2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சர்வதேசக் கிரிக்கெட் சபையை அவமானத்திலிருந்து காப்பாற்றிய இலங்கை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த உலக டுவென்டி டுவென்டி தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் வழமையான தலைவர் மஹேல ஜெயவர்தனவிற்குப் பதிலாக குமார் சங்கக்கார அணித்தலைவராகச் செயற்பட்டிருந்த நிலையில், அரையிறுதிப் போட்டியில் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கோரிக்கையின் பேரிலேயே மஹேல ஜெயவர்தன அணித் தலைவராகக் கடமையாற்றியதாக தெரியவருகிறது.

சகோதர இணையத்தளமான "டெய்லி மிரருக்கு" கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் சர்வதேசக் கிரிக்கெட் சபை இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் கோரிக்கை விடுத்ததன் காரணமாகவே அரையிறுதிப் போட்டியில் மஹேல ஜெயவர்தன அணித்தலைவராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரையிறுதிப் போட்டியிலும் குமார் சங்கக்காரவே அணித்தலைவராகச் செயற்பட முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இலங்கை அணி இங்கிலாந்திற்கெதிரான போட்டியில் குமார் சங்கக்காரவை அணித்தலைவராகச் செயற்படுத்தியதால் சர்வதேசக் கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கருத்திற் கொண்டு அரையிறுதிப் போட்டியில் மஹேல ஜெயவர்தனவை அணித்தலைவராகச் செயற்படுமாறு சர்வதேசக் கிரிக்கெட் சபை கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

இலங்கை அணி மைதானத்தில் குறித்த ஓவர்களை குறித்த நேரத்திற்குள் வீசுவதற்கு முயன்றாலே போதுமானது எனவும், முன்னைய போட்டிகள் போன்று அதிகக் கடுமையான நடைமுறை பின்பற்றப்பட்டு அணித்தலைவருக்கும், வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படாது எனவும் சர்வதேசக் கிரிக்கெட் சபை உறுதியளித்திருந்ததாகத் தெரிகிறது.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சுப்பர் 8 போட்டியில் இலங்கை அணியின் வழக்கமான தலைவராக மஹேல ஜெயவர்தனவிற்குப் பதிலாக குமார் சங்கக்கார உத்தியோகபூர்வ அறிவிக்கப்பட்டிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான சுப்பர் 8 போட்டியில் இலங்கை அணி குறித்த நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்பதால் மஹேல ஜெயவர்தனவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்திற்கெதிரான போட்டியிலும் இலங்கை அணி குறித்த நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காதுவிடின் போட்டித்தடை விதிக்கப்படும் என்பதாலேயே குமார் சங்கக்கார அணித்தலைவராகச் செயற்பட்டிருந்தார்.

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் விதிகளின் படி அணியொன்று ஒரே தலைவரின் கீழ் 12 மாதங்களுக்குள் இரண்டு தடவைகள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசியிருக்காவிடில் அடுத்த போட்டியில் அணித்தலைவர் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .