2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்?

எம். காசிநாதன்   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்குமான தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடாத்துவது பற்றிய விவாதம் ஆரம்பித்துள்ளது. மாநிலங்களில், குறிப்பாக உத்தரப் பிரதேசம் போன்ற மிகப் பெரிய மாநிலங்களில், பல தடவைகளாகத் தேர்தலை நடத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையகமும் “ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தத் தயார்” என்று அறிவித்திருப்பதால், இந்த விவாதம் மேலும் சூடுபிடிக்கும் அளவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆளுங்கட்சியான பா.ஜ.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தெலுங்கு தேசம் கட்சியும், இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகப் பேசினாலும், மற்ற எதிர்க்கட்சிகள், இன்னும் இது பற்றிய ஆதரவு நிலைப்பாட்டுக்கு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கெனவே ஒருமுறை, இப்படியொரு “ஒரே கட்டத்திலான” தேர்தலுக்கு விருப்பம் தெரிவித்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என்று, சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே பிரசாரம் செய்யும் இந்த நேரத்தில், அனைத்துச் சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பாரா என்பது, கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, 1999இல் இந்திய சட்ட ஆணைக்குழுவின் தலைவராக பி.பி. ஜீவன் ரெட்டி இருந்தபோது, முதன் முதலில் பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், 1996இல் தொடங்கி 2004ஆம் ஆண்டுக்குள் நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் மூலம், மக்களவையின் ஆயுள், ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கவில்லை என்பதே ஆகும். 1951-52 ஆம் ஆண்டில் ஆரம்பித்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, 1957, 1962, 1967 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மூலம், முழு ஐந்து ஆண்டுகள், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது.

அதன் பிறகு, 1977இல் வந்த ஜனதா கட்சி ஆட்சியாக இருந்தாலும், 1989இல் ஆரம்பித்த தேசிய முன்னணி ஆட்சியும், 1996 முதல் 1998 வரையிருந்த ஐக்கிய முன்னணி ஆட்சியும், ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை. குறிப்பாக, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், சரன்சிங், சந்திரசேகர் போன்றோரால், முழு ஐந்து ஆண்டுகளும், பிரதமராக நீடிக்க முடியவில்லை. இந்தத் துரதிர்ஷ்டம், பா.ஜ.கவின் வாஜ்பாய்க்கே, 1998இல் ஏற்பட்டது. 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்து விட்டுப் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், காங்கிரஸ் அல்லாத எந்தக் கட்சியும், மத்தியில் ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருக்க முடியாது என்ற கோட்பாடே உறுதியானது. ஏன், “எங்களைத் தவிர வேறு யாரும் ஐந்து ஆண்டு நிலையான ஆட்சியை அளிக்க முடியாது” என்றே பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதை, முதலில் முறியடித்துக் காட்டியவர், பிரதமராக இருந்த வாஜ்பாயே. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவர் வெற்றிபெற்றாலும், தேசிய முற்போக்குக் கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கி, 1999 முதல் 2004 வரை, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மத்தியில் பிரதமராக இருந்தார்.

“கூட்டணி சகாப்தத்தில்” அப்படியொரு சாதனையை ஏற்படுத்திய வாஜ்பாய்க்குப் பிறகு, மீண்டும் 2004இல், அதே கூட்டணி ஆட்சியை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில், பிரதமராக இருந்த டொக்டர் மன்மோகன்சிங், 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை, பிரதமராகத் தொடர்ந்து, பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்.

இந்த அடிப்படையில், தனியாகவோ, கூட்டணியாகவோ, காங்கிரஸ் கட்சியால் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பதை நிலைநிறுத்தி இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், 1984க்குப் பிறகு, ஒரே கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருக்கும் சூழல், 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுக்குக் கிடைத்திருக்கிறது. குறிப்பாக, தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, தன் சொந்தக் கட்சிப் பலத்துடன், மத்தியில் பிரதமராக இருக்கிறார்.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல முன்னணி மாநிலங்களில், பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் “ஒரே நேரத்தில் தேர்தல்” என்றால், பலமிழந்து காணப்படும் காங்கிரஸ் கட்சிக்கு, மேலும் தோல்வியைக் கொடுக்க முடியும் என்று, பா.ஜ.க நம்புகிறது. அந்த நம்பிக்கையின் ஆரம்பம்தான் “சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கலாம்”என்ற முழக்கம். 
மத்தியில் ஆளுங்கட்சியாக வரும் கட்சி, தங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது என்று கருதும் நேரங்களில் எழுப்பும் முக்கியமான குரல்தான் இது. 1999இல், மத்தியில் பா.ஜ.க மிகவும் வலுவாக ஆட்சிக்கு வந்த போது, இந்தக் கோரிக்கை எழுந்தது. பிறகு, 2004-2014இல், காங்கிரஸ் வலுவாக இருந்த போது, இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இப்போது, பா.ஜ.க வலிமையாக இருக்கும் போது, மீண்டும் “ஒரேநேரத்தில் தேர்தல்”என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே கட்டத்தில், சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் என்பதை, முதலில் இந்தியச் சட்ட ஆணையகம் பரிந்துரைத்தது. பிறகு, சுதர்சனன் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, 2015இல், இது தொடர்பாக ஓர் அறிக்கையை அளித்தது.

அந்த அறிக்கையில், “நடத்தை விதிகள், தேர்தல் செலவுகள், அத்தியாவசியப் பணிகள் தடைப்படுவது, தேர்தலுக்காகப் பயன்படும் அரச இயந்திரத்துக்கு ஏற்படும் சுமை” போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, “ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம்” என்று பரிந்துரை செய்தது. சுதர்சனன் நாச்சியப்பன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின் தொடர்ச்சியாகவே, பிரதமர் நரேந்திரமோடி “ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்” என்று, விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். அதை, மேலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்ற “நிதி அயோக்”, இது குறித்துத் தனி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், “ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் வருடத்துக்கு இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் தேர்தல் நன்னடத்தை விதிகள், மாநிலத்தில் அமுல்படுத்த வேண்டிய நிலையில், அரச இயந்திரம் முடங்கி விடுகிறது.

ஆகவே, நாட்டின் நலன் கருதி, சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிறந்தது”என்று, கூறியது. அது மட்டுமின்றி, சராசரியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும், அந்தத் தேர்தல்கள் செலவுகளை இரட்டிப்பாக்குவதுடன், தேர்தல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அரச ஊழியர்களுக்கும் இராணுவத்தினருக்கும் சிரமமாக இருக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளது. இந்த “நிதி அயோக்”இன் அறிக்கைதான், விவாதத்தின் உச்சக் கட்டத்தில், அரசியல் கட்சிகள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையகமும், “நாங்கள் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தத் தயார்” என்று அறிவித்திருப்பதால், எதிர்க்கட்சிகள் பலவும், போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.

“மாநில அரசாங்கத்தைக் கலைக்கும் அரசியல் சட்டப் பிரிவு 356ஆவது பிரிவு இருக்கும் வரை, ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை” என்று, எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

அதே நேரத்தில், இந்தக் கோரிக்கையை, ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் முன் வைத்த பா.ஜ.க, இன்றைய சூழ்நிலையில் வலியுறுத்துமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. “பொருளாதாரத்தில், இந்தியா பின்தங்கியுள்ளது” என்று, பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் இந்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சிங்கா, பகிரங்கமாக எழுதியிருக்கிறார்.

பொருளாதாரத்தின் நெளிவுசுளிவுகளை நன்கு அறிந்த இன்னொரு பா.ஜ.க மூத்த தலைவரான டொக்டர் சுப்ரமணியன் சுவாமியும், இந்தியா “பொருளாதாரப் பாதிப்பை” நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பேட்டியளித்து வருகிறார். இவற்றுக்கெல்லாம் பதில் அளிப்பது போல், “பொருளாதாரத்தில் பின்னடைவு இருக்கிறது. ஆனால், அதை விரைவில் சரி செய்து, பொருளாதாரம் வீறு நடைபோடும்” என்று, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஆதார் அட்டை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமுல் என்ற இந்த மூன்றுமே “டிஜிட்டல் இந்தியாவின்” முன்னோட்டமாக இருப்பதால், அடித்தட்டு மக்களுக்கும் கிராம அளவில் இருப்போருக்கும், சிறு மற்றும் குறு தொழில் செய்வோருக்கும், சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை. அதனால்தான், பிரதமரே கூட, “பொருளாதாரப் பின்னடைவு” குறித்து வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, இன்றைய நிலையில், பொருளாதாரத்தில் இந்தியாவை மீண்டும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வருவதே, பிரதமர் நரேந்திர மோடியின் முதல் நடவடிக்கையாக, இனி இருக்கும் என்று நம்பலாம். அது மட்டுமல்ல, பா.ஜ.க தலைமையிலான மத்திய ஆட்சியின் முதல் செயற்றிட்டமாகவும் இனி இருக்கும்.

இந்நிலையில், ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் என்ற திட்டம், “2019ஆம் ஆண்டு வருகின்ற பொதுத் தேர்தலுக்கு” பிறகே, ஒரு வடிவத்துக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.

அதற்கு முன்பு, ஒரே காலகட்டத்தில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றால், அது காங்கிரஸ் கட்சிக்கும் மற்ற மாநில கட்சிகளுக்கும், சாதகமாக அமைந்து விடக்கூடும் என்ற எண்ணம், பா.ஜ.க தலைவர்களுக்கு அறவே இல்லை என்று, ஒதுக்கித் தள்ளி விட முடியாது என்பதே இன்றைய நிலை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .