2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், சிட்னியில் இலங்கை நேரப்படி நாளை காலை 7.50 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் சமநிலையானதுடன், டெஸ்ட் தொடரை தமது மண்ணில் வைத்து முதற்தடவையாக இந்தியாவிடம் இழந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைக் கைப்பற்றி பழிதீர்க்கும் நோக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கும்.

இவ்வாண்டு உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில், அதில் விளையாடவுள்ள இந்திய அணி ஏறத்தாழ உறுதிப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகின்ற நிலையில், மறுபக்கமாக அவுஸ்திரேலிய அணி தமது அணி யாரென்பது தொடர்பில் தெளிவற்றுக் காணப்படுகிறது.

அதுவே இத்தொடருக்கான அணித்தெரிவில் பிரதிபலித்திருந்தது. உஸ்மான் கவாஜா, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், நேதன் லையன் ஆகியோர் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டது யதார்த்தமாய் இருந்தாலும் 34 வயதான பீற்றர் சிடில் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டமை விமர்ச்சிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் சிடிலின் பெறுபேறுகளே அவரைக் குழாமுக்கு அழைத்து வந்திருந்தன.

அந்தவகையில், டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் மீள்வருகையை மிகவும் எதிர்பார்த்தவாறு அவுஸ்திரேலிய அணி காணப்படுகின்ற நிலையில், அவர்கள் மீளத்திரும்போதும் அணியில் தமதிடங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஷோண் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் இத்தொடரில் ஓட்டங்களைப் பெறுவது கட்டாயமாகிறது.

இவர்களுடன் உபாதைக்குள்ளான மிற்செல் மார்ஷுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ள அஸ்தன் தேணர் அணியில் தேர்வானால், இத்தொடரில் சிறப்பாகச் செயற்படுவதிலேயே அவுஸ்திரேலிய அணியின் வெற்றி தங்கியிருக்கிறது.

இதுதவிர, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெரும்பாலான அணிகள் தற்போது இரண்டு பிரதான சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துகின்ற நிலையில், டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கும் நேதன் லையன், இத்தொடரில் தன்னை நிரூபிப்பதன் மூலமே உலகக் கிண்ண அணியில் தன்னை இடம்பெறச் செய்ய முடியும்.

இதேவேளை, பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் ஸ்டார்க் ஆகிய அவுஸ்திரேலிய அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், உலகக் கிண்ண குழாமில் தமதிடங்களை உறுதிசெய்வதற்கு ஜேசன் பெஹர்ரோவ், ஜஹை றிச்சர்ட்சன், பீற்றர் சிடில் ஆகியோருக்கிடையே போட்டி நிலவும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஏறத்தாழ அதன் அணி உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கின்றபோதும் உலகக் கிண்ண குழாமில் மேலதிகமாக யாரைச் சேர்ப்பது என்ற கேள்விக்குறி காணப்படுகிறது. மேலதிக துடுப்பாட்டவீரர்களின் இடத்துக்கு தினேஷ் கார்த்திக், றிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டி ஆகியோரிடையே போட்டி நிலவுகின்றது.

அந்தவகையில், இத்தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல் ஆகியோரில், இத்தொடரில் அணியில் இடம்கிடைத்தால் கார்த்திக் தனது உலகக் கிண்ண இடத்தை உறுதிசெய்யலாம் என்பதோடு, மறுபக்கத்தில் தொடர்ந்து சொதப்பி வரும் லோகேஷ் ராகுல் வாய்ப்புக் கிடைத்தும் பிரகாசிக்கா விட்டால் அண்மைய காலங்களில் அவருக்கான இறுதி வாய்ப்பாக இது இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .