2024 மே 08, புதன்கிழமை

விலையிடல் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி மாறும்

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி ஷிவானி

எரிபொருட்களுக்கான விலையிடல் சூத்திரம், ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதியன்று மாறுமெனத் தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அதனடிப்படையில் எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (11) இடம்பெற்ற​போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கப்பூர் விலை நிர்ணயத்துக்கு அமைய உள்நாட்டில் எரிபொருள் விலையேற்றம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், அமைச்சரவையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமையவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் நிறுவனங்கள் என்பனவற்றுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமையவும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு, மக்களைப் பெருமளவில் பாதிக்காத வகையில் அதில் ஒரு பங்கை அரசாங்கம் ஏற்றிருப்பதாகவும், விலை அதிகரிப்பு 14 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டி உள்ள நிலையில் 8 ரூபாயே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.

வளர்முகநாடுகளில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படும், இந்தியாவை எடுத்துக்கொண்டால் வாரம் ஒரு தடவை மாற்றம் நிகழும். சகல எரிபொருள் நிலையங்களும் கணினி முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அது சிக்கல் இன்றி முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் அவ்வாறில்லை. அதனால் தான் குறிப்பிட்ட ஒரு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாதா மாதம் 10ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்போ அல்லது குறைப்போ மேற்கொள்ளப்படும் என்றார்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர், போக்குவரத்துக் கட்டணங்களில் ஏதேனும் மாற்றம் மேற்கொள்ளப்படமா? என வினவிய ​போது,

பஸ் சங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டுக்கமைய, 2 வருடங்களுக்கு பஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாதெனக் குறிப்பிட்டார்.

மண்ணென்னை பாவனையைக் குறைக்கும் வகையில், கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரம் இன்றி இருக்கும் 40,000 குடும்பங்களுக்கு இலவசமாக மின்னசாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X