2024 மே 02, வியாழக்கிழமை

இறுதிக்குள் நுழைந்தது மே.தீவுகள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 31 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி உலக இருபதுக்கு-20 இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதவுள்ளது.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டரன் சமி, தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். இந்திய அணி சார்பாக காயமடைந்த யுவ்ராஜ் சிங்குக்கு பதிலாக மனீஷ் பாண்டேயும் ஷீகர் தவானுக்காக அஜிங்கியா ராகானேயும் அணியில் இடம்பெற்றனர். மேற்கிந்தியத்தீவுகள் அணியில் காயமடைந்த அன்றே பிளச்சருக்கு பதிலாக லென்டில் சிமோன்ஸ் அணியில் இடம்பெற்றார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களைப் பெற்றது.துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக விராத் கோலி ஒரு ஆறு ஓட்டம், 11, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 47 பந்துகளில் 89 ஓட்டங்களையும் அஜிங்கியா ரகானே 40 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா, 3, ஆறு ஓட்டங்கள், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 31 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சாமுவேல் பத்ரி, அன்றே ரஸல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 193 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக லென்டில் சிமொன்ஸ் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 5, ஆறு ஓட்டங்கள், 7, நான்கு ஓட்டங்கள்  உள்ளடங்களாக 83 ஓட்டங்களையும் ஜோன்சன் சார்ள்ஸ் 36 பந்துகளில் 2, ஆறு ஓட்டங்கள், 7, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களையும் அன்றே ரஸல் ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 4, ஆறு ஓட்டங்கள், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக விராத் கோலி, ஆஷிஷ் நெஹ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக லென்டில் சிமொன்ஸ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .