2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஐ.நா.விடம் சமர்ப்பிக்கப்படும்-கெஹெலிய

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் யுத்த கால நடவடிக்கை தொடர்பான அறிக்கையின் பிரதியொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டில் யுத்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேறு பூச நினைக்கும் நடைவடிக்கைகளை அரசாங்கம் முறியடிக்கும். அத்துடன் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற உண்மை நிலையினை அறிந்து அதனை சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும். இதன்பொருட்டே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-

நாட்டில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட மேலும் 3 சர்வதேச அமைப்புகள் ஏற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.

இந்த கருத்துக்கு பின்னால் ஒருவர் உள்ளார் என்பது எங்களுக்கு தெரியும். இல்லாவிடின் இந்த 3 அமைப்புகளும் ஒரே சமயத்தில் இவ்வாறானதொரு கருத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த தீய சக்தி குறித்து நாம் வெகு விரைவில் கண்டறிவோம்.

இதேவேளை செனல் - 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட யுத்த குற்றச்செயல்கள் எனும் காட்சிகளும் பொய்யானவை என நாம் தொழில்நுட்ப ரீதியில் நிரூபித்துள்ளோம். இருப்பினும் அவர்கள் அவ்வாறான காட்சிகளை தொடர்ந்தும் காண்பித்து வருகின்றனர். அவற்றையும் நாம் முறியடிப்போம். முடியுமானால் அவை உண்மையானவை என அந்த நிறுவனத்தினால் நிரூபிக்க முடியுமா எனவும் சவால் விடுக்கின்றோம்.(M.M & S.A.J)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .