2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லா முஹமது ஓமர்: மரணத்தைப் பலியிடல்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

மரணம் எப்போதும் ஒரு துன்பியல் நிகழ்வு தான். ஆனால், மரணத்தைப் பலியிடுவது கேவலமானது. சர்வதேச அரங்கில் மரணத்தைப் பலியிடுவது புதிதல்ல. ஆனால், அவ்வாறு ஏன் நிகழ்கிறது அல்லது நிகழ்த்தப்படுகிறது என்பது பல சமயங்களிற் புதிரானது. அவ்வகையிலேயே அண்மையில் அறிவிக்கப்பட்ட தலிபான்களின் தலைவர் முல்லா முஹமது ஓமரின் மரணத்தைக் காணவேண்டியிருக்கிறது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அரசு முல்லா ஓமர் இறந்துவிட்டாரென அறிவித்தது. ஆப்கானிஸ்தானும் தலிபான்களும் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள நிலையில், குறிப்பாக அடுத்த சுற்றுப் பேச்சுக்கட்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இச் செய்தியை ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

முல்லா ஓமரின் மரணத்தை அறிவித்த ஆப்கான் அரசு, அவர் இரண்டு ஆண்டுகள் முன்பே இறந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் முன்பே இறந்த ஒருவரின் மரணத்தை ஆப்கான் அரசு இப்போது அறிவிப்பது ஏன் என்பது முதலாவது கேள்வி. அதைவிட, கடந்த மாதம் ஆப்கான்-தலிபான் பேச்சுக்களை ஆதரிப்பதாக முல்லா ஓமர் தனது ரமழான் வாழ்த்துச் செய்தியிற் குறிப்பிட்டதாகச் சொல்லிய தகவலின் வாய்மை என்ன? அச் செய்திதானே பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்த உதவியது. இந்நிலையில் இம் மரணச் செய்தியானது பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என ஆப்கான் அரசு அறியாதா? எனின், இது ஏன் நிகழ்ந்தது?

முல்லா ஓமர், இப்போது இறந்தாரா அல்லது எங்களுக்குச் சொல்லப்படுவது போல இரண்டாண்டுகள் முன்னர் பாகிஸ்தானின் கராச்சி நகர வைத்தியசாலையிற் காலமானரா என்பதல்ல பிரச்சினை. மரணங்கள் இயற்கையானவை. ஆனால், இந்த மரணத்தை இப்போது பலியிடும் காரணங்கள் முக்கியமானவை. ஒசாமா பின் லேடனின் மரணம் கொண்டாடப்பட்ட மரணம். முல்லா ஓமரது பலியிடப்பட்ட மரணம்.

இஸ்லாமிய போராட்ட இயக்கங்களில் அல் கைடாவை அடுத்து மிக அறியப்பட்ட இயக்கமாகத் தலிபான் உள்ளது. அவ் வரிசையில் அண்மைய புதிய வரவு ஐ.எஸ்;.ஐ.எஸ். 2001இல் அமெரிக்க வர்த்தக மையக் கட்டடத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக தலிபான்களுக்கெதிராக அமெரிக்கா தொடுத்த போர், தலிபான்களை உலகறியச் செய்தது. அதனால், வெளித் தோற்றத்துக்கு, ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்குக் காரணமெனப் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், தலிபான்களின் கதை வேறு.

தலிபான்களின் தோற்றம் அமெரிக்க-சோவியத் கெடுபிடிப் போரின் விளைவுகளில் ஒன்று. கெடுபிடிப் போர் நிலவிய காலத்தில், 1979இல் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தன் அரசியல் இராணுவச் செல்வாக்கை நிலைநிறுத்த முற்பட்டது. அதன் போக்கில் ஏற்பட்ட வெகுசன எதிர்ப்பின் பின்னணியில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்து, அங்கிருந்த சோவியத் சார்பான ஆட்சியைக் கவிழ்த்துத் தனக்கு உவப்பான இன்னொரு ஆட்சியை நிறுவியது. இப் பின்னணியில் ஏலவே அங்கு ஊடுருவியிருந்த அமெரிக்கா, சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து சோவியத் யூனியனை அங்கிருந்து விரட்டும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது. 1989இல் சோவியத் யூனியன் அவமானமான தோல்வியுடன் வெளியேறும் வரை அமெரிக்க முயற்சிகள் ஓயவில்லை.

ஆப்கானிஸ்தானை நாத்திகர்களும் சாத்தானின் சீடர்களுமான கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாக பிரசாரத்தை மேற்கொண்ட அமெரிக்கா, அவர்களை விரட்டும் புனிதப் போரைத் தொடங்குமாறு இஸ்லாமிய மதவாதிகளை அணிதிரட்டியது. இன்று, அமெரிக்காவை எதிர்த்துப் புனிதப் போர் நடத்தும் பயங்கரவாதிகள் எல்லோரும் இப்படித்தான் உருவாகினர். முஜாகிதீன்களுக்கான ஆயுத உதவி முதல் பணம் வரை அனைத்தும் அமெரிக்காவிலிருந்து வந்தன. மதத்தைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாமிய நாடுகளிலிருந்து போராளிகள் இறக்குமதியாயினர். பின்னாளில் அல் கைய்தாவை ஆரம்பித்த ஒசாமா பின் லேடன், இவ்வாறே சவூதி அரேபியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார்.

இதற்கான மையமாகப் பாகிஸ்தான் பயன்பட்டது. பாகிஸ்தானின் சகல மாநிலங்களிலும் அமெரிக்க நிதி உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் நிறுவப்பட்டன. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாஹிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் ஆணைக்கேற்ப இந்த வேலைகளை ஒருங்கிணைத்தது. இந்த அடியாள் வேலைக்காகவே பாகிஸ்தானிய இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழு மனதுடன் ஆதரித்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் விலகியதும் அமெரிக்க ஆசியுடன் தலிபான்கள் களத்தில் இறங்கினர். இத்தகைய முட்டாள் மதவாதிகள், ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருப்பது தனக்குப் பலவிதங்களில் உதவுமென எதிர்பார்த்தே தலிபான்களை அமெரிக்கா ஆதரித்தது.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆண்டார்கள். அவர்களின் தலைவராக முல்லா ஓமர் இருந்தார். உலக நாடுகள், தலிபான் ஆட்சியை அங்கிகரியாத போதும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கிகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுக்களுக்காகத் தலிபான் பிரதிநிதிகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றன.

ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தவரை அமெரிக்கா உருவாக்கி வளர்த்த இஸ்லாமிய மதவாதம், அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிவந்தது. சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இருவரும் தத்தமது நலன் கருதிப்; பிரியும் சூழ்நிலை வந்தது. முதல் வளைகுடாப் போரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் முஸ்லிம்களுக்குச் சினமூட்டின. இப் பின்னணியிலேயே பின் லேடனின் அல் கைய்தா, தனது முன்னாள் எஜமானை எதிரியாக அறிவித்தது. தலிபான்கள் அதற்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.

கடந்த 14 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் வெல்லமுடியாத ஒரு போரிற் சிக்கியுள்ள அமெரிக்கா, அங்கிருந்து மெதுமெதுவாக நழுவ வேண்டுகிறது. அதன்படியே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா- இரண்டாண்டுகள் முன்பு படைக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தார். இவ்விடத்துக், 'கடைசிப் பயங்கரவாதி அழிக்கப்படும் வரை பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் தொடரும்' எனும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் சூளுரை நினைவுகூரத் தக்கது. அவமானமான வெளியேற்றத்தைக் கௌரவத்துடன் நிகழ்த்த அமெரிக்கா விரும்புகிறது. வெளித் தோற்றத்துக்கு 'அமெரிக்கா என்றும் பயங்கரவாதிகளுடன் பேசாது' என்று வீராப்புப் பேசினாலும், தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது. அதன் தொடர்ச்சியே தற்போது ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் நிகழும் பேச்சுவார்த்தைகளாம். அதற்கு வாய்ப்பாக, குவான்டனாமோவில் தான் சிறைவைத்திருந்த ஐந்து தலிபான் தலைவர்களை அமெரிக்கா ஆரவாரமின்றி விடுவித்துள்ளது. அவர்களுக்கான வசதிகளைக் கட்டார் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே முல்லா ஓமரின் மரணத்தை ஆப்கான் அரசு அறிவிக்கிறது. அதை உறுதிப்படுத்திய தலிபான்கள் புதிய தலைவராகத் தமது இரண்டாம் நிலைத் தலைவராயிருந்த முல்லா மன்சூரைத் தலைவராக அறிவித்த நிலையிற், பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன. ஆப்கான் அரசு இரண்டாண்டுகளுக்கு முன்பே முல்லா ஓமர் இறந்துவிட்டார் என்ற செய்தியை வெளியிட்டது. இரண்டாண்டுகட்கு முன் இறந்தவரைப் பற்றிய தகவலைப் பேச்சுவார்த்தைகட்கு இரண்டு நாட்கள் முன்பாக வெளியிடும் தேவை என்ன என்பது முக்கியமானது. இதை இருவிதமாக விளங்கலாம். முதலாவதாக, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை ஆப்கான் ஜனாதிபதி விரும்பவில்லை. அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் இப்போது ஆப்கானிஸ்தானின்; பல பகுதிகளைக் கட்டுப்பாட்டிற் கொண்டுள்ள தலிபான்களுக்கே சாதகமாகும்.

முடிவில் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் போக நேரும். எனவே, அவர் பேச்சுவார்த்தைகளைக் குழப்புவதன் மூலம் அமெரிக்கப் பிரசன்னத்தை தொடர முயல்கிறார். மாறாகத், தலைவரின் சாவை அறிவிப்பதன் மூலம் தலிபான்களிடையே குழப்பத்தை உருவாக்கிப் பேச்சுவார்த்தைகளில் வலுவான நிலையை எட்டும் முயற்சியாகவும் இதை நோக்கலாம்.

ஆப்கானிஸ்தான் மீதான உலகின் கவனம் உலக அமைதி பற்றியதல்ல. ஆப்கானிஸ்தான்- பூகோளரீதியான அமைவிடம் பற்றியது. கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கில் துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், வடகிழக்கில் சீனாவின் ஷின்ஜியாங் மாநிலம் ஆகியவற்றை எல்லைகளாகக்; கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பின் லேடனைத் தேடி அமெரிக்க இராணுவம் படையெடுக்க முன்பே, மத்திய-ஆசிய நாடுகளின் இயற்கை வளங்களைக் - குறிப்பாக எண்ணெய், எரிவாயுவைத் தேடி அமெரிக்க நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன. 2000 மைல் நீண்டு அகன்ற ஸ்ற்றெப்பிஸ் புல்வெளிகளையும் பனிபடர்ந்த நெடிய மலைத் தொடர்களையும் கொண்ட மத்திய-ஆசிய நாடுகள் அனைத்திலும் இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. சோவியத் யூனியனின் உடைவு, புதிதாகத் தோன்றிய நாடுகளிடமிருந்தும் மத்திய-ஆசிய நாடுகளிலிருந்தும் எரிபொருள் வளங்களைக் குறைந்த விலைக்குப் பெறுவதை இயலுமாக்கியது. அதிற் சிக்கல் ஏதென்றால் எண்ணெயையும் எரிவாயுவையும் கொண்டு செல்லும் குழாய்களெல்லாம் ரஷ்யாவினூடாகவே செல்கின்றன. இதை அமெரிக்காவோ அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகளோ விரும்பா.

இதற்குத் பதிலீடாகக் கஸ்பியன் கடலுக்குக் குறுக்கே எண்ணெய்க் குழாய் அமைப்பதினும் தூரம் குறைந்த, அரைவாசிச் செலவு மட்டுமே கொள்ளக்கூடிய பாதை ஆப்கான் - பாகிஸ்தான்-அரபிக் கடல் எனும் குழாய்ப் பாதையாகும். அரபிக் கடலிலிருந்து இந்தியாவையும் பிற ஆசிய நாடுகளையும், வளைகுடாவையும் ஐரோப்பாவையும் எளிதாக அடைய முடியும். மேலும் பாகிஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் கணிசமான எரிவாயு உள்ளது. தெற்காசியா, சீனா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள் என ஆசியா முழுவதையும் கட்டுப்படுத்தற்கு ஏற்ற இராணுவ முக்கியம் வாய்ந்த இடத்தில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளமை அதைக் குறிவைக்க இன்னொரு காரணமாகும்.

முல்லா ஓமரின் மரணத்தைப் பலியிடுகிற அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் இப்போதைய நவீன ஜிகாதிகளுடன் ஒப்பிடும் போது முல்லா ஓமர் மிதவாதி என்றும் அதீத வன்முறையை விரும்பாதவர் என்றும் எழுதுகின்றன. முல்லா ஓமர், ஆப்கானிஸ்தானில் மனிதஉரிமைகட்கெதிரான ஓர் ஆட்சியை நடத்தியபோதும் பாமியன் புத்தர் சிலைகளைச் சரித்தபோதும் அமெரிக்கா இரகசியமாக அபின் கொள்வனவு செய்ததை இங்கு நினைவு கூரலாம்.

இன்று அதிதீவிர இஸ்லாமியக் குழுக்களின் எழுச்சியால் அமெரிக்கா திக்குமுக்காடும் நிலையில் முல்லா ஓமரை மிதவாதியென்பதில் ஆச்சரியமில்லை. மறுபுறம் பின் லேடன் போல் அமெரிக்கக் கரங்களில் இறுதிவரை சிக்காது அமெரிக்கா வலைவீசித் தேடிய ஒருவரின் மரணத்தைப் பலியிடுவதுதான் அமெரிக்கா கொண்டாடக்கூடிய வெற்றி.

வாழ்க்கையைப் பலியிட முடியவில்லை, அதனால் மரணத்தைப் பலியிடுகிறார்கள். அவ்வளவே..!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .