2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாளை ஆரம்பிக்கின்றன அரையிறுதிப் போட்டிகள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 29 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிகள், நாளை ஆரம்பிக்கவுள்ளன இதில், ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியொன்றில் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளதோடு, பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன. இரண்டு போட்டிகளுமே, டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

பெண்களுக்கான போட்டி, நாளை மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நடப்புச் சம்பியன்களாக அவுஸ்திரேலிய அணி, 4 போட்டிகளில் பங்குபற்றி 3 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அவ்வணி தோல்வியடைந்திருந்தது. மறுபுறத்தில் இங்கிலாந்து அணி, தான் பங்குபற்றிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்தது. அவுஸ்திரேலிய அணியில் எலைஸ் பெரி, அலெக்ஸ் பிளக்வெல், அணித்தலைவி மெக் லெனிங் போன்றோர் முக்கிய வீராங்கனைகளாகக் காணப்படுகின்றனர். இங்கிலாந்து அணியில் அணித்தலைவி சார்லட் எட்வேர்ட்ஸ், சாரா டெய்லர் போன்றோர் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.

ஆண்களுக்கான போட்டி, இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்திருந்தது. நியூசிலாந்து அணி, தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, ஆண்களுக்கான போட்டிகளில் தோல்வியடையாத ஒரே அணியாகக் களமிறங்கிறது.

இங்கிலாந்து அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜேஸன் றோய், அலெக்ஸ் ஹேல்ஸ், மூன்றாமிலக்க வீரரான ஜோ றூட், மத்தியவரிசை வீரர் பென் ஸ்டோக்ஸ், பந்துவீச்சாளர்களில் அடில் றஷீத், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் முக்கிய வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

நியூசிலாந்து அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸன், மத்தியவரிசை வீரர்களான றொஸ் டெய்லர், கிரான்ட் எலியட், பந்துவீச்சாளர்களான மிற்சல் சான்ட்னெர், இஷ் சோதி ஆகியோர் முக்கிய வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

டெல்லி மைதானத்தில், இதுவரை இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி பங்குபற்றியுள்ள போதிலும், நியூசிலாந்து அணி இதுவரையில் எந்தவொரு போட்டியையும் இத்தொடரில் விளையாடியிருக்காத நிலையில், ஆடுகளத்தைச் சிறப்பாக அறிந்த அனுகூலத்தை, இங்கிலாந்து அணி பெற்றுள்ளது. ஆனால், இத்தொடரில் நியூசிலாந்து அணி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்துவதற்கு, நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களே காரணமாக அமைந்திருந்த நிலையில், இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களை அவர்கள் தடுமாறச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .