2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பெண்கள் உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

Editorial   / 2017 ஜூலை 19 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்கள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற்றுள்ளது.  

பிறிஸ்டலில், நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்காவை வென்றே, இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற்றது.  

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவி டனி வான் நிக்கெரெக், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.  

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மிக்னொன் டு பிறிஸ் ஆட்டமிழக்காமல் 76 (95), லாரா வொல்வார்ட் 66 (100) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஆன்யா ஷேர்ஷோபிள், அணித்தலைவி ஹீதர் நைட், ஜெனி குன், நட்டாலி ஷிவர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  

பதிலுக்கு, 219 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 49.4 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து, 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சாரா டெய்லர், ஹீதர் நைட்டின் துடுப்பாட்டத்தால், இலகுவாக வெற்றிபெறும் நிலையில் இருந்தபோதும், குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 5 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் என்றவாறு காணப்பட்டது. ஆனால், நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருப்பதன் காரணமாக, இறுதி ஓவரில் வெற்றியிலக்கை அடைந்தது.  

துடுப்பாட்டத்தில், சாரா டெய்லர் 54 (76), ஃபிரன்ட் வில்சன் 30 (38), ஹீதர் நைட் 30 (56), ஜெனி குன் ஆட்டமிழக்காமல் 27 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அயபொங்கா கஹா, சுனே லுஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மரிஸன்னே கப், மொசெலின் டானியல்ஸ், ஷப்னிம் இஸ்மயில் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  

போட்டியின் நாயகியாக, சாரா டெய்லர் தெரிவானார்.  

இந்நிலையில், அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி, டேர்பியில், இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .