2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்தை வென்றது தென்னாபிரிக்கா

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 3ஆவதும், இறுதியுமான டுவென்டி டுவென்டி போட்டியை தென்னாபிரிக்க அணி வெற்றிகொண்டுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

போர்ட் எலிசபத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டாக அணித்தலைவரை 2 ஓட்டங்களுக்கும், 2ஆவது விக்கெட்டை 26 ஓட்டங்களுக்கும் இழந்த தென்னாபிரிக்க அணி, அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஹென்றி டேவிட்ஸ் 51 பந்துகளில் 68 ஓட்டங்களையும், ஜஸ்டின் ஒன்ரொங் 30 பந்துகளில் 48 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 15 பந்துகளில் 28 ஓட்டங்களையும், பர்ஹான் பெஹர்டியன் 11 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மிற்சல் மக்லநகன் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், டக் பிரேஸ்வெல் 3 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ரொனி ஹீரா, ஜேம்ஸ் ஃபிராங்ளின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

6 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட்டை இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 53 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுக்களை இழந்து ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. அதிலிருந்து அவ்வணியால் மீள முடிந்திருக்கவில்லை.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக பிரென்டன் மக்கலம் 22 பந்துகளில் 25 ஓட்டங்களையும், மார்ட்டின் கப்ரில் 20 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக றயன் மக்லரன், ஆரோன் ஃபங்கிசோ இருவரும் தலா 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு தலா 3 விக்கெட்டுக்களையும், ரொபின் பீற்றர்சன், ரோறி கிளெய்ன்வெல்ட்ற் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக தென்னாபிரிக்காவின் ஹென்றி டேவிட்ஸ் தெரிவானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .