2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆட்ட நிர்ணய விவகாரத்திற்கு சல்மான் பட்தான் காரணம் : அமீர்

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களில் ஒருவரான மொஹமட் அமீர், தான் அப்பாவி எனவும் டெஸ்ட் அணித்தலைவர் சல்மான் பட்டின் அறிவுறுத்தல்களையே தான் பின்பற்றியதாகவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்துடனான 4 ஆவது டெஸ்ட் போட்டியின்போது ஸ்பொட் பிக்ஸிங் எனப்படும் போட்டி நிலைமைகளை நிர்ணயிக்கும் சதியில் ஈடுபட்டதாக சல்மான் பட், மொஹமட் அமீர்,  மொஹமட் ஆசிவ் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பல நாட்கள் மௌனம் காத்த மொஹமட் அமீர், தற்போது இவ்விவகாரத்திற்கு  டெஸ்ட் அணித்தலைவர் சல்மான் பட்தான் காரணம் என  அணி நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அணியின் முகாமையாளர் யாவர் சயீட், ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் சஹீட் அவ்ரிடி ஆகியோரிடம் இது குறித்து அமீர் பேசியதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட சூதாட்ட முகவரான மஹார் மஜீத் தனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் அல்லர் எனவும் அவரை சல்மான் பட்தான் அறிமுகம் செய்து வைத்தார் எனவும் யாவர் சஹீட் மற்றும் அவ்ரிடியிடம் அமீர் கூறியதாக பாகிஸ்தான் அணி வட்டாரங்களை மேற்கோள் காட்டி அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

மொஹமட் அமீர், சல்மான் பட், மொஹமட் ஆசிவ் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் சபை போட்டிகளில் பங்குபற்ற தற்காலிக தடை விதித்தது.

உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் மொஹமட் அமீர் 18 வயதானவர். போதிய கல்வியறிவற்ற இளம் வீரரான அமீருக்கு கருணை காட்டி, அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டுமென பல தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் ஆத்தர்டன், மேற்கிந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கல் ஹோல்டிங், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள்  வீரர் ஜெவ் லோசன், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா ஆகியோரும் இத்தகைய கோரிக்கையை விடுத்தவர்களில் அடங்குவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .