2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி அரசியல் பண்ணும் தமிழக நடிகர்கள்

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் "40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் இடத்தில் கூட ஜெயிக்கக் கூடாது" என்று அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தீர்மானம் போட்டிருக்கிறார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சரத்குமார், "இப்படிச் சொல்வதால் நான் ஏதோ ஜால்ரா தட்டுகிறேன் என்று பேசுவார்கள். நல்லாட்சி செய்யும் அரசுக்கு ஜால்ரா தட்டுவதில் தவறில்லை" என்று அ.தி.மு.க. அரசுக்கு அளித்துவரும் ஆதரவிற்கு காரணம் கூறியிருக்கிறார்.
 
சரத்குமார் தனிக் கட்சி என்றாலும், அவருக்கு எம்.ஜி.ஆர் மீது பாசம் உண்டு என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். அதனால்தான் இந்த பிறந்தநாள் கூட்டத்தில் கூட, "சென்னையின் புதிய விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க வேண்டும்" என்று தீர்மானம் போட்டிருக்கிறார். ஏற்கனவே உள்ளூர் விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்திருக்கின்றன. ஆகவே, அந்த புதிய விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் இக்கோரிக்கை முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கும் போது, காமராஜர் புகழ் பாடும் சரத்குமார் தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் "விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
 
இப்படி கோரிக்கை வைப்பது சரத்குமாருக்கே சிக்கலாக முடிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால் "எம்.ஜி.ஆர்" பெயரைச் சொல்லி அரசியல் பண்ணும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அ.தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். ஏன் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே கூட அப்படித்தான் உறுதியுடன் கருதுகிறார். ஏனென்றால் அ.தி.மு.க.வை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அந்த வகையில் அவர் புகழ் பாடுவது தங்களுக்கு மட்டுமே உண்டு என்று நினைப்பதில் தவறு ஏதுமிருக்க முடியாது. ஆனால் எம்.ஜி.ஆர் பெயரை மற்றவர்கள் பயன்படுத்துவதில் அ.தி.மு.க.வினருக்கு எப்போதுமே எரிச்சல் உண்டு. ஏனென்றால் எம்.ஜி.ஆரின் முகத்தை அடிப்படையாக இருக்கும் அ.தி.மு.க. வாக்கு வங்கிக்கு அவர்கள் குறி வைக்கிறார்களோ என்ற சந்தேகமே அதற்கு காரணம். இதனால் அ.தி.மு.க.வுடன் ஐக்கியமாக நினைத்தவர்கள் பலர் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி அந்த முயற்சியில் அனைவரும் தோல்வி பெற்றிருக்கிறார்கள் என்பதே கடந்த காலம் காட்டும் உண்மை.
 
1987இல் எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. இரு கட்சிகளாக பிளவுபட்டது. அ.தி.மு.க. (ஜா) அணி என்றும், அ.தி.மு.க. (ஜெ) அணி என்றும் தேர்தல் களத்தில் நின்றது. அதில் எம்.ஜி.ஆரின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையிலான அணி தோல்வியைக் கண்டது. 1989 சட்டமன்ற தேர்தலில் அந்த இரு அணிகளும் பிரிந்து நின்றதால், தி.மு.க. வெற்றி பெற்றது என்று கருதினார்கள். இரு அணிகளும் ஓரணியாகி ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவானது. அதற்கு அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பிய மறைந்த ராஜீவ் காந்தியின் முயற்சியும் ஒரு காரணம். அடுத்த கட்டமாக, எம்.ஜி.ஆரின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்த ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர், நாவலர் நெடுஞ்செழியன், கா.ராஜாராம், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட பல தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. "எம்.ஜி.ஆர் வாக்கு என்பது ஜெயலலிதா இருக்கும் அணிக்கு மட்டுமே உண்டு" என்பது நிரூபனமாகியது. அடுத்தடுத்த தேர்தல்கள் அதையே அரங்கேற்றின.
 
இதுபோன்ற காலகட்டத்தில்தான் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அ.தி.மு.க.வுடன் 1998 வாக்கில் கூட்டணி சேர்ந்தார். அப்போதும் சரி பிறகு 2006ல் அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்த போதும் சரி எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி அ.தி.மு.க. கூட்டங்களில் கைதட்டல் பெற்றார். நாளடைவில் அதுவே அ.தி.மு.க. தலைமைக்கும், வைகோவிற்கும் நெருடல் உருவாகக் காரணமாக அமைந்து விட்டது. ஏனென்றால் தங்கள் கட்சியின் எம்.ஜி.ஆர் வாக்குகளுக்கு வைகோ குறி வைக்கிறாரோ என்ற சந்தேகமே அதற்கு காரணம். இதே மாதிரி 2005 வாக்கில் புதுக் கட்சி தொடங்கிய  நடிகர் விஜயகாந்த் "கருப்பு எம்.ஜி.ஆர்" என்று தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் பண்ணத் தொடங்கினார். எம்.ஜி.ஆருக்கும், தனக்கும் உள்ள நட்பை சிலாகித்துப் பேசி வந்தார். "இவர் நம் கட்சிக்குப் போட்டி" என்று கருதிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விஜயகாந்த்தின் அரசியல் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றே வியூகங்களை வகுத்தார். ஆனால் 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால், அதற்கு செயல்வடிவம் கொடுக்க முடியவில்லை. இந்த காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர் வாக்குகளில் புகுந்து குழப்பங்களை விளைவிக்கிறார் என்றே அ.தி.மு.க. தலைமை நம்பியது. அதற்கு அடையாளமாக பல முன்னாள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க.வில் சேர்ந்தார்கள். அப்படிச் சேர்ந்தவர்களில் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த பன்ருட்டி ராமச்சந்திரனே தே.மு.தி.க.வின் அவைத் தலைவராக ஆனார்.
 
அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர் வாக்கு வங்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும் விஜயகாந்தின் முயற்சி தொடரட்டும் என்று ஆட்சியிலிருந்த தி.மு.க. நினைத்தது. அவரது கல்யாண மண்டபத்தை இடித்து விஜயகாந்தை "தி.மு.க. எனிமி" என்பது போல் தி.மு.க. தலைமை சித்தரித்தது. அதனால் எம்.ஜி.ஆர் வாக்காளர்கள் பலரும் முன்பு தி.மு.க.விடம் எம்.ஜி.ஆர் பட்ட கஷ்டத்தை இப்போது விஜயகாந்த் படுகிறார் என்ற எண்ணம் மேலோங்கியது. 2006 சட்டமன்ற தேர்தலிலும், 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் விஜயகாந்த் அதிக வாக்குகள் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் விஜயகாந்த் தவிர்க்க முடியாத சக்தியானார். அதனால் தி.மு.க.வை தேர்தலில் வீழ்த்த விஜயகாந்துடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தது. ஆனால் அந்தக் கூட்டணி "எண்ணெய்யும், நீரும் போல்" விலகியே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் 2011இல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே விஜயகாந்திற்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும் நேரடி மோதல் உருவானது. அதன் இறுதியில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து தே.மு.தி.க. வெளியேறியது. இப்போது கூட நடந்து முடிந்த ராஜ்ய சபை தேர்தலில் "தி.மு.க. தலைவரின் மகள் கனிமொழி வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. ஆனால் நான் நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று அ.தி.மு.க. அரசியல் பண்ணியது. தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் ரகசிய கூட்டணி இருக்கிறதோ என்ற சந்தேகம் உருவாகியிருக்கிறது" என்று விஜயகாந்தே குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தும் விஜயகாந்த்திற்கும்- அ.தி.மு.க.விற்கும் இப்போது செம பகையாக மாறிவிட்டது.
 
விஜயகாந்த் போல் சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியுடன் இருந்தவர் நடிகர் விஜய். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் "அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். தி.மு.க. வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்" என்று குரல் கொடுத்தவர். தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என்றெல்லாம் கூட பேச்சு எழுந்தது. அப்படிப்பட்ட நடிகர் விஜய் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி எதிர்கால அரசியல் திட்டத்தை வகுத்தது அவருக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர் நடித்த "வேலாயுதம்" படத்திற்கு தன் போட்டோவுடன் எம்.ஜி.ஆர் படத்தையும் பேனர்களில் வைக்க வேண்டும் என்று சொன்னார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. அதுவே அவருக்கும், அ.தி.மு.க.விற்கும் இருந்த நெருக்கத்திற்கு உலை வைத்தது. கடந்த மாதம் சென்னை புறநகரில் பிரமாண்டமான மாநாடு போட திட்டமிட்டிருந்தார் நடிகர் விஜய். அது ஒரு நலத்திட்டங்கள் வழங்கும் மாநாடுதான் என்றாலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ரசிகர்களை திரட்ட திட்டமிட்டிருந்தார் நடிகர் விஜய். ஆனால் அந்த மாநாடே இறுதியில் நடத்த முடியாமல் போகவே, ரொம்பவும் நொந்து போய் விட்டார். இந்த அளவிற்கு நடிகர் விஜய்க்கு டென்ஷன் உருவாகக் காரணம், அவர் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி அரசியல் பண்ண நினைத்ததுதான்!
 
இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்கள், கூட்டணியில் இருந்து விலகிய வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள், சமீபத்தில் சங்கடத்திற்கு உள்ளான நடிகர் விஜய் போன்றவர்கள் எந்த "எம்.ஜி.ஆர் ஆயுதத்தை" எடுத்தார்களோ அதே ஆயுதத்தை "சுப்ரீம் ஸ்டார்" சரத்குமார் இப்போது கையிலெடுத்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்த பிறகு இப்போது முதல் முறையாக புதிய விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட வேண்டும் என்று காமராஜரை முன்னிலைப்படுத்தும் கட்சி நடத்தும் சரத்குமார் அறிவித்திருக்கிறார். இது "அரசியல் எதிர்காலம்" சார்ந்த ஓர் அறிவிப்பு என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் சரத்குமார் சார்ந்த நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள்- ஏன் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் காமராஜர் பெயர்தான் இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது போன்ற நேரத்தில் "எம்.ஜி.ஆர் பெயர் வைக்க வேண்டும்" என்று திடீரென்று சரத்குமார் தீர்மானமே போட்டிருக்கிறார்.
 
அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோரின் நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சரத்குமார் எம்.ஜி.ஆர் பெயரை முன்னிறுத்தி தன் கட்சியில் தீர்மானம் போட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி என்றே தெரிகிறது. இது பற்றிக் கூறும் நாடார் சமுதாய தலைவர் ஒருவர், "காமராஜர் பெயரைச் சொல்லி சென்ற சட்டமன்ற தேர்தலில் இரு எம்.எல்.ஏ.க்களைப் பெற்றார் சரத்குமார். இப்போது எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி தன் அரசியல் எதிர்காலத்தை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைகிறார்" என்று பூடகமாகச் சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர் பெயரை முன்னிறுத்தி செயல்பட்ட வைகோ, விஜயகாந்த் போன்றோர் மீது எழுந்த சந்தேகம் இந்த தீர்மானத்தைப் போட்டிருக்கும் சரத்குமார் மீதும் வந்தால், அவரது அரசியல் எதிர்காலம் சிக்கலாகும். "அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்" என்று அறிவித்திருக்கிறார் சரத்குமார். அந்தக் கூட்டணிக்கும் பிரச்சினையாக மாறிவிடும்! பிறகு வைகோ, விஜயகாந்த், நடிகர் விஜய் போன்றோர் பாதையில் சரத்குமாரும் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .