2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டணிக்கு தேசியப் பட்டியல் நியமனம் இல்லை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

'புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசிய பட்டியல் நியமனம் இல்லை. அதற்கு பதிலாகவே பதுளை மாவட்டத்தில் அரவிந்தகுமாருக்கு வழங்கப்பட்ட வேட்பாளர் நியமனமும் கொழும்பு மாவட்டத்தில் சண் குகவரதனுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் வேட்பாளர் நியமனமும் பெற்றுக்கொள்ளப்பட்டன'  என தமிழ் முற்போக்கு கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

'இதுதேர்தல் நியமனங்களுக்கு முன்னர் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின்  தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்தைகளின் போது எடுக்கப்பட்ட முடிவாகும்' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப-செயலாளரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளருமான சண் பிரபாகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கூட்டணியின் தேசிய பட்டியல் நியமனங்களுக்கு அந்தனி லோரன்ஸ், எஸ்.விஜயசந்திரன், வி.புத்திரசிகாமணி, எஸ்.சிறிதரன், பொன்னுசாமி ஜெயபாலன், பிரியாணி குணரத்ன ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ஐ.தே.கவுடனான பேச்வார்தைகளின் போது, பதுளை மாவட்டம், கொழும்பு மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களின் வேட்பாளர் நியமனங்களில் கடும் முரண்பாடுகள் தோன்றின.

பதுளை மாவட்டத்தில் எமது வேட்பாளர் அரவிந்தகுமாருக்கும் கொழும்பு மாவட்டத்தில் எமது வேட்பாளர் சண்.குகவரதனுக்கும் நியமனம் வழங்க ஐ.தே.க தலைமை தயங்கியது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற அடிப்படையில் வேறு கட்சிகளை சார்ந்த புதிய பல வேட்பாளர்கள் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்ட காரணத்தினால், அனைத்து வேட்பாளர்களையும் உள்ளடக்க போதுமான இடமில்லாத நிலைமை ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையிலேயே, எம்மால் வழங்கப்பட்ட ஆறுபேர் கொண்ட பட்டியலில் திருமதி. பிரியாணி குணரத்னவின் பெயரை மாத்திரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக தலையிட்டு ஐ.தே.க தேசிய பட்டியலில் சேர்த்துக்கொண்டார். இதற்கு பதிலாக பதுளையில் எஸ்.அரவிந்தகுமாருக்கும், கொழும்பில் சண். குகவரதனுக்கும் வேட்பாளர் நியமனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

தேர்தல் பிரசார வேளையில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் எவராவது வெற்றி பெற முடியாத நிலைமை ஏற்படும் பட்சத்தில், விசேட ஏற்பாட்டின் பேரில் அவர்களுக்கு தேசிய பட்டியல் நியமனம் வழங்க பிரதமர் உடன்பட்டிருந்தார். அந்த அடிப்படையிலேயே அவர் பிரியாணி குணரத்னவின் பெயரை, ஒரு தற்காலிக ஏற்பாடாக தமது ஐ.தே.கவின் தேசிய பட்டியலில் சேர்த்துக்கொண்டார்.  ஆனால் தற்போது அதற்கான அவசியம் ஏற்படவில்லை.

எமது கூட்டணியின் தேர்தல் பிரசார வியூகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்ற காரணத்தினால், இந்த உடன்பாடு தொடர்பில் தேர்தல் காலக்கட்டத்தில் நாம் பகிரங்கமாக கருத்து கூறவில்லை. எனினும் இதை ஒரு காரணமாக கொண்டு இன்று மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு பிரிவினர் தொடர்ச்சியாக எமக்கு எதிராக துர்பிரசாரம் செய்து வந்தனர். எமது கூட்டணி தலைமைகளின் முடிவுகள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர்.   

ஜூன் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆரம்ப தினத்தன்றே கூட்டணியில் இடம்பெறும் மூன்று கட்சிகளுக்கு இடையே முதற்கட்டமாக, ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொண்டது. அடுத்த கட்டமாக, இரண்டே மாதங்களுக்குள் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி கண்டு நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் இருந்து ஆறு உறுப்பினர்களை பெற்றுள்ளது.

அதேபோல் இரத்தினபுரி, கம்பஹா மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இவற்றின் மூலம் நமது கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ள நமது மக்கள், கூட்டணிக்கு வடக்கு, கிழக்குக்கு  வெளியே செயற்படும் பெரும் தமிழ் அரசியல் அமைப்பு என்ற அந்தஸ்த்தை கொடுத்துள்ளார்கள். அடுத்த கட்டமாக, இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள நமது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், பலமிக்க உறுதியான ஒரு அணியாக புதிய நாடாளுமன்றத்தில் செயலாற்றுவார்கள்.

இதையடுத்த கட்டமாக விரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணியை, ஒரு தனியான அரசியல் அமைப்பாக தேர்தல்கள் ஆணையாளர் செயலகத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என்று கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .