2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அயர்லாந்தின் முதலாவது டெஸ்ட் இன்று

Editorial   / 2018 மே 11 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் அயர்லாந்து இன்று விளையாடவுள்ளது. டப்ளினில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதன் மூலமே வரலாற்றில் முதற்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் அயர்லாந்து விளையாடவுள்ளது.

அந்தவகையில், ஆப்கானிஸ்தானுடன் சேர்த்து கடந்தாண்டு ஜூனில், சர்வதேச கிரிக்கெட் சபையால் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே, பங்களாதேஷ் 2000ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதன் பின்னர் முதலாவது அணியாக டெஸ்ட் அறிமுகத்தை அயர்லாந்து மேற்கொள்கிறது.

இப்போட்டியில் விளையாடவுள்ள அயர்லாந்துக் குழாமில், இங்கிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய பொய்ட் றாங்கின் இடம்பெற்றிருப்பது அவ்வணிக்கு பலத்தை வழங்குவதுடன் எட் ஜோய்ஸ், நைஜல் ஓ பிரயன், டிம் முர்டாக், கெவின் ஓ பிரயன், அணித்தலைவர் வில்லியம் போர்ட்பீல்ட், போல் ஸ்டேர்லிங், அன்டி போல்பிரயன் போன்ற சிரேஷ்ட வீரர்களும் அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, தமது சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் அயர்லாந்துக்கு மேலும் சற்று சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ள பாகிஸ்தான் குழாம் பெரும்பாலும் இளம் வீரர்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. அதுவும் தொடர்ச்சியாக உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களைப் பெற்று வருகின்ற பவட் அலாமை விட்டு துடுப்பாட்ட வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர்.

பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட இமாம்-உல்-ஹக் இப்போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து, பாகிஸ்தானின் முதன்மை சுழற்பந்துவீச்சாளர் யசீர் ஷா காயமடைந்துள்ள நிலையில், அவரைக் குழாமில் பிரதியீடு செய்துள்ள ஷடாப் கான் பயிற்சிப் போட்டிகளில் பிரகாசித்தபோதும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமைகளில் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாகவேயுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .