2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குற்றப்பிரேரணை மீள்பரிசீலனைக்கு ஜனாதிபதி, சபாநாயகரை வலியுறுத்த இ.ச.ச. தீர்மானம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 10 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விசாரணையைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
 
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் 24 வருடங்களின் பின்னர் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

நீதித்துறை தற்போது எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதன்போது 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் குற்றப்பிரேரணை தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் இவற்றின் அடிப்படையிலேயே இத்தீர்மானங்கள் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை தொடர்ந்து கொண்டுசெல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் மீண்டுமொருமுறை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரை கோருவதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாயின், அது நியாயமானதொரு விசாரணையாக அமைய வேண்டும்.

பிரச்சினைக்குரிய விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக சபாநாயகருடன் கலந்துரையாடுதல், குற்றப்பிரேரணை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

பிரதம நீதியரசர் வழங்கிய தீர்ப்புக்களை குற்றப்பிரேரணைக்குள் உள்ளடக்கி விசாரணைக்குட்படுத்தாதிருத்தல், இவ்வாறானதொரு விசாரணையின் போது ஆஜராகும் உரிமை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உண்டு. அந்த உரிமையை உறுதிப்படுத்துதல்.

மற்றும், விசாரணைகள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவை தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ சந்தர்ப்பம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .