2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புலிகள் இயக்கம் சாரா விதவைகள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தினால் விடுதலைப் புலிகள் இயக்கத்தினைச் சாராத பெரும்பாலான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை அரசாங்கம் கவனத்திற்கொள்ளாது இருப்பதாகவும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" முன்னிலையில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது :-  

"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகளுக்கு அரசாங்கம் எந்தவொரு சலுகையினையும் வழங்காதுள்;ளது. ஆனால், புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை கவனத்திற்கொண்டு  அவர்களுக்கான சலுகைகளை தொடர்ந்தும் அரசாங்கம் வழங்கி வருகின்றது." என்றார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில், "வடக்கின் அதிகளவான பிரதேசங்களில் இராணுவத்தின் நிர்வாகமே பெருமளவில் காணப்படுகிறது. இதேவேளை, முல்லைத்தீவிலும் பண்டிவிரிச்சானிலும் அதிகளவிலான தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பிரதேச மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. இராணுவத்தினர் மாத்திரமே குறித்த விகாரைகளுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது.

நாம் எந்தவொரு மதத்துக்கு விரோதமானவர்கள் அல்லர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான சிறு விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன், குறித்த பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த விகாரைகளை காரணம் காட்டி அரசாங்கம் பெரும்பான்மையின மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று கிடைக்காது.  தனி நாடு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கினாலும், இந்திய அரசாங்கம் இதற்கு இணங்காது. இது மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அத்துடன், முன்னாள் ஜளாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, மேல் மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் மாகாண சபைகளை பலப்படுத்துவதற்காக கூடிய அதிகாரங்களைக் கோரிய போதிலும் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அந்த அதிகாரங்களை வழங்குவதற்கு தவறிவிட்டார்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .