2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க வின் தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2011 நவம்பர் 29 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(உதய கார்த்திக், ஆர்.சுகந்தினி)

சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியும் 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் மக்களுக்கான நிவாரணம வழங்கப்படாதைக் கண்டித்தும் பறிமுதல் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த தேசிய எதிர்ப்புத்தின போராட்டம் நடைபெற்றது.

மருதானை, ராஜகிரிய, விஹாரமாதேவி பூங்கா  ஆகிய பகுதிகளிலிருந்து ஒழுங்கு செய்யப்பட்ட பேரணிகள் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்றுகூடின.  

இந்த தேசிய எதிர்ப்பு தினத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவிக்கையில்,

'இந்த அரசாங்கம் செய்யும் பல அநியாயங்களை தட்டிக்கேட்பதற்காகவே மக்கள் இன்று இங்கு கூடியுள்ளனர். சாதாரண மக்களின் பிரச்சினைகளை  உணராது, எந்தவித வாய்ப்புக்களையும் சாதாரண மக்களுக்கு வழங்காது இன்று தனிநபரொருவரின் வருமானம் 2,800 டொலரென கூறுகின்றனர். ஒரு தனிநபருக்காவது 3 இலட்சம் வருமானம் இருக்கின்றதாவென்று பார்த்தால் நூற்றுக்கு பத்து சதவீதமானவர்களுக்கு கூட இது இல்லாத நிலைமை காணப்படுகின்றது' என்றார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன் கருத்துத் தெரிவிக்கையில்,  

'இந்த அரசாங்கம் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.  ஒன்று தென்னிலங்கையிலுள்ள பிரச்சினை மற்றையது தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினை ஆகியவற்றையே இந்த அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. தென்னிலங்கையிலுள்ள பிரச்சினை பொங்கி வழிந்ததன் காரணமாகவே இன்று இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு  மூலகாரணமாக அமைந்துள்ளது.  

தென்னிலங்கையில் விலைவாசிகள் அதிகரித்துள்ளன.  தமிழ் மக்களைப் பாதித்த பயங்கரவாதத் தடைச்சட்டமும் அவசரகாலச் சட்டமும் சிங்கள மக்களையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

இருப்பினும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை  இதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கிலேயே  ஜனநாயக மக்கள் முன்னணி இந்த எதிர்ப்பு போராட்டத்;தில் கலந்துகொண்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினை மிக விரைவாக தீர்க்கப்பட வேண்டும். சிறையிலுள்ள குற்றஞ்சாட்டப்படாத தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய வேண்டுகோள்களை நாங்கள் இதில் முன்வைக்கின்றோம்.   

தேசிய இனப்பிரச்சினை மிக விரைவாக தீர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இதற்கான அடித்தளங்கள் ஏற்கெனவே இடப்பட்டுள்ளன' என்றார்.

இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன,

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டம் இந்த நாட்டை சர்வதேச நாடுகளின் பொருளாதார சக்திகளுக்கு பூஜை செய்யும் நாடாக மாற்றியுள்ளது.

2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தனியார் ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.

இந்த வரவு – செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கே அதிகமான நிதியொதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .