2024 மே 08, புதன்கிழமை

கூட்டமைப்பின் ஆபத்தான பயணம்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று உச்சகட்டத்தை எட்டி விட்டு ஓயப் போகின்றன. அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது வளங்களை ஒன்றுபடுத்தி முழுவீச்சில் பிரசாரம் செய்வதற்கான இறுதி நாள் இன்று.

அடுத்த இரண்டு நாட்களும் வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள காலஅவகாசம். அதையடுத்து, திங்கட்கிழமை வாக்களிப்பு நடக்கப் போகிறது. இந்தத் தேர்தலானது இரண்டு பிரதான தளங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலாவது தளத்தில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்கின்ற தேர்தலாக இது கருதப்படுகிறது.

இரண்டாவது தளத்தில், கொழும்பில் யார் ஆட்சிக்கு வரப்போகிறார் என்ற கேள்வியை முதன்மையாக எழுப்பியிருக்கிறது.

இந்தத் தேர்தல் மூலம் தொங்கு நாடாளுமன்றம் ஒன்று அமைவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இருப்பதாகவே பரவலான கருத்து நிலவுகிறது.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளும், அவை எந்தளவுக்கு பக்கச்சார்பின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற சந்தேகங்கள் இருந்தாலும் கூட, தொங்கு நாடாளுமன்றம் ஒன்றுக்கான வாய்ப்பையே எதிர்வு கூறியிருக்கின்றன.

இந்தநிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கக் கூடிய ஆசனங்கள் மிகமுக்கியமான ஒன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதாவது கொழும்பில் அமையும் அரசாங்கம் ஒன்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கக் கூடும். இதனை எல்லாத் தரப்பினரும், கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்கின்ற ஒரு நிலையை காணக்கூடியதாக உள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் பேரம் பேசும் பலத்தைப் பெறுவது அல்லது தாம் எதிர்பார்க்கும் தீர்வை அடைவதற்கு இந்தத் தேர்தல் எந்தளவுக்குக் கைகொடுக்கும் என்பது கேள்விக்குரிய விடயமே.

தேர்தல் ஒன்றில் குதிக்கும் எந்தவொரு மக்கள் செல்வாக்குப் பெற்ற அரசியல் கட்சியும், சில கணிப்புகளைக் கொண்டிருக்கும். அந்தவகையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு கணிப்பு இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் 20 ஆசனங்களைப் பெற்று அசைக்க முடியாத ஒரு பலத்தைப்  பெறுவதன் மூலம், பேரம் பேசும் சக்தியைப் பெறலாம், அதன் மூலம் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தை ஒரு தீர்வுக்கு இழுத்து வரலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது கூட்டமைப்பு.

ஆனால், தேர்தல் ஒன்றில் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் மட்டும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில்லை. அதற்குச் சமீபத்திய உதாரணம் மஹிந்த ராஜபக்ஷ.

தனது வெற்றி மீது கொண்ட அசாத்தியமான நம்பிக்கை தான் அவரை தமது பதவிக்காலத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் படுகுழியில் தள்ளிவிட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் கணிப்பு ஒரு மாதிரி இருந்தது. ஆனால், வாக்காளர்களின் கணக்கு வேறொரு மாதிரியாக இருந்தது.

தேர்தல் ஒன்றில் அரசியல் கட்சி ஒன்றினது கணிப்பு, வாக்காளர்கள் போடும் கணக்குகள் மட்டும் வெற்றி தோல்வியைத் தீர்மானித்து விடுவதில்லை. அதற்கும் அப்பால், குறித்த கட்சியை எதிர்த்து நிற்கின்ற வேட்பாளர், கட்சி அல்லது கூட்டணியின் பலத்தையும் கொண்டும் அது தீர்மானிக்கப்படும். இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 20 ஆசனங்களை எதிர்பார்க்கிறது. ஆனால், வாக்காளர்களின் கணக்கு எப்படி அமையப் போகிறது என்பதற்கு வரும் திங்கட்கிழமை தான் விடை கிடைக்கும்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை ஏற்பட்டுள்ள கடுமையான சவாலையும் கூட யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. பல்வேறு முனைகளில் கூட்டமைப்புக்கு எதிராகவும், அதனைத் தோற்கடிக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றை எதிர்கொண்டு, 20 ஆசனங்களை வெற்றி கொள்வது என்பது, குதிரைக் கொம்பான விடயம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கருதுவது போன்று 20 ஆசனங்களைப் பெற்றுவிட்டால் கூட, எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இம்முறை வாக்காளர்களுக்கு அதிகபட்சமான நம்பிக்கையைக் கொடுக்க முனைகிறது. தன்னம்பிக்கை அவசியமானது என்றாலும், மிகையான நம்பிக்கை என்பது ஆபத்தான ஒரு விடயம்.

விடுதலைப் புலிகள், தமது பலத்தின் மீது கொண்டிருந்த மிகையான நம்பிக்கையே அவர்களின் அழிவுக்குக் காரணமாகியது என்ற வரலாற்று உண்மையை பலரும் உணராமல் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 20 ஆசனங்கள் என்றும், யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்கள் என்றும் நம்பிக் கொண்டிருப்பது, வெறும் வார்த்தைகளாக அல்லாமல், அவர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்குமேயானால், அது அவர்களுக்கு பேரிடி ஒன்றைக் கொடுப்பதாக அமையலாம்.

ஏனென்றால், இந்தத் தேர்தலில் அப்படியொரு வாக்களிப்பு அபூர்வம் நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகமிகக்குறைவு.

அதேவேளை, தேர்தல் முடிவு எத்தகையதாக அமைந்திருந்தாலும் கூட, வாக்காளர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்த முனைந்திருக்கும் அதிகபட்ச நம்பிக்கை ஆபத்தானதாக அமையலாம்.

அதாவது, தற்போதைய அரசியல் சூழலில் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்புப் பலம் பெறுவதற்கு இந்தத் தேர்தல் கைகொடுக்கும் ஒன்றாக அமைந்தாலும் கூட, அது தமிழரின் அபிலாஷைகளைத் தீர்க்கின்ற அரசியல்தீர்வுக்குச் சாதகமாக அமையும் என்று கருத முடியாது.

கொழும்பு அரசியலில், ஒருவேளை, மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வரும் சூழல் ஏற்பட்டு விட்டால், கூட்டமைப்பின் வாக்குறுதி பொய்யாகி விடலாம்.

ஒருவேளை, ஐதேக கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று விட்டாலும், கூட்டமைப்பின் பேரம் பேசும்பலம் கேள்விக்குறியாக மாறும்.

அதேவேளை, ஐதேக கூட்டணிக்கு கிடைக்கக் கூடிய ஆசனங்கள் அறுதிப் பெரும்பான்மைக்கு மிக நெருக்கமாக இருந்தால் கூட, கூட்டமைப்பினால் அவ்வளவாகப் பேரம் பேச முடியாது.

சிலரை மட்டும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஐதேக தனது பக்கத்துக்கு இழுத்துக் கொள்ளும் சாத்தியங்களும் இருக்கின்றன.

அதைவிட ஐதேக பிரசாரம் செய்து வருவது போன்று தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் நிலை ஏற்பட்டாலும் கூட, கூட்டமைப்பின் பேரம் பேசும் பலம் கேள்விக்குள்ளாகும்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சமஷ்டி அல்லது கூடுதல் அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுக்களுக்கு இணங்கி - அரசமைக்க ஐதேக முயன்றால், அதனைத் தோற்கடிக்க, 10 ஆசனங்கள் வரை பெறலாம் என்று நம்பப்படும் ஜேவிபி - நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கவும் தயாராக இருக்கும்.

அப்படியானதொரு சூழலில், இன்னும் பல சிங்களத் தேசியவாதிகளும் கூட கூட்டமைப்பை வீழ்த்துவதற்காக ஐதேகவுடன் ஒட்டிக்கொள்ளவோ வெளியில் நின்று ஆதரிக்கவோ தயாராக இருப்பார்கள்.

ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போல, கொழும்பு அரசியலில் பேரம் பேசுதல் என்பது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்கமாட்டாது.

இப்படிப் பல புறச்சூழல்கள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்னும் ஓர் ஆண்டுக்குள் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக அளிக்கும் வாக்குறுதி ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

தேர்தல் ஒன்றின் போது அளிக்கப்படும் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படுவதில்லை.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு தட்டிக்கழிப்பதாக தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டார்களேயானால், கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் நகர்வுகள் முடக்கப்பட்டு விடும்.

கூட்டமைப்பு -இந்தத் தேர்தலில் இந்த விடயத்தில் தான் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது.

இந்த நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்வதற்கே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் மிகையான நம்பிக்கை வழி வகுக்கும்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்ற ஆசனங்கள் கிடைக்காத நிலை ஒன்று ஏற்பட்டாலும் கூட, கூட்டமைப்புக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு ஒன்று இருக்கும்.

அதற்காக, நாங்கள் கோரிய ஆணையை - 20 ஆசனங்களைத் தரவில்லை, அதனால் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை என்று நாக்குப் புரட்ட முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தாம் கொடுக்கும் வாக்குறுதியை எவ்வாறு காப்பாற்றப் போகிறது என்பது, வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக அலசப்படும் விவகாரமாகவே இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டிக் கோரிக்கை அதற்கு முதல் காரணம். அதை அடைவதற்குத் திட்டமிட்டுள்ள பேரம் பேசும் பலத்தின் ஊடான வழிமுறை இரண்டாவது காரணம். தமிழரின் அரசியல் உரிமையை மறுத்துப் பழகிப்போன தெற்கின் அரசியல் சூழல் மூன்றாவது காரணம்.

இந்த மூன்று சிக்கலான விடயங்களின் ஊடாக எவ்வாறு அடுத்தகட்ட அரசியல் நகர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X