2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்; தி.மு.கவுக்கு வேள்வி

எம். காசிநாதன்   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் தொகுதியின் இடைத் தேர்தல் களை கட்டியிருக்கிறது. நவம்பர் 27ஆம் திகதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் தீவிரமாகியிருக்கிறது.   

ஆர்.கே. நகர் தொகுதியில் இப்போதைக்கு அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி என்ற வழக்கமாக நிலையைத் தாண்டி, “டி.டி.வி தினகரனுக்கும் - ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.கவுக்கும் போட்டி” என்ற ஒரு முனையிலும், இன்னொரு முனையில் “ஈ.பி.எஸ் -ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.கவுக்கும் - தி.மு.கவுக்குமான போட்டி” என்ற நிலையில் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது.   

ஆனால், ஜெயலலிதா இல்லாமல் கருணாநிதியும் பிரசாரக் களத்துக்கு வர முடியாமல் நடைபெறும் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரிய ஆறுதலை கொடுத்து விடப் போவதில்லை என்றாலும், தினகரன் அதிக வாக்குகள் வாங்குகிறாரா அல்லது இரட்டை இலையை வைத்திருக்கும் அ.தி.மு.க அணி அதிக வாக்குகள் வாங்குகிறதா என்ற பரீட்சை சுவாரஸ்யமாகவே இருக்கும்.  

தி.மு.க சார்பில் முன்பு ஆர்.கே நகர் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டபோது, போட்டியிட்ட அதே, மருதுகணேஷ் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். அப்போது, ‘புதுமுக வேட்பாளர்’.  

ஆனால் இப்போது அவர், தொகுதிக்குள் ‘அறிமுக வேட்பாளர்’. தி.மு.கவைப் பொறுத்தமட்டில் சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா வெற்றி பெற்றபோது, அவருக்கு கிடைத்த வாக்கு வித்தியாசம் 39 ஆயிரம் வாக்குகள்.   

ஆனால், இப்போது அந்தத் தொகுதியில் போலி வாக்காளர்கள் என்று கருதி நீக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம். இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலே, ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கிறது என்று நினைக்கிறது தி.மு.க.   

அதேநேரத்தில், பண விநியோக விவகாரத்தில் இந்த முறை தி.மு.கவைத் தேர்தல் ஆணைக்குழுவோ, வருமான வரித்துறை அதிகாரிகளோ ‘கண்கொத்திப் பாம்பு” போல் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பு இருக்கிறது. களத்தில் பலமாக உள்ள தி.மு.கவுக்குக் கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்படலாம்.   

இடைத்தேர்தல்ப் பணிகள் தொடங்கிய நிலையிலேயே அதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்; மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை, வீடு வீடாகத் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற உத்தரவு எல்லாம் மற்றக் கட்சிகளுக்கு சிரமங்களை கொடுக்கிறதோ இல்லையோ தி.மு.கவுக்குத் தர்ம சங்கடத்தை உருவாக்கும்.   

ஆகவே, மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசாங்கத்தின் கெடுபிடிகளை விட, தேர்தல் ஆணைக்குழு மற்றும் வருமான வரித்துறையின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டிய சூழல் தி.மு.கவுக்கு எழும் என்பதில் சந்தேகமில்லை. எல்லாக் கெடுபிடிகளையும் மிஞ்சி தி.மு.க இன்றைக்கு தொகுதியில் தனிப் பெரும் கட்சியாக இருக்கிறது என்பது அக்கட்சிக்கு உள்ள பலம்.  

அதேபோல் சுயேட்சையாகப் போட்யிடும் டி.டி.வி தினகரனும் தொகுதியில் இப்போது, ‘அறிமுக வேட்பாளர்’தான். சென்ற இடைத் தேர்தலின் போது, ‘தொப்பி’ சின்னத்தை வீடு வீடாகக் கொடுத்துப் பிரச்சாரம் செய்த நேரத்தில்தான், தேர்தலில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பட்டியலை வருமான வரித்துறை கைப்பற்றியது.  
அந்தப் பட்டியல் மீதான மேல் நடவடிக்கையில் தாக்கம் ஏதும் இல்லை என்றாலும், சென்ற இடைத் தேர்தலை இரத்து செய்வதற்கு அந்தப் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவுக்குப் பேருதவியாக இருந்தது.   

ஆகவே இந்த முறையும், தாராளமாகப் பண விநியோகம் செய்வதற்கு தினகரனுக்கு சாத்தியமில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் இருக்கும் இரண்டு ஆட்சிகளின் கருணையும் தினகரனுக்கு இல்லை என்பதால், தேர்தல் பிரசாரத்தை சட்டத்திட்டத்துக்க உட்பட்டே செய்ய வேண்டிய நெருக்கடிக்கு டி.டி.வி தினகரன் இந்த முறை ஆளாவார்.   

சென்ற தேர்தலின்போது இருந்த, அதிகாரபலம், காவல்துறை உதவி எல்லாம் இந்த முறை தினகரனுக்குக் கிட்டாது. ‘அண்ணா’ இல்லாத புதிய கொடியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கும் டி.டி.வி தினகரனுக்கு இரட்டை இலை இல்லாதது இழப்புத்தான். ஆனால், தினகரன் அணியில் உள்ளவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இருக்கிறது என்பது கூடுதல் பலம். அதேபோல் ஒருவேளை ஏற்கெனவே அவர் பிரபலப்படுத்திய தொப்பி சின்னத்தைப் பெற்று விட்டால், கனிசமான வாக்குகளை இந்தத் தொகுதியில் வாங்குவதற்கு தினகரனுக்கு வாய்ப்பு இருக்கிறது.   

தினகரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அ.தி.மு.கவை விட அதிக வாக்குகள் பெற்று விட வேண்டும் என்பதே வியூகம். இந்த வியூகம்தான் எதிர்காலத்தில், “நாங்களே ஒரிஜினல் அ.தி.மு.க” என்று போர்க்கொடி தூக்க உதவும் என்று நம்புகிறார் டி.டி.வி. தினகரன். இதற்கு பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆசிர்வாதமும் இருக்கிறது என்பதுதான் இப்போதைய தகவல்.  

அதேநேரத்தில், ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் சார்பில் காரசார விவாதத்துக்குப் பிறகு, வேட்பாளராகியிருக்கும் மதுசூதனன் தொகுதியில் மிகவும் பிரபலமானவர். இரட்டை இலைச் சின்னம் பெற்ற வழக்கில் இவர்தான் கதாநாயகன் என்று அ.தி.மு.கவினரால் கருதப்படுவர்.   

அ.தி.மு.கவின் அவைத் தலைவராக இருக்கும் இவர், ஆர்.கே. நகர் தேர்தலில், சகல அதிகார பலத்துடன் பவனி வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முழுக்க முழுக்க ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுசூதனனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைக்குள் இருக்கும் அதிகார வர்க்கம் எந்த அளவுக“கு உதவி செய்யப் போகிறது என்பது மில்லியன் டொலர் கேள்வியாகவே இருக்கிறது.   

ஏற்கெனவே அமைச்சர் ஜெயக்குமாருக்கும் - அவைத் தலைவர் மது சூதனனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இது போதாதென்று, மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலும் வெளிப்படையாக கருத்தொற்றுமை இருப்பது போல் தெரிந்தாலும், உள்ளுக்குள் ‘கத்திக்குத்து’ நடத்திக் கொண்டது போன்ற கருத்து மோதல்கள் இருந்திருப்பது உண்மைதான்.   

ஆகவே, ஆளுங்கட்சி என்ற சாதகமான அம்சம் மதுசூதனனுக்கு இருந்தாலும், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகியோருக்கு இடையில் உள்ள ஒற்றுமை, இப்போதைக்கு ‘எண்ணையும் தண்ணீரும் போல்’ இருப்பது மிகப்பெரிய சோதனையாக இருக்கிறது.   

இரட்டை இலை கிடைத்திருப்பது மட்டுமே இப்போதைக்கு மதுசூதனனுக்கு உள்ள சாதகமான காரணம். இந்த அணியைப் பொறுத்தமட்டில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அயராது உழைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.   

ஒருவேளை தி.மு.க.விடம் தோற்றாலும் பரவாயில்லை, தினகரனை விடக் குறைவாக வாக்குகளை வாங்கி விடக்கூடாது என்பதும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணியின் கவலையாக இருக்கிறது.  

இந்த மூன்று அணிகளின் மூன்று வியூகங்களில் எந்த வியூகம் ஜெயிக்கும் என்பதை ஆர்.கே. நகர் வாக்காளர்கள் முடிவு செய்யவிருக்கிறார்கள். பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிட முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுத்தது.   

அப்போது வந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜெயலலிதா. பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அவரது மறைவால் அறிவிக்கப்பட்ட முதல் இடைத் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இப்போது மூன்றாவது இடைத்தேர்தலாக ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெற விருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால், “நான்தான் உண்மையான அ.தி.மு.க” என்ற கோஷத்தை முன் வைப்பார்.  

ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெற்றால், ஆளுங்கட்சிக்குள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கும். அதுமட்டுமின்றி, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அ.தி.மு. கவுக்கு தி.மு.கவை எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றல் இருக்கிறது என்ற செல்வாக்குக் கிடைக்கும்.   

தினகரன் அணியில் இருக்கும் மேலும் சிலர் அ.தி.மு.கவுக்கு அணி மாறும் வாய்ப்பு ஏற்படலாம்.   

அதேநேரத்தில் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றே தகவல்கள் வெளிவருகின்றன.   

‘இனிமேல் தி.மு.க.தான் வெற்றி பெறும்’ என்ற இமேஜை இந்த இடைத் தேர்தல் வெற்றி மூலம் நிரூபிக்க வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.  

ஆகவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தி.மு.கவின் தலைமைக்கு, குறிப்பாக ஸ்டாலினின் தலைமைக்கு மற்றுமொரு சோதனை என்ற நிலையே உருவாகியிருக்கிறது.   
தினகரனும், மதுசூதனனும் தோற்றால் இழப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. 

ஏனென்றால், அ.தி.மு.க ஏற்கெனவே கோஷ்டி பூசல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மதுசூதனன் வெற்றி பெற்றால், இவ்வளவு பிரச்சினைகளுடன் உள்ள அ.தி.மு.கவையும் தி.மு.கவால் தோற்கடிக்க முடியவில்லை. குறிப்பாக, அக்கட்சியை தலைமையேற்று நடத்தும் ஸ்டாலினால் தோற்கடிக்க முடியவில்லை என்ற இமேஜ் ஏற்படும்.  

ரஜினி, கமல், விஜய் என்று பலரும் முதலமைச்சர் கனவில், அரசியல் பிரவேசத்துக்குக் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஸ்டாலினுக்கு அப்படியொரு பழி ஏற்படுவது தி.மு.கவிற்குப் பெரிய சோதனையாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது.   

ஆகவே, ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அ.தி.மு.கவுக்குள் உள்ள அணிகளை விட தி.மு.கவுக்குத்தான் மிகப்பெரிய வேள்வி என்பதுதான் இப்போதைய கள நிலைவரம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .