2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காலிறுதியில் பார்சிலோனா, பயேர்ண் மியூனிச்

Editorial   / 2020 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவும், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சும் தகுதிபெற்றுள்ளன.

இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 4-2 என்ற மொத்த கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியை வீழ்த்தி பார்சிலோனாவும், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியை 7-1 என்ற மொத்த கோல் கணக்கில் வீழ்த்தி பயேர்ண் மியூனிச்சும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன.

நாப்போலியின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்திருந்த பார்சிலோனா, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாக கிளமென்ட் லெங்லெட், லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நாப்போலி சார்பாகப் பெற்ற கோலை லொரென்ஸோ இன்சீனியா பெற்றிருந்தார்.

இதேவேளை, செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த பயேர்ண் மியூனிச், தமது மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி இரண்டு கோல்களையும், இவான் பெரிசிச், கொரென்டின் டொலிஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை தம்மி ஏப்ரஹாம் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .