2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புலி வருகிறது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வட பகுதியில் இராணுவ பிரசன்னம் அதிகம் என்றும் அதனை குறைக்க வேண்டும் என்றும் பல பிரதான நாடுகளும் ஐ.நா. மனித உரிமை பேரவை போன்ற சர்வதேச அமைப்புக்களும் கூறி வருகின்றன. புலிகள் இயக்கத்தை அழித்தாலும் அதன் சித்தார்த்த தாக்கம் இன்னமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருப்பதாகவும் புலம் பெயர் தமிழர்களும் அச்சித்தாந்தத்தை தூண்டும் நாட்டுக்குள் பலப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறும் அரசாங்கம் இராணுவ பிரசன்னத்தை குறைக்க மறுத்து வந்தது.

இந்த நிலையில் தான் கடந்த மார்ச் 13ஆம் திகதி கிளிநொச்சியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்ததாக கூறப்படும் கோபி எனப்படும் கே.பி. செல்வநாயகம் என்பவரை கைது செய்யச் சென்ற பொலிசாரில் ஒருவரை அவர் சுட்டு விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தை அடுத்து வட பகுதியில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குவதால் அங்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியாது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க கூறியிருந்தார்.

இவ்வாறானதோர் சூட்டுச் சம்பவமே நடைபெறவில்லை என்பதைப் போல் அப்போது சில தமிழ் தலைவர்கள் கருத்து வெளியிட்டு இருந்தனர். சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கிளிநொச்சி தர்மபுரத்தில் சம்பந்தப்பட்ட வீட்டை சுமார் 700 படை வீரர்கள் முற்றுகையிட்டதாகவும் அவ்வாறிருக்க ஒருவர் அந்த வீட்டில் இருந்து தப்பிச் செல்ல முடியுமா என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11ஆம் திகதி) நெடுங்கேணி வெடிவெச்சக்கல் காட்டுப் பகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின் போது கோபி உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அம்மூவரில் தேவியன் என்பவர் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் அநுராதபுரம் விமானப்படை தளத்தின் மீதும் விமானத் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அதாவது மார்ச் மாதம் 21ஆம் திகதி அரசாங்கம் விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் தமிழீழ விடுதலை புலிகள் உட்பட 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது தடை விதித்து 424 தனி நபர்களையும் தேடப்படும் நபர்களாக பிரகடனப்படுத்தியது. அவர்களுள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் தமது புளொக் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையொன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் ஒரு காலத்தில் நாட்டில் சிரேஷ்ட வழக்குரைஞர்களில் ஒருவராகவிருந்த காலஞ்சென்ற எஸ்.நடேசனின் மகனும் ஒரு காலத்தில் டெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவராகவும் இருந்த மூத்த சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திராவின் பெயரும் ஒரு சிங்களவரின் பெயரும் அதில் உள்ளடக்கப்பட்டு இருந்தன.

வட பகுதியில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ந்து கூறி வருவதனாலும் இம் முறை மனித உரிமை பேரவையிலும் அந்த விடயம் கருத்திற் கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கபட்டதனாலும் அந்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்தவே அரசாங்கம் பல புலம்பெயர் அமைப்புக்களையும் நபர்களையும் தடை செய்துள்ளது என்றும் விமர்சிக்கப்டுகிறது. அது நியாயமான வாதமாக இருப்பது போலவே மேலோட்டமாக பார்க்கும் போது தர்க்க ரீதியாகவும் அமைந்திருக்கிறது.

பொலிஸ்காரர் சுடப்பட்ட வீட்டில் இருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி மற்றும் அவரது 13 வயதான மகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களைப் பார்க்கச் சென்ற ருக்கீ பெர்னாண்டோ மற்றும் வண.பிதா பிரவீன் மஹேசன் ஆகிய மனித உரிமை ஆர்வளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த விடயம் அப்போது கூடியிருந்த மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனால் அரசாங்கம் நடந்ததை விளக்கி புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குகிறது என்று மனித உரிமை பேரவையிடம் அறிவித்தது.

எனவே மனித உரிமை பேரவை கூட்டம் நடைபெறும் கால கட்டத்திலேயே கிளிநொச்சி சுட்டுச் சம்பவத்தை அரங்கேற்றி புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதாக மனித உரிமை பேரவையிடம் கூறி இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வாதிட முடியும்.

ஆனால் அரசாங்கம் கோபியினால் பொலிஸ்காரர் ஒருவர் சுடப்பட்ட சம்பவத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டு இருந்த போதிலும் அதற்கும் ஒரு வாரத்திற்கு முன்னர் இயக்கங்கள் மற்றும் நபர்கள் மது தடை விதித்து பிரசுரிக்கப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலை மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் தாமாக முன்வந்து பகிரங்கப்படுத்தவில்லை. அது இம் மாத ஆரம்பத்திலேயே அதாவது மனித உரிமை பேரவை கூட்டம் முடிவடைந்த பின்னரே ஊடகங்களும் அறிந்து கொண்டன. புலி வருகிறது என்று கூச்சலிட இந்த வர்த்தமானி பெரும் உதவியாக இருந்த போதிலும் அரசாங்கம் அதனை மனித உரிமை பேரவையின் போது பாவிக்க முயற்சிக்கவில்லை.

அதேவேளை கடந்த இரண்டு மாதங்களாக புலிகள் அமைப்புக்காக பிரசார வேலைகளில் ஈடுபட்டதாகவும், நிதி திரட்டியதாகவும் வெளிநாடுகளிலிருந்த பணம் பெற்றுக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டி வட பகுதியில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கடந்த 10 ஆம் திகதி கூறியிருந்தார். புலிகள் அமைப்பிற்கு வெளிநாடுகளில் தலைமை தாங்குவதாகக் கூறப்படும் நெடியவனின் இரண்டு முக்கிய சகாக்களில் ஒருவரான நந்தகோபன் எனப்படும் கபிலன் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இவை கிளிநொச்சி சுட்டு சம்பவத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களாக இருந்த போதிலும் அவற்றையும் அரசாங்கம் புலி வருகிறது என்பதை நிரூபிப்பதற்காக மனித உரிமை பேரவையில் பாவிக்கவில்லை.
அதேவேளை கோபி உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்கள் புலிகள் அல்ல என்று கூற இது வரை எவரும் முன்வரவில்லை. கைது செய்யப்பட்ட கோபியின் தாயாரைப் பற்றி எவரும் இதுவரை பரிந்து பேசவும் இல்லை. கோபிக்கும் நெடியவனுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுவதை இது வரை நெடியவனோ வேறு எவருமோ மறுக்கவும் இல்லை. இவ்வாறு புலிக் கதையில் இரண்டு பக்கங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.

உண்மையிலேயே புலிகள் மீண்டும் தலைதூக்க முடியுமா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கிறது. புலிகளோ அல்லது வேறு தமிழ் கிளர்ச்சிக்கார குழுவோ குறிப்பாக வட பகுதியில் உருவாகக் கூடிய புறநிலை காரணிகள் இருக்கின்றனவா என்பதும் கேள்விக்குறியே. ஆனால் அவ்வாறான புறநிலைக் காரணிகள் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்பது மட்டுமே இப்போதைக்கு உண்மையாக இருக்கிறது.

போர் முடிவடைந்த உடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்களிடையே பெரும் விரக்தி மனப்பான்மை காணப்பட்டது. போரின் கோரத்தன்மை, பொது மக்கள் மீதான அரச படைகளினதும் புலிகளினதும் கொடூரச் செயற்பாடுகள் மற்றும் உறவுகளின் இழப்பு ஆகியவற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டு இருந்தது எனலாம். அதேவேளை புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதி என்று கூறிய வட பகுதி தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்க அரசியலுக்காக குரல் கொடுக்கவும் முன்வந்தது.

அப்போது புலிகளின் நடவடிக்கைகளை பகிரங்கமாக எதிர்த்து பேசவும் அவர்களது அரசியல் வாதங்களையும் மறுத்துப் பேசவும் சாதாரண மக்கள் முதன் முறையாக முன்வந்து இருந்தனர். ஆனால் நல்லிணக்கத்திற்காக அந்த நிலைமையை வளர்த்தெடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. போர் முடிவடைந்தாலும் புலிகள் மீண்டும் தலைதூக்கலாம் என்பதனால் அரசாங்கம் தொடர்ந்தும் வட பகுதியில் தமது இரும்புப் பிடியை தளர்த்தவில்லை.

சமூகத்தில் சகல துறைகளிலும் இராணுவத்தினதும் அதன் உளவுப் பிரிவினதும் தலையீடு காணப்பட்டது. புலிகள் மீண்டும் தலைதூக்கலாம் என்பது நியாயமான சந்தேகமாக இருந்த பேதிலும் இந்த தலையீடு எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பது சர்ச்சைக்குரிய விடயமே. அரசாங்கத்தின் பக்கத்தில் நியாயம் இருந்த போதிலும் இந்த விடயம் மக்களின் மனதை மீண்டும் மாற்றிவிட காரணமாகியது என்பதும் உண்மையே.

உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய பிரச்சினையும் அது போன்றதோர் பிரச்சினையாகும். வெளிநாடுகளில் புலிகள் இயங்கும் நிலையிலும் தமிழீழம் வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில் ஓங்கி ஒளிப்பதனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட உள்நாட்டு தமிழ் கட்சிகள் தமிழீழ கோட்பாட்டை தீர்க்கமாக எதிர்க்காததனாலும் அவர்களும் சிலவேளைகளில் பிரிவினைவாத சுலோகங்களை சுமந்து செல்வதனாலும் என்றNh ஒருநாள் வடக்கில் தமிழ் கிளர்ச்சி வெடிக்கும் என்று அரசாங்கம் அச்சப்பட்டுக் கொண்டே இருந்தது, இருக்கிறது.

அதற்காக இராணுவ பிரசன்னத்தைப் போலவே உயர் பாதுகாப்பு வலயங்களையும் அரசாங்கம் தொடர்ந்தும் நடத்தி வந்தது. அரசாங்கத்திற்கு இது நியாயமாக பட்ட போதிலும் மக்களுக்கு அது நியாயமானதாக தெரியவில்லை. போர் முடிவடைந்த நிலையில் இவர்கள் ஏன் இன்னணிம் எமது நிலத்தை அபகரித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அவர்களது ஆதங்கம் முற்றும் நியாயமானதே.

பொதுவாக கூறுவதாயின் போர் முடிவடைந்த ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தமது உரிமைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்தார்களேயல்லாமல் அரசாங்கத்தையும் சிங்கள மக்களையும் வென்றெடுக்க முயற்சிக்கவில்லை. அதேபோல் அரசாங்கணிம் பாதுகாப்புப் படைகளும் வட பகுதியைப் பார்க்கச் சென்ற தென் பகுதி மக்களும் பாதுகாப்பு பிரச்சினைகளையும் தமது வெற்றியையும் பற்றி மட்டுமே சிந்தித்தார்களேயல்லாமல் தமிழ் மக்களை வென்றெடுப்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. இரு சாராரினதும் இந்த நிலைமை இன்னணிம் நீடித்துக் கொண்டு இருக்கிறது.

அதிகார பரவலாக்கலின் நன்மை தீமைகளைப் பற்றி சிங்கள மக்களுக்கோ தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கோ உண்மையிலேயே பெரிதாக தெளிவில்லை. ஆனால் இந்த விடயத்திலும் தமிழ் மற்றும் சிங்கள் அரசியல்வாதிகள் தொடர்ந்து முரண்பட்டுக் கொள்வதால் மேலும் மக்களிடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதைக் கொண்டு ஆதாயம் பெறுகிறார்கள்.

சிங்கள மக்களை கவரும் நோக்கிலும் தமது ஏனைய குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் அரச தலைவர்கள் வட மாகாண சபைத் தேர்தலை போர் முடிவடைந்தும் நீண்ட காலமாக நடத்தவில்லை. பின்னர் மாகாண சபைச் சட்டத்தை ரத்துச் செய்யவும் முயற்சித்தார்கள். மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்க முயற்சித்தார்கள். தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களை கவர்வதற்காக தாயகம், சுய நிர்ணய உரிமை, சுயாட்சி போன்ற பதங்களால் சிங்கள மக்களை குழப்பி அவர்களின் மனதில் கிளியை ஏற்படுத்தி வருகிறார்கள்.     
இந்த மோதல் நிலை காரணமாக தமிழ் அரசியல் மீண்டும் கடுமையான தொணியை பாவிக்கும் அரசியலாக மாறி வருகிறது. வட மாகாண சபை மாகாண சபையாகவன்றி தனி நாடாக செயற்பட முற்படுகிறதா என்று சந்தேகிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறது. மறுபுறத்தில் மாகாண முதலமைச்சரோடு ஒத்திசைந்து செயற்படக் கூடிய பிரதம செயலாளர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது. பெரும்பான்மையினத்தவராக இருந்தாலும் சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமியுங்கள் என்ற வட மாகாண சபையின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது.

புலிகள் போன்ற கிளிர்ச்சிக் குழுவொன்று உருவாவதற்கு அவசியமான புறநிலை உருவாகி வருகிறது என்று அதனால் தான் ஆரம்பத்தில் கூறினோம். ஆனால் இது நாட்டுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளுக்கோ நல்லதல்ல. அதேவேளை இன மோதலின் காரணமாக தமிழர்களின் இரண்டு தலைமுறைகள் அழிந்துள்ள நிலையில் அது போன்றதோர் தலைமையை மீண்டும் தாங்கிக் கொள்ள தமிழ் மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியதோர் விடயமே.

தமிழகத்திலும் ஏனைய வெளிநாடுகளிலும் பாதுகாப்பாக இருப்பவர்கள் தான் இப்போதைக்கு தமிழ் ஈழத்தைப் பற்றி பேசுகிறார்கள். நாட்டுக்குள் எந்தவொரு அரசியல்வாதியும் அதனை ஏற்பதாக தெரியவில்லை. போரின் கொடூரமும் போரில் ஈடு பட்ட இரு சாராரினதும் குரூரத் தன்மையும் மக்கள் மனதில் இன்னமும் இருப்பதே இதற்குக் காரணமாகும். எனவே புற நிலை காரணிகள் சற்று வளர்ந்து வந்த போதிலும் மற்றுமொரு தமிழ் கிளர்ச்சிக்கு அவசியமான அக நிலை தமிழ் மக்களிடையே இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழீழ போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்த அவ்வியக்கத்தின் தலைவர்களான பிரபாகரன், உமா மகேஸ்வரன், ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, பாலகுமாரன் போன்றறோர் பெரும் ஆளுமையும் தியாகமும் உள்ளவர்கள் என்பதை தமிழீழ இலட்சியத்தை ஆதரிக்ணீhதவர்களும் ஏற்கிறார்கள். அவ்வாறான ஆளுமையுள்ள குறிப்பாக ஆபத்தை முதலில் தாமே தாங்கிக்கொள்ளும் மனப்பான்மையுள்ளவர்கள் அண்மைக் காலத்தில் நாம் காணவில்லை.

மறுபுறத்தில் போரின் காரணமாக அரசாங்கத்திடம் மா பெரும் உளவுப் படை இருக்கிறது. இலட்சக் கணக்காக பெருகிவிட்ட படைகளுக்கு வேலை இல்லாமல் இருக்கிறது. எனவே விரைவில் இலங்கையில் தமிழ் கிளர்ச்சியொன்று வெடிக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது. இது அரசாங்த்தில் சிலரும் புலம் பெயர் தமிழர்களில் சிலரும் விரும்பாத வாதமாகலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .