2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வட மாகாண சபையின் சம்மதமின்றி உள்ளூராட்சித் திருத்தத் சட்டத்தை சட்டமாக்க முடியாது; மாவை சேனாதிராஜா வழ

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)


உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரு சட்டமூலங்கள் தொடர்பாக வட மாகாண சபையின்அபிப்பிராயம் கோரப்படாததால் அவற்றை சட்டமாக்க முடியாதெனக் கூறி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராஜா உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளார்.


த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தனது சட்டத்தரணி மொஹான் பாலேந்திராவுக்கூடாக உயர் நீதிமன்றத்தில் நேற்று இரு தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தார்.


உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், மற்றும் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) ஆகிய இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பாக வட மாகாண சபையின் அபிப்பிராயம் கோரப்படாத நிலையில் அவற்றை சட்டமாக்க முடியாதென மேற்படி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான மாவை சேனாதிராஜா தனது மனுவில், மேற்படி இரு சட்டமூலங்களும் அரசியலமைப்பின் 145ஜி(3) ஷரத்துக்கு அமைவானதாக இல்லை. மாகாண சபைகளுக்குரிய பட்டியலில் உள்ள எந்த விடயம் தொடர்பான சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டு, ஜனாதிபதியால் ஒவ்வொரு மாகாண சபைகளினதும் ஆலோசனைக்காக முன்வைக்கப்படாமல் சட்டமாக்கப்பட முடியாது என அந்த ஷரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை மேற்படி சட்டமூலங்கள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் உண்மையில் வேறு எந்த வொரு மாகாண சபையினதும் கருத்துகளைப் பெறுவதற்காக முன்வைக்கப்பட்டமைக்கு ஆதாரமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போலும் எந்தவொரு மாகாண சபையினதும் கருத்துகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக தான் அறியவில்லை எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


இச்சட்டமூலம் குறித்து வெறுமனே இணக்கத்தையோ இணக்கப்பாடின்மையையோ தெரிவிப்பதற்குப் பதிலாக, மாகாண சபைகள் தொடர்பான விடயங்களில் நாடாளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சட்டமாக்கல் நடைமுறைகளில் செயற்பாட்டு ரீதியாக பங்குபற்ற மாகாண சபைகள் உரித்துடையவை என மாவை சேனாதிராஜா எடுத்துக்கூறியுள்ளார்.


இச்சட்டமூலங்கள் வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படாமல் அங்கீகரிக்கப்பட்டால் வட மாகாணத்தில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கும் அரசியலமைப்பின் 154ஜி(3) ஷரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டமாக்கல் செயன்முறைகளில் பங்காற்றுவதற்கான உரிமை பறிக்கப்படுவதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .