாய் செலவில் தெரு விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான வேலைகள் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும்" என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை நடந்தது ஒன்றும் இல்லை. இதனை தமிழ்ப் பகுதிகளின் புறக்கணிப்பாகவே நான் பார்க்கின்றேன்.

கல்முனை மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட தமிழ்ப் பகுதிகளிலுள்ள வீதிகள் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.  இங்கு மின்விளக்குகள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கித் தருமாறு  கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் சோ.புஷ்பராசாவிடம் கோரியுள்ளேன்." என்றார்.  



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .