2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எதிர்கால முன்னேற்றத்துக்கு 'ஆப்கானிஸ்தானின் வெற்றி உதவும்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரின் சுப்பர் 10 சுற்றுக்குத் தகுதிபெற்ற ஒரே துணை அங்கத்துவ நாடான ஆப்கானிஸ்தான் அணி, தான் பங்குபற்றிய முதல் 3 போட்டிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்த போதிலும், அப்போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்திருந்தது.

இந்த வெற்றி, தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிக்கெதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்றமுதல் வெற்றியென்பதோடு, அவ்வணிக்கும் துணை அங்கத்துவ நாடுகளுக்கும் முக்கியமான வெற்றியாகவும் அமைந்தது.
இந்த வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்றுநரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவருமான இன்ஸமாம் உல் ஹக், 'முன்னைய போட்டிகள் அனைத்தும், போட்டித்தன்மையானவையாக அமைந்திருந்தன. ஒருதரப்பு ஆதிக்கம் செலுத்தும் போட்டிகளாக இருந்திருக்கவில்லை. எதிரணி 200 ஓட்டங்களைப் பெற, நாங்கள் 100 அல்லது 150 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கும் நிலைமை இருந்திருக்கவில்லை. அணி, தொடர்ந்தும் போராடிக் கொண்டிருந்தது. நம்பிக்கை அங்கேயே இருந்தது" என்றார்.

'ஆனால், பெரிய அணிகளுக்கெதிராக வெற்றிபெற்ற அனுபவத்தை, ஆப்கானிஸ்தான் அணி கொண்டிருக்கவில்லை. முடித்துவைக்கும் புள்ளியைப் பார்த்திருக்க முடியவில்லை. ஆனால், தற்போது இதை வெற்றிகொண்டுள்ள நிலையில், இது நிச்சயமாக உதவும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஆப்கானிஸ்தான் அணியுடன் இணைந்திருப்பார் எனக் கேட்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தான் அணியுடன் தற்போது ஓர் ஆண்டாக இருப்பதாகவும், தற்போதைய பதவிக் காலத்தை முடித்த பின்னர், அடுத்த கட்டம் குறித்துச் சிந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .