2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகளாவிய ரீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள்

A.P.Mathan   / 2010 நவம்பர் 04 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்து மக்கள் மாதங்கள் பன்னிரெண்டிலும் ஏதோவொரு பண்டிகையையோ அல்லது விரதத்தையோ அனுஷ்டித்து வருகின்றனர். இந்துகளுக்கு பண்டிகைகளோ அல்லது விரதங்களோ இல்லாத மாதங்களே இல்லையெனக் கூறலாம்.

இவ்வாறான பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் ஒவ்வொருவர்களுக்கும் இடையில் காணப்படும் கோபதாபங்கள் மறக்கப்பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவிப்பதன் மூலம், புரிந்துணர்வை ஏற்படுத்துகிறது. அத்துடன், தமது வாழ்நாளில் பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் மறந்து வாழ்வை இனிதே களிப்பதற்கும் பண்டிகைள் வழிவகை செய்கின்றன.

இந்துக்கள் பல்வேறுபட்ட பண்டிகைகளை கொண்டாடியபோதிலும், தீபாவளிப் பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த தீபாவளிப் பண்டிகையை ஒவ்வொரு நாடுகளும் வௌ;வேறான வழிமுறைகளில் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள இந்து மக்கள் தீபாவளிப் பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை தினத்தன்று காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து முதலில் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதுடன், பின்னர் கோவில்களுக்குச் சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபடுவர். இதன் பின்னர் தீபாவளிப் பண்டிகைக்காக தயார் செய்யப்பட்ட பலவகையான சிற்றுண்டிகளை உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களென அனைவருக்கும் கொடுத்து தாமும் உண்டு மகிழ்வார்கள். சிறுவர்கள் பட்டாசுகள் கொளுத்தி மிகவும் ஆரவாரமாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

இதேவேளை, தீபாவளிப் பண்டிகைக்கு பெயர்போன இந்தியாவிலும் கூட வௌ;வேறு வழிமுறைகளில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  

அந்த வகையில், இந்தியாவின் வடநாட்டில் ஐந்து நாள்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தனதேரஸ், இரண்டாவது நாள் நரன் நரக சவுதஸ், மூன்றாம் நாள் தீபாவளி, நான்காம் நாள் கோவர்தன பூஜா, ஐந்தாம் நாள் பையாதூஜ். இது பெண்களுக்கு சகோதர்களிடமிருந்து அன்பளிப்புக்கள் கிடைக்கும் நாள் ஆகுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

குஜராத்திலுள்ள இந்துக்கள் யட்ச ராத்திரி என்று கூறி தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இம்மக்கள் தமது வீடுகள், கோவில்கள் ஆகியவற்றின் முன்பகுதிகளில் வண்ணக் கோலமிட்டு அதில் வரிசையாக தீபங்களை ஏற்றி கொண்டாடுகின்றனர். இதனை ரங்கோலி, அல்பனா என்று அழைப்பார்கள். தீபாவளித் தினத்தில் புதிய துளசிச்செடியை வைத்துப் பூஜை வழிபாடுகள் செய்வதும் இங்கு வழக்கமாகும்.

மகாராஷ்ட்ராவில் மாவினால் மகாபலியின் உருவம் செய்து வழிபடுவார்கள். இதனை அவர்கள் தாம்பூலம் போடும் திருவிழா என்றும் அழைக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, ஏனைய நாடுகளில் எவ்வாறு தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதையும் நாம் சற்று நோக்குவோம்.

மொரீஷியஸிலுள்ள மக்கள் தொகையில் 63 சதவீதத்தினர் இந்தியர்களே உள்ளனர். இங்குள்ள இந்து மக்களும் இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்கான வழிமுறைகளையே கடைப்பிடிக்கின்றனர். அதிகாலையில் துயிலெழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து தீபங்களை ஏற்றி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். பின்னர் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்து, இனிப்புக் பண்டங்களை வழங்கி, பட்டாசுகளைக் கொளுத்தி தீபாவளிப் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
 
இமாலயத்தில் கம்பீரமாகவுள்ள நேபாள நாட்டில் வட இந்தியாவைப் போன்றே ஐந்து நாள்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றன. வானவேடிக்கைகளும் தீபங்களும் ஒளிரும் இத்தீபாவளிப் பண்டிகை நாளில் செல்வங்களை அள்ளி வழங்கும் தெய்வமான லஷ்மி தேவியை வரவேற்பதற்காகக் கூறி தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
 
மலேசியாவில் சுமார் 8 சதவீத இந்தியர்களே உள்ளனர். அவர்களுடன் இணைந்து இங்குள்ள ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையை 'ஹரி தீபாவளி' என்று அழைக்கும் மலேசியர்கள் தென்னிந்திய முறைப்படியே தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.  

சிங்கப்பூரிலும் தீபாவளிப் பண்டிகையானது விழாக்கோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றபோதிலும், அங்கு பட்டாசுகள் கொளுத்துவதற்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வானவேடிக்கைக்களே ஜொலிக்கும்.

பல்வேறு நாடுகளின் கலாசாரங்களைத் தன்னகத்தே கொண்ட தென்னாபிரிக்காவில் இந்தியாவிலிருந்து சென்றவர்களே இருப்பதால் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது போன்றே இங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த இந்து மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் இங்கிலாந்தில் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு கோயில்களுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவர்.  

சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கும் அவுஸ்திரேலியாவில் தீபாவளியை முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றபோதிலும், இந்திய பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்ற பூஜை வழிபாடுகளுக்கு தேவையான பொருட்கள் இங்கு கிடைப்பது சற்று அரிது. எனினும் இருப்பதைக்கொண்டு நவீன முறையில் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
 
இந்தியர்களின் பாரம்பரியத்தை தாங்களும் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்களே ஆவார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுடன் இணைந்து அமெரிக்கர்கள் பலரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

உலகளவில் சகோதரத்துவத்தை வளர்க்கும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது தீயசெயல்களை ஒழித்து நல்ல செயல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்ற தத்துவத்தை மறைமுகமாக உணர்த்தி நிற்கிறது.

-ஆர்.சுகந்தினி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .