2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சிக் கோப்பை அரசியல்

மொஹமட் பாதுஷா   / 2018 ஜூன் 08 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள், அனைத்து ஆட்சியாளர்களிலும் அதிருப்தியுற்ற ஒரு காலமாக, நிகழ்காலம் கடந்து கொண்டிருக்கின்றது.   

நெடுங்காலத் தலையிடிகளுக்கு மருந்து தேடாமல், தலையணைகளை மட்டும் மாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் போக்கு, இலங்கையில் காணப்படுகின்றமையால் இன்னும் தலைப்பாரங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதே, முஸ்லிம்களின் அனுபவமாக இருக்கின்றது.   

இவ்வேளையில், முஸ்லிம்களைத் தம்வசப்படுத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தரப்புகள், தொடர்ச்சியான பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன.  

புனித ரமழான் நோன்பு காலத்தில், நோன்பு திறப்பதற்காக மேற்படி தரப்பினரால் ஏற்பாடு செய்யப்படுகின்ற இப்தார் நிகழ்வுகளுக்குப் பின்னாலும், ஒரு நூதன அரசியல் உபநோக்கம், ஒளித்துக் கொண்டிருக்கின்றது என்பதை, உன்னிப்பாக நோக்குவோரால் உய்ந்தறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.   

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியும் ராஜபக்‌ஷகளின் இராஜாங்கமும் இனவாதத்துக்குச் ‘சூடம்’ காட்டுகின்றது என்ற வெஞ்சினத்திலேயே, நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முஸ்லிம்கள் முன்னின்றனர்.   

பல தேர்தல்களில் தோல்வியுற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவினதும், சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர், ஜனாதிபதிக் கனவுகளை ஒருசேர நிஜமாக்குவதற்கு, முழுமூச்சுடன் ஆதரவளித்த சமூகமாக முஸ்லிம்களைச் சொல்ல முடியும்.   

தமிழர்களும் முஸ்லிம்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார்கள் என்ற போதும், இரு இனங்களும் வேறு வேறு காரணங்களுக்காக, இந்த முடிவை எடுத்திருந்தன.   

தமிழர்களைப் பொறுத்தமட்டில், விடுதலைப் போராட்டத்தை முறியடித்தமை, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் மஹிந்த ஆட்சியில் பெரும் வெறுப்படைந்திருந்தனர்.   

மைத்திரிபால சிறிசேன பற்றிய நம்பிக்கைகளை விட, ரணில் விக்கிரமசிங்க மீதான தமிழர்களின் நம்பிக்கை உயர்ந்த  பட்சம் எனலாம். ரணிலுக்கு அதிகாரம் வந்தால், நல்லதொரு தீர்வுத் திட்டத்துக்கான கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழர்கள் 2015ஆம் ஆண்டு தேர்தல்களில் ஆதரவளித்தனர்.   

முஸ்லிம்கள், இந்தக் காரணங்களுக்காக ஆட்சி மாற்றத்துக்குத் துணைநிற்கவில்லை; முஸ்லிம்கள் தனிநாடு கேட்டுப் போராடவும் இல்லை; அதை மஹிந்த அரசாங்கம் கருவறுக்கவும் இல்லை. 

இனப்பிரச்சினைத் தீர்வில், முஸ்லிம்களுக்குரிய பங்கை உறுதிப்படுத்துவதில், மஹிந்த காலத்தில் காணப்பட்ட சவால்களைப் போலவே, மைத்திரி - ரணில் காலத்திலும் முட்டுக்கட்டைகள் இருக்குமென்பதை முஸ்லிம்கள் அறியாதவர்களுமல்லர்.  

ஆனால் இனவாதம், பெருந்தேசிய நெருக்குவாரங்கள், மதவாத செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சியும் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவும் பெருவாரியாக விமர்சித்தமையால், அவர்கள் முற்போக்கு ஆட்சியாளர்களாக இருப்பார்கள் என முஸ்லிம்கள் கருதினர்.

மைத்திரி - ரணிலை ஆட்சிக்குக் கொண்டு வந்தால், இனவாத சக்திகளுக்குக் கைவிலங்கிட்டுக் கூட்டில் அடைப்பார்கள் என்று முஸ்லிம்கள் திடமாக நம்பியே, மைத்திரிக்கும் பின்னர் ஐ.தே.முன்னணிக்கும் வாக்களித்தார்கள்.    

இருப்பினும், நடைமுறை யதார்த்தம் என்பது, முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறானதாக இருக்கின்றது என்பதை, சொல்லாமல் விட முடியாது. இனவாதம், முகமூடிகளை அணிந்து கொண்டு, முஸ்லிம்களின் இன, மத அடையாளங்களுக்கு எதிராக, ‘ருத்ரதாண்டவம்’ ஆடிக் கொண்டே இருக்கின்றது.  

 பேருவளை, அளுத்கம கலவரங்களை விட, நன்கு திட்டமிடப்பட்ட வன்முறைகள் அம்பாறை, திகண, கண்டிப் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதுகாப்புத் தரப்பினரும் பொறுப்பு வாய்ந்தவர்களும் பார்த்துக் கொண்டிருக்க, முஸ்லிம்களின் சொத்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.   

முஸ்லிம்களின் இரட்சகர்கள் போலவும், பாதுகாவலர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற நல்லாட்சி அரசாங்கத்தால், வன்முறைகளை முன்கூட்டியே தடுக்கவோ, உடனடியாகக் கட்டுப்படுத்தவோ முடியவில்லை.  

கண்டியில், ஆகக்குறைந்தது இரண்டு நாட்களின் பின்னரே, சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியது. பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் சொத்துகளும் உயிரும் இனவாதத்துக்குப் பலி கொடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து விட்ட பிறகு, இழவு வீட்டில் துக்கம் கொண்டாட வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.   

ஆகவே, அம்பாறை, திகண பிரதேசங்களில் நடைபெற்ற கலவரங்கள் முஸ்லிம்களின் மனதில் பெரும் தாக்கத்தையும் ஒருவித மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்று சொல்லலாம். திகண கருகியபோது, நல்லாட்சி மீது முஸ்லிம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் சாம்பராகிப் போனது என்பதை சொல்லித்தானாக வேண்டும்.   

தம்புள்ளையில் தொடங்கி, அளுத்கம வரையான வன்முறைகளுக்குக் காரணமாகவோ அல்லது அதை கட்டுப்படுத்தாமலோ ராஜபக்‌ஷகள் இருந்தார்கள் என்று கருதி, மற்றைய தரப்பை ஆட்சிக்கு கொண்டுவந்தால், அம்பாறை தொடங்கி, கண்டி வரையும் அதேபோன்ற இனச்சம்ஹாரம்தானே நடந்து கொண்டிருக்கின்றது என்ற எண்ணம், முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.   

சுருங்கக் கூறின், முஸ்லிம்களைப் பாதுகாக்கும் விடயத்தில், அந்த அரசாங்கத்துக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சிறிய வித்தியாசங்களே உள்ளன என்பதையே, அண்மைய வன்முறைகள், முஸ்லிம்களுக்கு உணர்த்தியிருக்கின்றன.   

இதன் பக்கவிளைவாக, மஹிந்த மீதான, முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் கோபப் பார்வை சற்று தணியத் தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது. இரண்டு ஆட்சிக்கும் இடையிலான, எதிர்பார்க்கப்பட்ட வித்தியாசத்தைத் தற்போதைய அரசாங்கமானது, முஸ்லிம்கள் உணரும்படி செய்யாமையால் இந்நிலைமை உருவாகியுள்ளது.   

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களை நோக்கி நேசக்கரங்களை நீட்டத் தொடங்கியிருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. 

தனது ஆட்சியிலும் இன்றைய ஆட்சியிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றால், அந்தச் சம்பவங்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் இரண்டு ஆட்சியாளர்களுக்கும் இடையில் பண்புநிலை வேறுபாடுகள் இல்லை என்பதையும் மஹிந்த ஆதரவு அணி, முஸ்லிம்களுக்கு உணர்த்த முற்படுகின்றது.   

முஸ்லிம்களுக்கு ஒரு தெரிவே இல்லை என்று கருதப்பட்ட மஹிந்த தரப்பை (பொதுஜன பெரமுன), இதன்மூலம் ‘மாற்றுத் தெரிவுகளுள்’ ஒன்றாக முன்னேற்றுவதே, மஹிந்த ராஜபக்‌ஷவின் முதலாவது இலக்காக இருக்க வேண்டும்.   

அதாவது, ‘எல்லாரும் நமக்கு ஒன்றுதான்; எனவே, மஹிந்த அணிக்கு வாக்களித்தால் என்ன?’ என்று சிந்திக்கும் நிலைக்கு முஸ்லிம்களை கொண்டு வருதலாகும். அப்படியானால் அந்த இலக்கில், மஹிந்த வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம், முஸ்லிம் விவகாரங்களில், நல்லாட்சி அரசாங்கம் நடந்து கொண்ட விதமாகும்.   

இப்போது நாடு இன்னுமொரு தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறலாம். 

என்ன நடந்தாலும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் இன்னும் ஒன்றரை வருடங்களைத் தாண்டப் போவதில்லை என்ற நிலையில், முஸ்லிம்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்து, அதன்மூலம் சரிந்த வாக்குவங்கியை இப்போதிருந்தே தூக்கி நிறுத்தும் வேலையை, மஹிந்த அணி மேற்கொண்டு வருகின்றது.

மஹிந்த பக்கம் முஸ்லிம்கள் சென்று விடாமல் இழுத்துப் பிடிக்கும் வேலையை சு.கவும் ஐ.தே.கவும் மேற்கொள்கின்றன.   

நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான, அதிகாரப் பனிப்போர் உக்கிரமடைந்துள்ள சமகாலத்தில், இனவாதத்துக்கு மேலதிகமாக, தற்போது மதவாதமும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கொடிபிடிக்கத் தொடங்கியுள்ளதைக் காண்கின்றோம்.   

எனவே, இந்துத்துவ வாதத்துக்கு எதிரானவர் எனக் கருதப்படக் கூடிய மஹிந்த ராஜபக்‌ஷவுடன், முஸ்லிம்கள் மீள ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கும் கைங்கரியங்களில், அரசாங்கம் உன்னிப்பாகக் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட முடியும்.   

குறிப்பாக, புனித நோன்புக் காலத்திலும் இதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம்களைச் சந்திப்பதற்கும் உறவைப் பலப்படுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக, நோன்பு திறக்கின்ற இப்தார் நிகழ்வுகளைப் பிரதான கட்சிகள் பயன்படுத்துகின்றன.  

முஸ்லிம்கள், இப்தாருக்கான அழைப்பைத் தட்டிக் கழிக்க மாட்டார்கள் என்ற எடுகோளின் அடிப்படையில், நோன்பு திறப்பதற்கான பிரதான நீராகாரமாகத் திகழும், ‘கஞ்சிக் கோப்பை’க்குள் இக்கட்சிகள், மறைமுக ‘அரசியல்’ செய்யப்பார்க்கின்றன.  

“ஜனாதிபதியின் இப்தாருக்கு அழைப்பு வந்துள்ளது”, “பிரதமரின் இப்தாருக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது”, “முன்னாள் ஜனாதிபதி என்னை இப்தாருக்கு கூப்பிட்டுள்ளார்...” என்று ஒருவித பெருமிதத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கட்சித் தலைவர்களும் பிரமுகர்களும் வர்த்தகர்களும் இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஒருபுறமிருக்க, இதற்குப் பின்னால் அடுத்த தேர்தல் வெற்றி குறித்த, ஓர் அரசியல் நலன் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.   

இம்முறை முதலாவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனது இப்தார் நிகழ்வை நடத்தியிருந்தார். இந்நிகழ்வில் மஹிந்த ராஜபக்‌ஷவைக் கடுமையாக விமர்சித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மஹிந்தவுடன் தனக்குப் பெரிய உறவுகள் இல்லை என வெளிக் காட்டிக் கொண்ட, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்து கொண்டனர்.   

அதுமட்டுமன்றி, கடைசி வரையும் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணியவரான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மட்டுமன்றி, ‘மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடாது’ என்று, ஒற்றைக்காலில் நின்று, மு.கா தலைவர் ஹக்கீமை இழுத்துக் கொண்டு வந்து, மைத்திரிக்கு ஆதரவளிக்கச் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரி. ஹசன்அலியும் இந்த இப்தாரில் கலந்து கொண்டிருந்தார்கள்.   

ஆனால், ஹசன் அலி தலைமையிலான கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இந்த நிகழ்வுக்குச் சென்றிருக்கவில்லை.   

அதைத் தொடர்ந்து, பிரதமரின் இப்தார் நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு, ஜனாதிபதியின் இப்தார் இடம்பெற்றது. இவ்விரு நிகழ்வுகளிலும், கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.   

இந்த மூன்று இப்தார்களும் கவனிப்புக்கு உரியன. மஹிந்த ராஜபக்‌ஷவின் இப்தாரில் கலந்து கொண்டவர்களிடையே, முஸ்லிம்கள் பற்றி அவர் பேசவில்லை. வெளியில் வந்து, நடப்பு அரசியல் நிலைவரங்கள் குறித்தே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். 

இருப்பினும், அவரை அநேகமான முஸ்லிம் தலைவர்கள் சந்தித்துள்ளனர். சிலரைத் தனியாக அழைத்து, அவர் ஆழமாக உரையாடியுள்ளார்.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தாரில், உரையொன்றை நிகழ்த்தியபோது, “தேர்தல்களில், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற, ஜனாதிபதியின் இப்தாரையும் முஸ்லிம்களிடையே நல்லெண்ணம் ஏற்படும் விதத்தில், ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார்.   

முஸ்லிம்களுக்காகப் பெருந்தேசிய அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது நல்ல விடயமும் நன்றிக்குரியதுமேயாகும். அது நல்லிணக்கத்துக்கு ஓர் அடிப்படையாக அமைய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்துகள் கிடையாது.   

ஆனபோதும், முஸ்லிம் அரசியல்வாதிகளோ முஸ்லிம் கட்சிகளோ இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். கஞ்சிக் கோப்பைக்குள் இருக்கின்ற அரசியலுக்குள் மூழ்கிவிடக்கூடாது.  

சில வருடங்களுக்கு முன்னர், இதேபோன்ற ஒரு நோன்புக் காலத்தில்தான், கிறீஸ் பூதங்களை முஸ்லிம் பிரதேசங்களுக்குள் அனுப்பி வைத்தார்கள்.

ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் விலங்கிடப்படும் இனவாத சக்திகள், பல நோன்புக் காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதையும் அதனால் முஸ்லிம்களுக்கு நோன்புக் காலத்தில் ஏற்பட்ட பௌதீக, உளவியல் தாக்கங்களையும் மறந்துவிட முடியாது.  

எனவே, இப்தாருக்கு அழைப்பது எவ்வாறு நல்ல காரியமோ, அதுபோலவே அதில் கலந்து கொண்டு, அவர்களைக் கௌரவப்படுத்தி, முஸ்லிம்களின் நற்பண்பை வெளிப்படுத்துவதும் அவசியமாகும்.   

அழைப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில்லை. மஹிந்தவின் இப்தாருக்கு போனவர்கள் துரோகிகள் என்றோ, மற்றையவர்கள் சமூக சிந்தனையாளர்கள் என்றோ குறிப்பிடவும் முடியாது. ஆனால், கஞ்சிக் கோப்பையை அதாவது, இப்தாரை வைத்துப் பெருந்தேசியக் கட்சிகள், அடைய நினைக்கும் அரசியல் நலன் குறித்துச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு, முஸ்லிம்களுக்கு உள்ளது.   

சிறுசிறு வரப்பிரசாதங்கள், மனமகிழ்ச்சிகள், கௌரவங்களின் அடிப்படையில் அடுத்த தேர்தலுக்கான ஆதரவு தொடர்பான தீர்மானத்தை முஸ்லிம் கட்சிகள் எடுக்காமல், ஒவ்வொரு பெருந்தேசிய கட்சியாலும் ஆட்சியாளர்களாலும் நமக்கு ஏற்பட்ட நீண்டகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே, மைத்திரியையா, ரணிலையா, மஹிந்தவையா தேர்ந்தெடுப்பது என்ற முடிவுக்கு வரவேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .