2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குற்றவியல் வழக்குகளுக்கு விசேட மேல் நீதிமன்றம்

Nirshan Ramanujam   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் குற்றவியல் வழக்குகளை துரிதமாக நடத்திச் செல்வதற்கு, விசேட மேல் நீதிமன்றம் அமைத்தல், மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய நீதாய விளக்கத் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) அமைத்தல் உள்ளிட்ட 35 பரிந்துரைகள் கொண்ட அறிக்கை, ஊழல் எதிர்ப்புப் பற்றிய சட்ட விவகாரங்கள் மற்றும் ஊடக விவகாரங்களுக்கான நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (12) மாலை கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாகவும், அவற்றை ஆறு மாத காலத்துக்குள் நிறைவேற்றுவது தொடர்பில் ஆராயுமாறும், நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என, பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா, தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

“ஊழல் எதிர்ப்புப் பற்றிய சட்ட விவகாரங்கள் மற்றும் ஊடக விவகாரங்களுக்கான கண்காணிப்புக் குழுவினரான நாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, குற்றவியல் வழக்குகளைத் துரிதமாக நடத்திச் செல்வதற்கான எமது பரிந்துரை அறிக்கையைக் கையளித்தோம்.  

“விசேட மேல் நீதிமன்றம் அமைத்தல், மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய நீதாய விளக்கத் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) அமைத்தல், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை 100 பேரால் அதிகரித்தல், தற்போது கவுன்சிலர்களாகப் பணியாற்றுவோரின் சம்பளத்தை அதிகரித்தல், தற்போது அமுலில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தை திருத்துதல் ஆகியவற்றை, பிரதான பரிந்துரைகளாக முன்வைத்துள்ளோம். 

“இந்தப் பரிந்துரைகள் அனைத்தும், விரிவாக ஆராயப்பட்டு, நிபுணர்கள் பலரின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை மிகத் துரிதமாகச் செயற்படுத்த வேண்டும் என, ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுத்தேன். 

“இலங்கையில், பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோர் மீதான வழக்கு விசாரணைகள், மிக மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன என, மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். ஊழல் மோசடிகள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்துவோம் என, மக்களுக்கு ஏற்கெனவே நாம் வாக்குறுதியளித்திருந்தோம். அதன்பிரகாரமே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்” என்றார். 

ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பில், நீதியமைச்சர் தலதா அத்துகோரல, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, பிரதியமைச்சர்களான அஜித்.பி.பெரேரா, கருணாரத்ன பரணவிதான, துஷ்மந்த மித்ரபால, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோதாகொட யசந்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .