2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலையகத் தமிழ்ப் பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் காணி

Niroshini   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்

பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் ஏற்பட்டிருந்த ஒரு சில பின்னடைவுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது எனவும், அதனடிப்படையில் இரண்டு ஏக்கர் காணி, பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதெனவும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், நுவரெலியாவில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போது, பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணி வழங்க வேண்டும் என்ற விடயம், கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது கடந்த காலங்களில் நடைமுறைபடுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகளின், கல்விச் செயற்பாடுகளுக்காக, 843 பாடசாலைகள் இலங்கை முழுவதும் இயங்கி வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, இதனைக் கருத்தில் கொண்டு, அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தான் முன்வைத்த கோரிக்கைக்கு, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கின்றது என்ற தகவலை வெளியிட்டார்.

"கல்வி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து, அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தன. அந்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய, பெருந்தோட்டப் பாடசாலைகளில் தற்போது அதிகபட்சமாக 2 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை 2 ஏக்கரினுள்ளே மேற்கொள்வதற்கு, அக்காணி உரிமையை, கல்வி அமைச்சு சுவிகரித்துக் கொள்ளும்.

"தற்போது 2 ஏக்கர் நிலப்பரப்பை விடக் குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்காக, அதிகபட்சமாக 2 ஏக்கராவதற்குத் தேவையான காணியைப் பெற்றுக் கொடுக்கும் போது, அப்பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள குறைந்த விளைச்சலுடைய (தேயிலை அல்லது இறப்பர்) காணிகளைத் தெரிவுசெய்வதற்கும் முன்னுரிமை வழங்கி, முழுமையாக 2 ஏக்கர் காணியை, கல்வி அமைச்சுச் சுவிகரிக்கும்" என்று தெரிவித்தார்.

காணியைச் சுவிகரிப்பதற்கு முன்னர், பிரதேச பெருந்தோட்டக் கம்பனிப் பணிப்பாளர் சபையின் அனுமதியுடன், திறைசேரிச் செயலாளரின் அனுமதியை வழங்குதல் ஆகிய தீர்மானங்கள் அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, அவர் குறிப்பிட்டார்.

"அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் கல்வி அமைச்சின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை, மிகவும் விரைவாக முன்னெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும், அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .