2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறைச்சாலைகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவது முறையல்ல: கரு

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருப்பதானது என்னை ஆச்சரியப்பட வைத்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளரின் இக்கருத்தானது பிறிதொருவரின் தூண்டுதலின் பேரில் தெரிவிக்கப்பட்டதா அல்லது சுயமாக அவர் தெரிவித்ததா என்பதை அறியவிரும்புவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்…

“ஜனநாயக நாடொன்றின் சிறைச்சாலைகள் ஒருபோதும் பாதுகாப்பு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படுவதில்லை. இவ்வாறான நிகழ்வுகள் சர்வாதிகார ஆட்சியிலேயே இடம்பெறுவதுண்டு. ஜனநாயக நாட்டின் கைதிகள் மனிதாபமுடையவர்களாகவே கருதப்படுகிறார்கள். பொதுவாக இவ்வாறான கைதிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைந்து வாழச் செய்வதே ஜனநாயக நாட்டு சிறைச்சாலைகளின் கடமை.

சிறைச்சாலைகளும் பொலிஸ் சேவையும் இன்று தேவையற்ற அரசியல் தலையீடுகளால் சீரழிந்து வருகிறது. மோசமான குற்றவாளிகள் சிலர் – அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்குரியவர்களாக மாறியிருப்பதும் இத்தகைய சீர்கேட்டிற்கு காரணம் எனலாம்.

தற்போதைய சிறைச்சாலை ஆணையாளரின் நாடகங்களை நாங்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறோம். முன்னாள் இராணுவ தளபதி சிறையில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூட பார்க்கவிடாமல் செய்து சிறைச்சாலை சட்டங்களை மீறியிருந்தார். இதுபோன்ற சட்ட மீறல்கள் முன்னொருபோதும் நடந்ததில்லை.

அதுமட்டுமல்லாமல், கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பினையும் சிறைச்சாலைகள் ஆணையாளரே ஏற்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் வெலிக்கடையில் மட்டும் நடைபெறவில்லை. இலங்கையின் அனைத்து பாகங்களிலும் நடைபெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இது நிர்வாக சீர்கேட்டினை எடுத்துக் காட்டுகிறது” என்று கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல் சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு கடமை தவறிய அதிகாரிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்தார். (அஜித் சிறிவர்த்தன)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .