2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குற்றப்பிரேரணையை மறுபரிசீலனை செய்யவும்: ஐ.நா பிரதிநிதி கேப்ரியல்

Kanagaraj   / 2012 நவம்பர் 16 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐ.நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார்.

அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்துவதாக தெரிவித்திருக்கும் கேப்ரியல் க்னவுல், இது இலங்கை நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு என்கிற தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் நீதித்துறைகுறித்து விடுத்திருக்கும் விரிவான அறிக்கையில், இலங்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மீதான அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் தொடர்பில் அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பதில் நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளின் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமைவதாக கொள்ளவேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

சுயாதீன நீதிபதிகள் பழிவாங்கப்படக்கூடாது

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களோ மறைமுக அழுத்தங்களோ இல்லாமல் அவர்கள் தங்களின் தொழில்ரீதியிலான அலுவல்களை எந்தவித அச்சமும், முறையற்ற தலையீடும், வெளியார் அழுத்தங்களும் இல்லாமலும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமையும் வகையிலும் செய்யக்கூடிய சூழலை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

இலங்கையின் நீதித்துறை மீதான தாக்குதல்கள் மற்றும் தலையீடுகள் தொடர்பாக இலங்கை அரசு உண்மையான விசாரணைகளை நடத்துவதில்லை என்றும், இதை செய்தவர்கள் அதற்கு பொறுப்பாக்கப்படுவதில்லை என்றும் சுயாதீனமான மனித உரிமை நிபுணர்கள் அறிக்கை அளித்திருப்பதாகவும் கேப்ரியல் க்னவுல் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யமுடியாத தன்மையானது அந்நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை தாங்கும் முக்கிய தூணாக இருப்பதாகவும் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த கொள்கையில் தலையீடுகள் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கும் கேப்ரியல் க்னவுல், நவம்பர் முதல் தேதி இலங்கை நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் தொடர்பாக தனது சங்கடங்களையும் தெரிவித்திருக்கிறார்.

மிகமோசமான நடத்தைகள் அல்லது திறமையற்றதன்மை ஆகியவை காரணமாக மட்டுமே நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் அதுவும்கூட முறையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலான நியாயமான வழக்கு விசாரணைகள் நடந்த பின்னரே அது செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த வழக்கு நடைமுறைகளின் முடிவுகள் கூட சுயாதீனமான மீளாய்வுக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுயாதீனமான நீதிபதிகளை பழிவாங்குவதற்கான ஒரு வழிமுறையாக ஒழுங்காற்று நடவடிக்கைகளை பயன்படுத்துவதை ஏற்கமுடியாது என்றும் கேப்ரியல் க்னவுல் கண்டித்திருக்கிறார். (நன்றி பிபிசி)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .