2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டில் உலகின் முன்னணி இடத்துக்குப் போட்டியிடும் இலங்கை

Super User   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே.சஞ்சயன்

லகில் பரப்பளவு ரீதியாக 121ஆவது இடத்தில் உள்ள நாடு இலங்கை. ஆனால் பாதுகாப்புக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 60 ஆவது இடம்.

இது 2009ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான நிலைமை. அடுத்த வருடம் இலங்கை இந்தப் பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணப்போகிறது.

2009ஆம் ஆண்டை விடவும் 2010ஆம் ஆண்டில் இலங்கையின் பாதுகாப்புச் செலவு 2,500 கோடி ரூபாவினால் அதிகரித்திருந்தது.

அடுத்த வருடம் பாதுகாப்புச்செலவு 1,300 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்போகிறது.  இந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் கிட்டத்தட்ட 3,800 கோடி ரூபாவினால் அதிகரிக்கின்ற நிலையில், இந்தப் பட்டியலில் இலங்கை மேலும் முன்னேறும் வாய்ப்புகள் அதிகம்.

உலகில் பரப்பளவு ரீதியாக 121 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை, பாதுகாப்புச் செலவின் அடிப்படையில் தன்னை விடவும் பெரிதான சுமார் 60 நாடுகளை முந்திக் கொண்டு முன்னே வந்து நிற்கிறது.

அதைவிட, 2009ஆம் ஆண்டு பாதுகாப்பு செலவினம் மற்றும் 2008ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் – இலங்கை பாதுகாப்புக்காக அதிகம் முன்னணி நாடுகளில் ஒன்றாகியுள்ளது.

இலங்கை 2008ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிட்டுள்ளது.
ஆனால் உலகில் முதல்நிலை வல்லரசான அமெரிக்காகவோ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதத்தைத் தான் பாதுகாப்புக்காக ஒதுக்கியுள்ளது.

இலங்கைக்கு முன்னே உள்ள 59 நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைப் பாதுகாப்புக்காகச் செலவிடும் நாடுகள் வெறும் எட்டே எட்டுத் தான்.

ஆக, உலகில் பாதுகாப்புக்காக அதிக நிதியையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக சதவீதத்தையும் பாதுகாப்புக்கு ஒதுக்கும் முன்னணிப் பத்து நாடுகளை வரிசைப்படுத்தினால் இலங்கைக்கு ஒன்பதாவது இடம் கிடைக்கும்.

இந்தப் பட்டியலில் இந்தியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற முன்னணி நாடுகள் கூட இடம்பிடிக்காது. சின்னஞ்சிறிய இலங்கைத் தீவு பாதுகாப்புக்காக எவ்வளவு நிதியை செலவிடுகிறது என்பதைத் தெளிவுபடுத்த இது போதுமானது.

2011ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு 21,521 கோடி 96 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படவுள்ள நிதியில், இராணுவத்துக்கு அதிகபட்சமாக 10,929 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
 
கடற்படைக்கு 3,066 கோடி ரூபாவும், விமானப்படைக்கு 2,069 கோடி ரூபாவும், பொலிஸ் திணைக்களத்துக்கு 3,437 கோடி ரூபாவும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு 877 கோடி ரூபாவும், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு 11 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

2011ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதற்கு சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 போர் முடிவுக்கு வந்த பின்னர், பாதுகாப்புச் செலவினம் குறைந்து விடும் என்று எதிர்பார்த்த நாட்டு மக்களுக்கும் சரி, வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கும் சரி இது அதிர்ச்சியான செய்தியாகவே அமைந்துள்ளது.

போர் முடிவுக்கு வந்தால் சரி, அதற்குப் பின்னர் அதன் சுமையை நாட்டு மக்கள் சுமக்க வேண்டியிருக்காது என்ற கருத்தை அரசாங்கம் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருந்தது. அந்த எதிர்பார்ப்பு உடைந்துபோனதே இந்த அதிர்ச்சிக்கான காரணம்.

2010இல் பாதுகாப்பு அமைச்சின் மூலதனச் செலவுக்கு 1,093 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. அது அடுத்த வருடம் 1,321 கோடி ரூபாவாக அதிகரிக்கப் போகிறது. 2010இல் 19,129 கோடி ரூபாவாக இருந்த பாதுகாப்பு அமைச்சின் மீண்டெழும் செலவினம், அடுத்த ஆண்டில்  20,200 கோடி ரூபாவாக அதிகரிக்கிறது.

இந்தக் கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஒரு காரணம் கூறியிருக்கிறார்.

'வடக்கில் போர் இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த போது பெருந்தொகையான பல்குழல் பீரங்கிகள் தேவைப்பட்டன. அவை சில குறிப்பிட்ட நாடுகளிடம் இருந்து நட்புறவு அடிப்படையில் வாங்கப்பட்டன. தொலைபேசியில் கொள்வனவுக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வாங்கப்பட்ட பல்குழல் பீரங்கிகள் போன்ற ஆயுதங்களுக்கான பணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் தான் பாதுகாப்புச் செலவு அதிகரித்துள்ளது...' என்று அவர் கூறியிருந்தார்.

போர் முடிவடைந்தாலும் ஆயுதங்களை வாங்குவதற்காகப் பட்ட கடனை அடைப்பதற்கு அதிகம் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது என்பதே அவரது வாதம்.



ஆனாலும், 2010ஆம் ஆண்டை விட, 2011ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் மூலதனச் செலவு 228 கோடி ரூபாவினால் அதிகரித்திருக்கிறது. இது பட்ட கடனை அடைப்பதற்கானது அல்ல- வாங்கப் போகும் ஆயுதங்கள் போன்ற சொத்துகளுக்கானது.

அண்மையில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அளித்திருந்த பேட்டி ஒன்றில், 'தற்போது எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லையென்பதால் புதிதாக எந்த நவீன ஆயுதங்களையோ, கருவிகளையோ கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போதுள்ள ஆயுதங்களைக் கொண்டே உள்நாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்கலாம்' என்று கூறியிருந்தார்.

ஆனாலும் அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சின் மூலதனச் செலவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது ஆச்சரியத்தைக் கொடுப்பதாகவே உள்ளது.

போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும்- அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்காததற்கு, ஏற்கனவே கடனுக்கு வாங்கிய ஆயுதங்களுக்கான வட்டி மற்றும் கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளதும் ஒரு காரணம்.

மற்றொரு காரணம், பிரமாண்டமாக வளர்ந்துவிட்ட பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை. தற்போது இலங்கை இராணுவத்தில் மட்டும் 203,000 பேர் இருக்கின்றனர். கடற்படையில் சுமார் 48,000 பேரும், விமானப்படையில் சுமார் 29,000 பேரும் இருக்கின்றனர்.

முப்படைகளினதும் ஆட்பலம் மட்டும் கிட்டத்தட்ட 280,000 ஆகியுள்ள நிலையில் சிவில் பாதுகாப்புப் படை, பொலிஸ் என்று வேறு இருக்கின்றன. போர்க்காலத்தில் தேவைப்பட்டது மிகப் பெரிய படைக்கட்டமைப்பு.

தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட படையினரை அதே வேகத்தில் குறைக்க முடியாது. அதேபோல அவர்களுக்கு வழங்கிய சலுகைகள், வசதிகள் போன்றவற்றையும் சடுதியாகக் குறைக்க முடியாத நிலை உள்ளது.

படையினருக்கான சம்பளம், அடிப்படைத் தேவைகள், வசதிகளுக்காக மாதாந்தம் பெருந்தொகைப் பணம் செலவாகிறது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருடாந்தம் ஒரு மில்லியன் சோடி சப்பாத்துகள் தேவைப்படுகின்றன என்றால், ஏனைய தேவைகள் எப்படியிருக்கும் என்று ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

போர் முடிவுக்கு வந்து விட்டால் போதும், நாட்டை அபிவிருத்தி செய்து விடலாம் என்று அரசாங்கம் கூறியது உடனடிச் சாத்தியமான விடயமல்ல என்பது இப்போது தான் பலருக்கும் தெரியவருகிறது.

போர் என்பது ஒரு சகதி போன்றது. அதில் வைத்த காலை எடுப்பது இலகுவானதல்ல. அப்படி எடுத்தாலும் அதைக் கழுவுவி விடுவது இலகுவாக இருக்காது.

இதைப் பாதுகாப்பு அமைச்சின் பிரமாண்டமான நிதி ஒதுக்கீடுகளில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

அதேவேளை பாதுகாப்பு அமைச்சுக்கு அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டாள்தனமானது என்று விமர்சித்துள்ளது.

'இன்னொரு போரை எதிர்பார்த்து அதிக நிதியை ஒதுக்குகிறது. போர் முடிந்த பின்னர் பாதுகாப்புச் செலவு குறைவதே உலகியல் வழக்கம். ஆனால் இலங்கையில் அதற்கு மாறாகவே நடக்கிறது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

உலகப் பொருளாதார நிலைமை தற்போது செழிப்பான நிலையில் இல்லை என்பது தெளிவு.

இதன் காரணமாக பிரிட்டனே படைக்குறைப்பு, பாதுகாப்புச் செலவினக் குறைப்பு என்று இறங்கியுள்ளது.

ஆனால், கடன்பட்டு சீவியம் நடத்தும் இலங்கையோ பாதுகாப்புச் செலவினத்தை அதிகரிப்பதில் மற்றைய நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் உள்ளது.

இந்த நிலையானது அபிவிருத்தி நோக்கிய பாதையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லுமா என்ற கேள்வியை பொருளியலாளர்கள் மத்தியில் எழுப்ப வைத்துள்ளது.

நாட்டின் மொத்த செலவினங்களில் சுமார் 20 சதவீதத்தைப் பாதுகாப்புப் செலவீனமே விழுங்கி ஏப்பம் விடுகிறது.

இதன் காரணமாக கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும், அபிவிருத்திக்கான ஏனைய நிதி ஒதுக்கீடுகளும் குறைவடைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பாதுகாப்புச் செலவின அதிகரிப்பினால் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறைவடைந்து வருகிறது.

2007இல் கல்வி அமைச்சுக்கு 8,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. 2008இல் அது 5,200 கோடியாகக் குறைந்தது. 2009இல் 4,600 கோடியாகக் சுருங்கியது. அடுத்த வருடத்தில் 3,720 கோடி ரூபாவாகக் குறையப் போகிறது.

வருடாந்தம் சனத்தொகை அதிகரிப்புக்கேற்ப மாணவர்களின் தொகையும் அதிகரிக்கிறது. ஆனால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் குறைந்து செல்கிறது.

அதேவேளை பாதுகாப்புக் கட்டமைப்புகள் விரிவாக்கப்படும்போது அதற்கேற்ப நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கின்றன.

இந்தக் கட்டத்தில் இலங்கை அரசு போருக்குப் பின்னர் மீள் எழுச்சி காண்பதற்கு இருக்கின்ற வழிகளைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. பாதுகாப்பு அமைச்சை வளர்த்தெடுப்பதில் தான் அதன் கவனம் அதிகமாக உள்ளது.

இது ஏனைய அபிவிருத்திச் சுட்டிகளைப் பாதிக்கும். அது பொருளாதார ரீதியாக இலங்கையை மேலும் பின்னுக்குத் தள்ளவே உதவப் போகிறது.

எவ்வாறாயினும் அடுத்த சில ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவினம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டு விடும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.  இதையே தான் அரசாங்கம் முன்னரும் கூறியது.

ஆனால்,அது நடக்கும் என்று நம்புகின்ற நிலையில் நாட்டு மக்கள் இப்போது உள்ளார்களா என்பது கேள்விக்குறிதான்.


You May Also Like

  Comments - 0

  • Thilak Sunday, 24 October 2010 11:43 PM

    யுத்தம் இல்லாவிட்டாலும் பாண்விலை முதல் அனைத்துப் பொருட்களினதும் விலைகளும் அதிகரித்துச் செல்வதற்கு காரணம் புரிகிறது.

    Reply : 0       0

    xlntgson Monday, 25 October 2010 10:02 PM

    இது எல்லா சிறிய நாடுகளுக்கும் ஒரு சாபக்கேடான விடயம். யாராவது ஏதாவது ஒரு கோரிக்கையை முன் வைத்து போராட தொடங்கிவிட்டால் பாதுகாப்பை பலப்படுத்துவதை தவிர அரசுகளுக்கு வேறு கவனம் எதுவும் இல்லாமல் போய்விடும். தலைவர்கள் கொல்லப்படுவதும் கூட இதனால் தான்.
    ஆயுத உற்பத்திநாடுகள் போராடும் குழுக்களுக்கு
    சமயத்தில் இரு தரப்பினருக்கும் கூட ஆயுதங்களை வழங்கி தங்களது வியாபாரத்தை தொடர்கின்றன.
    மனித உயிர்கள் பலியாவது அவர்களுக்கு ஒரு சோதனைசாலை சோதனை பரிசோதனை மாதிரிதான். விக்கிலீக்ஸ் (vikileaks) என்னும் அமெ. இராணுவகோப்புகள் போல்

    Reply : 1       1


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .