2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் சமூகத்தின் முள்ளந்தண்டை முறிக்கும் முயற்சி

முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெறுவதற்கு, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், ஆகக் குறைந்தது ஐந்து சதவீதத்தைக் கட்சி அல்லது சுயேட்சை குழுவொன்று பெறவேண்டும் எனும் தற்போதைய சட்டத்தை, 12.5 சதவீதம் பெற வேண்டும் என மாற்றுவதற்காகவே, 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.  

இந்தத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்பட்டால், சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், நாடாளுமன்றப் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதில், பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளும் என அஞ்சப்படுகிறது.  

இதை, இன்னும் சற்று வெளிப்படையாகச் சொன்னால், தமிழர், முஸ்லிம் சமூகங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான உள்நோக்கத்துடனேயே, இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.   

வரலாறு  

நாடாளுமன்ற உறுப்பினரைப் பெறுவதற்கான தகைமையாக, கட்சி அல்லது சுயேட்சைக் குழுவொன்று, மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐந்து சதவீதத்தைப் பெறவேண்டும் என்று, நடைமுறையிலுள்ள அரசமைப்பில் கூறப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில், 12.5 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்றுதான் இருந்தது.  

1978ஆம் ஆண்டின் அரசமைப்பின் 99(5)(அ) உறுப்புரையில், ‘ஏதேனும் தேர்தல் மாவட்டத்தில் நடைபெறும், ஏதேனும் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், எட்டிலொன்றுக்குக் குறைவான வாக்குகளைப் பெறும், ஒவ்வோர் அங்கிகரிக்கப்பட்ட அரசியற் கட்சியும் சுயேட்சைக் குழுவும் அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கு, அதனது வேட்பாளர் எவரையும் தேர்ந்தனுப்பத் தகைமையிழத்தல் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

பின்னர்தான், 12.5 எனும் வெட்டுப் புள்ளி, ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதுவும், சும்மா நிகழ்ந்து விடவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் இராஜதந்திரம் மூலம்தான் அந்த வெற்றி கிடைத்தது.   

முஸ்லிம் தலைவர் ஒருவர் மூலம் கிடைத்த இந்த நன்மையைச் சிறுபான்மைச் சமூகங்கள் மட்டுமன்றி, ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற சிங்களக் கட்சிகளும் அனுபவித்துக் கொண்டிருப்பதுதான் முரண்நகையாகும்.   

அஷ்ரப் கேட்ட வரம் 

1988ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருந்த காலமது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக, அப்போதைய பிரதம மந்திரி ரணசிங்க பிரேமதாஸ வேட்பாளராகக் களமிறங்கி இருந்தார். அப்போது முஸ்லிம் காங்கிரஸுக்கு இருந்த ஆதரவையும் அவதானித்த பிரேமதாஸ, ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைத் தனக்கு வழங்குமாறு அஷ்ரப்பிடம் கேட்டுக் கொண்டார்.   

அப்போது அஷ்ரப், சில கோரிக்கைகளை முன்வைத்தார். அவற்றில் ஒன்றுதான், ‘தேர்தலொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெறுவதற்கு, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், 12.5 சதவீதம் பெற வேண்டும் என்பதை, ஐந்து சதவீதம் என மாற்ற வேண்டும்’ என்கிற கோரிக்கையாகும்.  

அக்கோரிக்கையை பிரேமதாஸ நிறைவேற்றிக் கொடுத்தார். அதற்காக, அரசமைப்பில் 15ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரணசிங்க பிரேமதாஸவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கியது.   

பெரிய கட்சிகளின் நியாயங்கள்  

நாடாளுமன்ற உறுப்பினரைப் பெறுவதற்கான தகைமையாக, கட்சி, சுயேட்சைக் குழுவொன்று, மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில், ஐந்து சதவீதத்தைப்  பெறவேண்டும் என்கிற நிலைமை காரணமாக, சிறிய கட்சிகளும் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஓரளவு கணிசமான எண்ணிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று வருகின்றன.  

இந்த நிலைமை காரணமாக, நாடாளுமன்றில் பெரிய கட்சிகளுக்கு, அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாது போகிறது. அதனால், பெரிய கட்சிகளுக்குத் தனியாக ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலைமை உருவாகிறது. எனவே, கூட்டாட்சி அமைக்கும் பொருட்டு, சிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளிடம் கையேந்தும் நிலைமை உருவாகிறது.  மேலும், ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கும் பொருட்டு, பெரிய கட்சிகளிடம் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், பேரம் பேசத் தொடங்குகின்றன.  இந்த நிலைவரமானது, தனியொரு கட்சி, ஸ்திரமான ஆட்சியொன்றை அமைப்பதில், சிக்கல்களை உருவாக்கியுள்ளது.    

எனவேதான், இந்த நிலைமைக்கு முடிவு கட்டி, நாடாளுமன்றத் தேர்தலில், பெரிய கட்சிகள் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறவேண்டுமென்றால், தற்போதுள்ள ஐந்து சதவீதம் எனும் வெட்டுப்புள்ளியை, 12.5 சதவீதமாக மாற்ற வேண்டும் என்பது, ஒரு சாராரின் நியாயமாக இருக்கிறது.   

அதற்காக, சிறுபான்மை இனங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையானது, எந்த விதத்திலும் நியாயமில்லை. தற்போது 05 வீத வெட்டுப்புள்ளி நடைமுறையில் உள்ள போதே, சிறுபான்மையினங்கள் தமது சனத்தொகை வீதத்துக்கு ஏற்ப, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறமுடியாத நிலைவரம் ஏற்படுகிறது.   

எனவேதான், “பிரதான அரசியல் கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை இல்லாது செய்யும் வகையில், முன்வைக்கப்பட்டுள்ள இந்த அரசமைப்புத் திருத்த யோசனையை, தோல்வியடையச் செய்வதற்கு, நாட்டு மக்கள் முன்வர வேண்டும்” என்று மனோ கணேசன் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.   

குறி வைக்கப்படும் முஸ்லிம்கள்  

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினரைப் பெறுவதற்கான தகைமையாக, கட்சி, சுயேட்சைக் குழுவொன்று, மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 12.5 சதவீதத்தைப் பெறவேண்டும் என்கிற திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், அந்நிலைமையானது, தமிழர்களை விடவும் முஸ்லிம்களுக்கே, அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.   

அதனால், முஸ்லிம்களைக் குறி வைத்துத்தான், இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறதா என்கிற அச்சமும் எழுந்துள்ளது. 

முஸ்லிம் சமூகத்தின், நாடாளுமன்ற உறுப்பினர் தொகையைக் குறைப்பதற்கான உள்நோக்கத்துடன்தான், இந்த வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கான திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுகிறது என்கிற ஐயம் எழுவதற்கு காரணங்களும் இருக்கின்றன.  

முஸ்லிம் தனியார் திருமணச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமொன்றை அத்துரலியே ரத்தன தேரர் முன்வைக்கவுள்ளார். அதேபோன்று, திருமணத்துக்கான ஆகக்குறைந்த வயதை, 18ஆக மாற்றுவதற்கான சட்டமூலமொன்றை துஷித விஜேமன்ன கொண்டுவரவுள்ளார். இவற்றுக்கான, வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.  இவற்றின் தொடர்சியாகவே, வெட்டுப் புள்ளியை 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்குரிய சட்டமூலத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.   

“இலங்கை, தனி பௌத்த இராட்சியம் என்கிற கொள்கையைக் கொண்டவர்கள், தாங்கள் ஆட்சியமைக்கும் போது, சிறுபான்மையினரின் உதவியில் தங்கியிருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அந்த நிலையை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, இந்தச் சட்டத் திருத்தத்தைப் பார்க்க முடிகிறது” என்று  சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் தெரிவிக்கின்றார்.  

விஜேதாஸ என்ன சொல்கிறார்?  

இதேவேளை, தான் கொண்டுவரவுள்ள 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், விஜேதாஸ ராஜபக்‌ஷ கருத்துத் தெரிவிக்கையில், “கட்சிகளைப் பெரியவை, சிறியவை என்று வகைப்படுத்த முடியாது. எல்லாம் ஒரே மாதிரியான கட்சிகள்தான். இந்தக் கட்சிகள், கொள்கையொன்றை அடிப்படையாக வைத்திருக்க வேண்டும். மதத்தையும் இனத்தையும் அடிப்படையாகக் கொண்டு கட்சிகள் இருந்தால், அங்கு பிரிவினை உருவாகும். இந்தக் கட்சிகள் வளர்வதற்கு இடமளித்தால், அடிப்படைவாதம் உருவாகும். அவ்வாறான நிலைமை, எமது நாட்டை அழித்து விடும்” என்று கூறியிருக்கின்றார்.  

இந்தக் கூற்றின் ஊடாக, எந்தக் கட்சிகளையெல்லாம் அவர் இலக்கு வைத்து, 21ஆவது திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.   

சாத்தியங்கள்  

எவ்வாறாயினும், விஜேதாஸ ராஜபக்‌ஷ கொண்டுவரவுள்ள அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும். ஆனால், இப்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. எனவே, எதிர்க்கட்சியினரின் ஆதரவும் கிடைத்தால்தான் இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்.  

எவ்வாறாயினும் ஜே.வி.பி., சிஹல உறுமய போன்ற சிறிய கட்சிகளும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாளிக்க மாட்டாது என நம்பலாம்.   

“இந்தச் சட்டமூலத்தை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் என்று நம்பலாம். 12.5 எனும் வெட்டுப் புள்ளியை, அரசமைப்பினூடாக அறிமுகப்படுத்தியவர்களே ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள சிறிய கட்சிகள், பேரம் பேசுவதால், ஐ.தே.கதான் அண்மைக் காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது”  என்று சட்டத்தரணி பஹீஜ் விவரிக்கிறார்.   

முஸ்லிம் சமூகத்தின் பலம் என்பது, நாடாளுமன்றில் அந்தச் சமூகத்தினர் கொண்டுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் தங்கியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் முள்ளந்தண்டை முறிக்கும் முயற்சிதான், அந்தச் சமூகத்தினர் பெறக்கூடிய, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும்.   

21ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றின் இப்போதைய பதவிக் காலம் போதாது என்று கூறப்படுகிறது. ஆனால், அடுத்து அமையவுள்ள நாடாளுமன்றிலும் இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சாத்தியங்களையும் புறந்தள்ளி விட முடியாது.   

இதை மனதில் வைத்துக் கொண்டு, சிறுபான்மைச் சமூகங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள், தமது ஆட்டங்களை அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.  

சிறுபான்மையினருக்கு கட்சிகள் ஏன் தேவை?

நாட்டில் 70 சதவீதம் பெரும்பான்மைச் சனத்தொகையைக் கொண்ட தாங்கள், சிறுபான்மையினரின் தயவின்றி, ஜனாதிபதியைத் தெரிவுசெய்யவேண்டும் என்ற இலக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஓரளவு வெற்றி அடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே இலக்கை அடைவதற்கான திட்டமாகவே, 21ஆவது திருத்தச் சட்டமூலம் அமைந்துள்ளது என்று, சட்டமுதுமாணி வை.எல்.எல். எஸ். ஹமீட் தெரிவிக்கின்றார்.  

 “ஆட்சியாளரைத் தீர்மானிப்பதில்கூட, சிறுபான்மைச் சமூகங்களுக்கு இடம் தரமாட்டோம் என்பதுதான், இந்த ‘வெட்டுப்புள்ளி உயர்த்தல்’ திட்டத்தின் பின்னணியாகும்” என்றும் அவர் கூறுகின்றார்.  

 “விகிதாசாரத் தேர்தல்முறையின் கீழ், அதிகமான சந்தர்ப்பங்களில் பெரிய கட்சிகளுக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மைக்குச் சற்றுக் குறைவு ஏற்படுகின்றது. அந்தக் குறையை நிரப்புகின்ற பணியைத்தான், சிறுபான்மைக் கட்சிகள் செய்கின்றன.  சிறுபான்மைக் கட்சிகள், சுயமாக ஆட்சியைத் தீர்மானிப்பதில்லை. சிறுபான்மைக் கட்சிகள் விரும்பினால், ஜே. வி. பியை ஆட்சிக்குக் கொண்டுவர முடியுமா? அவ்வாறு முடியுமென்றால், பெரும்பான்மை சமூகம் நிராகரித்த ஒரு கட்சியை, சிறுபான்மைக் கட்சிகள் ஆட்சிக்குக் கொண்டுவருகிறார்கள்; அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, பெரும்பான்மையினர் கூறலாம்”.  

 “மாறாக, பெரும்பான்மைச் சமூகம், அண்ணளவாகச் சமமான முறையில், இரு பிரதான கட்சிகளுக்கும் வாக்களிக்கின்றபோது, அவற்றில் ஒன்றுக்குத்தான், சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கி, ஆட்சி பீடமேற்றுகிறார்கள். உதாரணமாக, ஒரு கட்சி 105 ஆசனங்களையும் இன்னுமொரு கட்சி 95 ஆசனங்களையும் பெறும்போது, அவற்றில் ஒன்றுக்குத்தான் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன. இவை இரண்டும், பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சிகள் இல்லையா? பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவைப்பெற்ற ஒரு கட்சிக்கு, சிறுபான்மைக் கட்சிகளும் ஆதரவு வழங்குவதன் மூலம், அவ்வாட்சியில் அவர்கள் பங்காளர்களாகக் கூடாதா?” என்று கேள்வியெழுப்புகின்றார் சட்ட முதுமாணி ஹமீட். 

அவர் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பாக  விவரிக்கும் போது, “இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம், ஒரு கட்சி நாடாளுமன்றில் உறுப்பினர்களை 105 உம் இன்னுமொரு கட்சி 95 உம் பெறும்போது, சிறுபான்மைக் கட்சிகள், ஒருபோதும் 95 ஆசனங்களைப் பெற்ற கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதில்லை. மாறாக, 105 பெற்ற கட்சியையே வரலாற்றில் எப்போதும், ஆட்சிக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். 1988ஆம் ஆண்டு, ஐ.தே.க தனிப்பெரும்பான்மை பெற்று தனியாட்சி அமைத்தது. 1994ஆம் ஆண்டு, அதிகூடிய ஆனால், 113 இற்குக் குறைந்த ஆசனம்பெற்ற மக்கள் முன்னணி ஆட்சிமையத்தது. 2000ஆம் ஆண்டு, மீண்டும் அதிகூடிய, ஆனால் 113 இற்குக் குறைவான ஆசனம்பெற்ற மக்கள் முன்னணி ஆட்சியமைத்தது. 2001ஆம் ஆண்டு, அதிகூடிய ஆனால், 113 இலும் குறைவான ஆசனம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, ஆட்சியமைத்தது. 2004 ஆம் ஆண்டு, அதிகூடிய ஆனால், 113 இலும் குறைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அமைந்தது. 2010ஆம் ஆண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், தனிப்பெரும்பான்மை மூலம் தனியாட்சி அமைத்தது. 2015ஆம் ஆண்டு, அதிகூடிய ஆனால், 113 குறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அமைத்தது”.   

“இங்கு தெளிவாவது, பெரும்பான்மைச் சமூகம், முதலாவதாகத் தெரிவுசெய்த தேசிய கட்சிதான், எப்போதும் ஆட்சி அமைத்திருக்கிறது. சிறுபான்மைக் கட்சிகள் ஒருபோதும், ஆட்சியைத் தெரிவு செய்யவில்லை. மாறாக, அவ்வாறு பெரும்பான்மைச் சமூகம் முதலாவதாகத் தெரிவுசெய்த கட்சிக்கு ஏற்பட்ட ஆசனக் குறைவை, நிவர்த்தி செய்யவே சிறுபான்மைக் கட்சிகள் உதவி செய்திருக்கின்றன. இது குற்றமா? அவ்வாறு சிறுபான்மைக் கட்சிகள் செய்கின்ற உதவிக்கு, உபகாரமாக, தான் சார்ந்த சமூகத்தின் சில நியாயமான குறைபாடுகளை முன்வைத்து, தீர்வை வேண்டுவது குற்றமா? துரதிர்ஷ்டவசமாக, மர்ஹும் அஷ்ரப்புக்குப்  பின்னர், முஸ்லிம் கட்சிகள் சமூகத்துக்காகப் பேரம் பேசவுமில்லை; அவ்வாறு பேசி, எதையும் சாதிக்கவுமில்லை. தேசியக் கட்சிகள், சிறுபான்மையினரை நியாயமாக நடத்தியிருந்தால், அவர்களது பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கியிருந்தால், ஏன் பேரம்பேச வேண்டும்? முஸ்லிம்களுக்காக ஒரு கட்சி உருவாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமது சமூகத்தில் சகலருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கு முன்னர், அமரர் தொண்டமான் கட்சி தொடங்கியிருந்தாரே, ஏன்? அவரது சமூகம் நியாயமாக நடத்தப்பட்டிருந்தால் கட்சி தொடங்கியிருப்பாரா? வடக்குக் கிழக்குப் பிரச்சினை தொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் பேசியபோது, முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டார்களா, ஏன் உள்வாங்கப்படவில்லை? முஸ்லிம்கள், ஒரு தனிக்கட்சி இல்லை என்பதால், வட்டமேசை மாநாட்டில் அவர்களுக்கு இடம் மறுக்கப்படவில்லையா? இவை தொடர்பாக, பேரம்பேசுவது தவறா? ஒரு சமூகம் தனது குறைகளை அரசாங்கத்திடம் பேசி, நிவர்த்தி செய்ய முற்படுவது தவறா? அதற்காக அவர்களுக்குக் கட்சிகள் இருக்கக்கூடாதா? கட்சிகள் இருக்கும்போதே, இத்தனை குறைபாடுகள் என்றால், கட்சிகள் இல்லாதபோது, ஆட்சியாளர்களே சிறுபான்மையினரின் குறைபாடுகளைச் சுயமாகத் தீர்த்து வைப்பார்களா?” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .